நிகழவேண்டிய அந்நிகழ்ச்சி நிகழ்ந்து விடும்போது...!
இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயமும் உள்ளத்தை ஊடுருவி நேர்வழியின்பால் புரட்டிப்போடக்கூடியவை. இதனை மற்றவர்களுக்கும் எத்திவைய்யுங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவான்.
56:1 நிகழவேண்டிய அந்நிகழ்ச்சி நிகழ்ந்து விடும்போது,
56:2 அது நிகழ்வதைப் பொய்யெனக் கூறுபவர் எவரும் இருக்கமாட்டார்.
56:3 அது தலைகீழாகப் புரட்டக்கூடிய ஆபத்தாயிருக்கும்.
56:4 அந்நேரம் பூமி ஒரே உலுக்காக உலுக்கப்படும்.
56:5 மேலும், மலைகள் பொடிப் பொடியாக்கப்பட்டு;
56:6 பரத்தப்பட்ட புழுதியாகிவிடும்!
56:7 அப்போது நீங்கள் மூன்று குழுவினராய்ப் பிரிந்துவிடுவீர்கள்.
56:8 வலப்பக்கத்தார்! வலப்பக்கத்தாருடைய (நற்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது!
56:9 மேலும், இடப்பக்கத்தார்! இடப்பக்கத்தாருடைய (துர்ப்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது!
56:10 மேலும், முந்தியவர்கள் முந்தியவர்களே!
56:11 அவர்கள்தாம் நெருக்கமானவர்கள்.
56:12 அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில் இருப்பார்கள்.
56:13 முன்னோரில் நிறையப் பேரும்
56:14 பின்னோரில் ஒரு சிலரும் இருப்பார்கள்.
56:15 தங்க இழைகளால் நெய்யப்பட்ட இருக்கைகளில்
56:16 எதிரெதிரே சாய்ந்திருப்பார்கள்.
56:17 அவர்களின் அவைகளில் நிரந்தரச் சிறுவர்கள்
56:18 மது ஓடுகின்ற ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும், பளிங்குக் கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.
56:19 அவற்றை அருந்துவதால் அவர்களுக்குத் தலைச்சுற்றல் ஏற்படாது; அவர்களின் அறிவு பேதலிக்கவும் செய்யாது.
56:20 அவர்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக அச்சிறுவர்கள் அவர்களுக்கு விதவிதமான, சுவையான கனிகளைப் பரிமாறுவார்கள்;
56:21 மேலும், அவர்கள் விரும்புகின்ற பறவை இறைச்சியையும் உண்பதற்காக அளிப்பார்கள்.
56:22 மேலும், அழகிய கண்களை உடைய 'ஹூர்' எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்;
56:23 அவர்கள் மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போன்று அழகாய் இருப்பார்கள்.
56:24 இவை அனைத்தும் உலகில் அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும்.
56:25 அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள்.
56:26 எது பேசப்பட்டாலும் சரியாகவே பேசப்படும்.
56:27 மேலும், வலப்பக்கத்தார்; வலப்பக்கத்தார் (உடைய நற்பாக்கியம்) பற்றி என்னவென்றுரைப்பது?
56:28 அவர்கள் முள்ளில்லாத இலந்தை மரங்கள்,
56:29 மேலும் அடுக்கடுக்காய் குலைகள் கொண்ட வாழைகள்;
56:30 பரந்து விரிந்திருக்கும் நிழல்,
56:31 எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நீர்,
56:32 என்றைக்கும் தீர்ந்துவிடாத
56:33 தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள்;
56:34 மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள்.
56:35 அவர்களின் மனைவியரை நாம் தனிச்சிறப்புடன் புது அமைப்பில் படைப்போம்.
56:36 மேலும், அவர்களைக் கன்னிகளாகவும்,
56:37 தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சமவயதுடையவர்களாகவும் ஆக்குவோம்.
56:38 இவை அனைத்தும் வலப்பக்கத்தாருக்கு உரியவை.
56:39 அத்தகையவர்கள், முன்னோர்களில் நிறையப் பேரும்,
56:40 பின்னோர்களில் நிறையப் பேருமாய் இருப்பார்கள்.
56:41 மேலும், இடப்பக்கத்தார்; இடப்பக்கத்தார் (உடைய துர்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது?
56:42 அனற்காற்றிலும், கொதிக்கும் நீரிலும்,
56:43 கரும்புகைகளின் நிழலிலும் கிடப்பார்கள்.
56:44 அது குளிர்ச்சியாகவும் இராது; சுகமாகவும் இராது.
56:45 இவர்கள் எப்படிப்பட்ட மக்களெனில் இந்த கதியை அடைவதற்கு முன்பு சுகபோகத்தில் மூழ்கியிருந்தார்கள்;
56:46 மேலும், பெரும் பாவங்கள் புரிவதில் பிடிவாதமாக இருந்தார்கள்.
56:47 "நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும், எலும்புக்கூடாகிப்போனாலும் மீண்டும் எழுப்பப்படுவோமா, என்ன?
56:48 முன்பு வாழ்ந்துசென்ற எங்களுடைய மூதாதையர்களும் எழுப்பப்படுவார்களா, என்ன?" என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
56:49 (நபியே!) இவர்களிடம் கூறும்: "முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரும்
56:50 திண்ணமாக ஒன்றுகூட்டப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள், நேரம் குறிக்கப்பட்ட ஒரு நாளில்!
56:51 பின்னர், வழி கெட்டவர்களே! பொய் என்று தூற்றியவர்களே!
56:52 நீங்கள் ஸக்கூம் மரத்தினுடையதையே உண்ணப் போகின்றீர்கள்!
56:53 நீங்கள் அதைக்கொண்டே வயிற்றை நிரப்புவீர்கள்.
56:54 அதற்கு மேல் கொதிக்கும் நீரைக் குடிப்பீர்கள்,
56:55 அடங்கா தாகம் கொண்ட ஒட்டகத்தைப் போன்று!
56:56 இதுதான் (இந்த இடப்பக்கத்தார்க்குரிய) விருந்து உபசாரப் பொருட்களாகும், கூலி கொடுக்கும் நாளில்!
56:57 நாமே உங்களைப் படைத்தோம். பிறகு ஏன் நீங்கள் உண்மை என ஏற்றுக்கொள்வதில்லை?
56:58 நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?
56:59 இதனைக் கொண்டு குழந்தையை நீங்கள் உருவாக்குகின்றீர்களா; அல்லது அதனை உருவாக்குவது நாமா?
56:60 நாமே மரணத்தை உங்களிடையே விதித்திருக்கின்றோம்.
56:61 மேலும், உங்களின் வடிவங்களை மாற்றுவதற்கும் நீங்கள் அறியாத வடிவங்களில் உங்களைப் படைப்பதற்கும் நாம் இயலாதவரல்லர்.
56:62 உங்களின் முதல் பிறப்பைப் பற்றி நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். பிறகு, ஏன் நீங்கள் படிப்பினை பெறுவதில்லை?
56:63 நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?
56:64 இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா?
56:65 நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். அப்போது நீங்கள் பலவாறு புலம்பிக்கொண்டிருப்பீர்கள்;
56:66 அனைத்தும் தண்டமாகிவிட்டதே;
56:67 நாம் பெரும் துர்ப்பாக்கியவான்களாய் ஆகிவிட்டோமே என்று!
56:68 நீங்கள் பருகும் இந்த நீரை நீங்கள் எப்போதாவது கண்திறந்து பார்த்திருக்கின்றீர்களா?
56:69 மேகத்திலிருந்து இதனை நீங்கள் பொழியச் செய்தீர்களா? அல்லது அதனைப் பொழியச் செய்தது நாமா?
56:70 நாம் நாடினால் இதனை உவர்ப்பு நீராக்கிவிட்டிருப்போம். அப்படியிருக்க நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை?
56:71 நீங்கள் எரிக்கின்ற இந்தத் தீயைப் பற்றி எப்போதாவது நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா?
56:72 அதன் மரத்தை நீங்கள் படைத்திருக்கின்றீர்களா? அல்லது அதனைப் படைத்தவர் நாமா?
56:73 நாம் இதனை நினைவூட்டும் சாதனமாகவும் தேவையுடையோருக்கு வாழ்க்கைச் சாதனமாகவும் அமைத்துள்ளோம்.
56:74 எனவே (நபியே!) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
56:75 இல்லை, நட்சத்திரங்களின் அமைநிலைகள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
56:76 நீங்கள் உணர்வீர்களேயானால், திண்ணமாக இது ஒரு மகத்தான சத்தியம்தான்!
56:77 இது ஓர் உன்னதமான குர்ஆன்.
56:78 இது பாதுகாப்பானதொரு நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
56:79 தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இதனைத் தொடமுடியாது.
56:80 இது அகிலத்தின் அதிபதியினால் இறக்கியருளப்பட்டதாகும்.
56:81 பிறகு என்ன, இந்த வசனத்தையா நீங்கள் அலட்சியப்படுத்துகின்றீர்கள்?
56:82 மேலும், இதனைப் பொய்யென்று தூற்றுவதுதான் இந்த அருட்கொடையில் உங்களுக்குரிய பங்கா?
56:83 இறந்து போகின்ற ஒருவரின் உயிர் தொண்டைவரை வந்து அவர் இறந்து கொண்டிருக்கும்போது;
56:84 உங்கள் கண்களாலேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
56:85 அப்போது உங்களைக் காட்டிலும் நாம் அவருக்கு மிக அண்மையில் இருக்கின்றோம். ஆனால், அது உங்களுக்குத் தென்படுவதில்லை.
56:86 நீங்கள் யாராலும் கட்டுப்படுத்தப்படாதவர்களாய் இருந்தால்
56:87 உங்களுடைய இந்தக் கருத்தில் நீங்கள் வாய்மையானவர்களாய் இருந்தால் அந்நேரத்தில் வெளியேறிக் கொண்டிருக்கும் அவருடைய உயிரை நீங்கள் ஏன் திரும்பக் கொண்டு வருவதில்லை?
56:88 பின்னர், இறக்கின்ற அந்த மனிதர் நெருக்கமானவர்களுள் ஒருவராய் இருந்தால்
56:89 அவருக்கு சுகமும், உயர்தரமான உணவும், அருட்கொடைகள் நிறைந்த சுவனமும் இருக்கின்றன.
56:90 மேலும், அவர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருந்தால்,
56:91 "சாந்தி உண்டாகட்டும், உம்மீது! நீர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருக்கின்றீர்!" என்று கூறி வரவேற்கப்படுவார்.
56:92 மேலும், அவர் பொய் எனத் தூற்றியவர்களில் ஒருவராகவும், வழிகேடர்களில் ஒருவராகவும் இருந்தால்,
56:93 கொதிக்கும் நீரும்,
56:94 நரகத்தில் வீசப்படுவதும்தாம் அவருக்குரிய 'உபசாரம்' ஆகும்!
56:95 திண்ணமாக, இவை அனைத்தும் திட்டவட்டமான உண்மைகளாகும்.
56:96 எனவே (நபியே!) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
(அத்தியாயம் 56. அல்வாகிஆ, வசனம் 1-96 )
Post a Comment