'கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் விவகாரம்' - கல்விச் சமூகம் கவலை
(எம்..எம்.ஏ.ஸமட்)
காலவிரயத்தை ஏற்படுத்தாது தகைமையும் திறமையும் அனுபவமுமிக்கவரை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக நியமிக்க உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமென ஆசிரிய தொழில்சங்கங்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அதிபர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள இழுபறி தொடர்பில் இலங்கை இஸ்லாமிய ஆசிரிய சங்கத் தலைவர் எம்.அனஸ் குறிப்பிட்டதாவது,
கல்முனை பிரதேசத்தின் புகழ்பூத்த பாடசாலையாக விளங்கும் மஹ்மூத் மகளிர் கல்லூரி அண்மைக்காலமாக கல்லூரின் பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் சில பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஆசிரியர் தொழில்சங்கம் என்ற வகையில் அறியக் கூடியதாகவுள்ளது.
இப்பிரச்சினைகள் இக்கல்லூரின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஒரு பாடசாலையின் வளர்ச்சி அதிபரிலும் ஆசிரியர் குழாமிலுமே தங்கியுள்ளது. பாடசாலையின் முகாமைத்துவக் கட்டமைப்பை திறன்பட இயங்கச் செய்வதற்கு அதிபரின் ஆற்றலும் திறமையும் அனுபவமும் இன்றியமையாதது. அந்தவகையில் கல்முனைப் பிரதேசத்தின் மகளிர் கல்விக்காக உருவாக்கப்பட்ட இக்கல்லூரி அண்மைக்காலமா எதிர் நோக்கி வரும் பிரச்சினைகள் அதிபர் நியமனத்துடன் தொடர்புபட்டவையாகவுள்ளதாக அறியமுடிகிறது என்றார்.
பாடசாலையின் முகாமைத்துவத்தை கட்டியெழுப்பி பாசாலையை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு பாடசாலைச் சமூகத்தின் ஒற்றுமை மிகப் பிரதானமானது. அவ்வாறானதொரு நிலை காணப்படாதவிடத்து மாணவர்களின் அடைவு மட்டங்களில் வீழ்ச்சி ஏற்படுவதுடன் அப்பாடசாலையின் கல்விதரப் பண்பும் பாதிப்புக்குள்ளாகும். இவ்வாறனதொரு நிலைமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஏற்படாதிருக்க தகைமையும் திறமையும் அனுபவமுமிக்கவரை அதிபராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் அனஸ் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.பி. கமால்டீன் இவ்விடயம் பற்றித் தெரவித்ததாவது. கல்முனைப் பிராந்தியத்தில் முஸ்லிம் மகளிர்களுக்கென உருவாக்கப்பட்ட முதலாவது கல்லூரியாக விளங்குவது மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆகும். இக்கல்லூரி பல திறமைமிக்க மகளிர்களை கல்முனைப் பிராந்தியத்தில் உருவாக்கியுள்ளது.
இருப்பினும தற்போது இப்பாடசாலையில் எழுந்துள்ள அதிபர் நியமனம் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு நீதி மன்றத் தீர்ப்புக்கமைய இப்பாடசாலைக்கான புதிய அதிபராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நேர்முகப் பரீட்சை இடம்பெற்று கடந்த 15ஆம் திகதி முதல் அமுலுக்ககு வரும் வகையில் தற்போது காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபராகக் கடமை புரியும் யூ.எல்.ஏ முபாறக் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இருந்தபோதிலும். கல்லூரியின் கடமைப் பொறுப்பை ஏற்குமாறு கல்முனைப் பிரதேசக் கல்விச் சமூகத்திடமிருந்து தனக்கு அழைப்பு வரவில்லையெனவும் அதனால் புதிய நியமனத்தை மறுபரீசிலனை செய்யவுள்ளதாகவும் யூ.எல்.ஏ. முபாறாக் இணையத்தளமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ளவர் கடமைகளைப் பொறுப்பேற்காதவிடத்து நேர்முகப் பரீட்சையில் அவருக்கு அடுத்தபடியாக தகைமையில் உள்ளவரை நியமிக்க பொதுச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு நேர்முகப் பரீட்சையை நடாத்தி காலவிரையத்தை ஏற்படுத்துவது அப்பாடசாலையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை மேலும் சிக்கல்களுக்குள்ளாக்கும் என எமது தொழிற் சங்கம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.பி. கமால்டீன் பாடசாலையினதும் மாணவ சமூகத்தினதும் நலன் கருதி அதிபர் பிரச்சினைக்கு உடன் தீர்வைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமென கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்
Post a Comment