உலகில் முதன்முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மரணம்
மரணம்
உலகில் முதன்முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த அமெரிக்க டாக்டர் ஜோசப் இ முர்ரே நேற்று காலமானார். அவருக்கு வயது 93.
அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் மில்போர்ட் நகரில் பிறந்தவர் ஜோசப் இ முர்ரே. டாக்டர் படிப்பு முடித்த பிறகு பிளாஸ்டிக் சர்ஜனாக பணி தொடங்கி புகழ்பெற்றார். பிறகு, பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். கடந்த 1954ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, இரட்டையர்களுக்கு முதன் முதலாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத் தார். ரிச்சர்ட் ஹெரிக் என்ற 23 வயது வாலிபரின் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்து அபாய கட்டத்தில் இருந்தார்.
இவருடைய சகோதரர் ரொனால்ட் ஹெரிக்கின் சிறுநீரகத்தை எடுத்து ரிச்சர்டுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து வெற்றி பெற்றார். மரபு வழியாக இருவரும் இரட்டையர்கள் என்பதால் அப்போது பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, நர்ஸ் ஒருவரை ரிச்சர்ட் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு ரிச்சர்ட் 8 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1954ம் ஆண்டு சாதனைக்கு பிறகு பல அறுவை சிகிச்சைகளை டாக்டர் ஜோசப் செய்தார். சிறுநீரகம் மட்டுமன்றி, எலும்பு மஜ்ஜை உள்பட பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்தார்.
இவர் அறுவை சிகிச்சை செய்த பிறகு நோயாளி ஒருவர் 29 ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
கடந்த 1990ம் ஆண்டு நோபல் பரிசும் பெற்றார். எனினும், மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கூடாது. கடவுளிடம் விளையாட வேண்டாம் என்று மதத் தலைவர்கள் உள்பட பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், இவருடைய மருத்துவ சாதனை இன்றளவும் பின்பற்றப்படுகிறது. பாஸ்டன் புறநகர் பகுதியில் வசித்து வந்த டாக்டர் ஜோசப், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல், மருத்துவமனையில் நேற்று காலமானார்.
Post a Comment