Header Ads



கருமலையூற்று பள்ளிவாசலும், கிழக்கு மாகாண சபையின் தீர்மானமும்



(மூதூர் முறாசில்)

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருக்கும் ஒரு கிராமமே கருமலையூற்று கிராமமாகும். இக்கிராம மக்கள் நீண்ட காலமாக சில பிரச்சினைகளை சுமையாக சுமந்து கொண்டு நிற்கின்றனர். இப்போது அம்மக்களது சுமையில் கிழக்கு மாகாண சபை ஏகமனதாக எடுத்த தீர்மானத்தின் மூலம் பாரிய பங்கெடுத்துள்ளது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிவாசலையும் கிராம மக்களது சொந்தக் காணிகளையும் மீளப்பெறுதலும் அம்மக்களது வாழ்வாதாரமான  மீன்பிடித் தொழிலில் இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தலுமே இக்கிராமத்திலுள்ள முக்கிய பிரச்சினைகளாகும். 

கருமலையூற்று  கிராம மக்களது இப்பிரச்சினை சம்பந்தமாக முன்னாள் அமைச்சரும்  கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அமீர் அலியினால் கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு 2012.11.06ஆம் திகதியன்று இடம்பெற்ற போது தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

மாகாண சபை உறுப்பினரின் இப்பிரேரணை  கிராம மக்கள் எதிர் நோக்கிவரும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாக அமைந்திருந்தது. இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முதலமைச்சரும் காணி அமைச்சரும் தலையிடவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டதும் கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாக கருத்துத் தெரிவித்தது  ஒரு முக்கியமான அம்சமாகும்.அன்றைய அமர்வில் நீண்ட நேரமெடுத்து விவாதிக்கப்பட்ட இப்பிரேரணை சம்பந்தமாக பிரேரணையில் கோரப்பட்டவாறு, முதலமைச்சரும் காணி அமைச்சரும் மேலதிகமாக தவிசாளரும் இணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்ததும்   மற்றுமொரு முக்கிய விடயமாகும்.

இவ்விடயங்களை கவனத்திற் கொண்டு பார்க்கின்ற போது கிழக்கு மாகாண சபையில் மக்களது இருப்பு மற்றும் உரிமை சம்பந்தமான நல்லதோர் ஒளிக்கீற்று பிரகாசித்துள்ளதாக எண்ணத் தோன்றுகின்றது. இப்பிரகாசமானது   கிழக்கு மாகாண சபையில் வெறும் பொம்மையாட்சியே நடக்கிறது என்னும் வலுவான விமர்சனத்திற்கு எதிரானதாகவே தெரிகின்றது !

இந்த கிழக்கு மாகாண சபையைப் பொருத்தமட்டில் அதன் முதலாவது அமர்வைத் தொடர்ந்து மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக    சமர்ப்பிக்கப்பட்ட 'திவிநெக்கும' சட்டமூலத்திற்கு அவசர அவசரமாக அங்கீகாரத்தை வழங்கி, மத்திய அரசிற்கு அதீத விசுவாசத்தை நிரூபித்துக் காட்டிய நிலையில்  ஆளும் தரப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்த தனிநபர் பிரேரணைக்கு ஏக மனதாக தீர்மானம் எட்டப்பட்டிருப்பதென்பது மத்திய அரசாங்கத்திற்கு நல்லதோர் செய்தியை சொல்வதாகவும் அமைந்துள்ளது.

குறித்த பிரேரணையில் 'இராணுவத்தினால் ...' எனக்குறிப்பிடப்படும் சொற்பதத்தை சரியாக சொல்லப் போனால் 'அரசாங்கத்தினால் ...'என்றே கூறவேண்டும். ஏனெனில், இராணுவத்தைக் குறைகூறுவதில் பலனில்லை. அரசாங்கம் இடும் கட்டளையையே இராணுவம் செய்கிறது. 

எனவே, கருமலையூற்றுப் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தினரிடம் நேரடியாகப் பேசுவதன் மூலம் பள்ளிவாசலை மீட்கவோ, பொது மக்களின் காணிகளை மீள அவர்களிடம் கையளிக்கச் செய்யவோ  முடியாது. ஆதலினால், மாகாண சபையில் தீர்மானிக்க ப்பட்டதுபோல் இராணுவ அதிகாரிகளோடு மட்டும் பேசுவதன் மூலம் ஆகப்போவது எதுவுமில்லை.

இராணுவத்தின் மாவட்டத் தளபதிகளோடோ அல்லது மாகாண தளபதிகளோடோ பேசும் போது அவர்கள் மேலிடத்திலிருந்து  உத்தரவு கிடைத்தாலே அல்லாமல்  அவற்றை செய்ய முடியாது என்றே கூறுவர்.(சில வேளை அந்த மேலிடத்தை காட்டிக் கொடுக்காதும் விடலாம்.) இதற்கு முன்பும் இவ்விடயம் சம்பந்தமாக பேசியவர்களிடம் அவர்கள் அவ்வாறே கூறியுள்ளனர்.

எனவே,கிழக்கு மாகாண சபையானது அந்த 'மேலிடத்தை' முறையாக அணுகி மக்களது பிரச்சினையை சரியாகத் தெரிவிப்பதன் மூலம் அந்த மேலிடத்தில்  காரியத்தை சாதிக்க முடியும். 

கருமலையூற்றுப் பிரச்சினை சம்பந்தமாக ஏலவே சில சிவில் அமைப்புக்கள்  அந்த மேலிடத்திடம் சென்று பேசிய போது 'அப்படியா? அது சம்பந்தமாக  இது வரை எனக்கு எதுவும் தெரியாதே! சரி நான் பார்க்கின்றேன்.' என்ற 'நல்ல செய்தி'யையே பேசச் சென்ற ஒவ்வொரு அமைப்பிடமும் புதிது புதிதாகக் கூறியுள்ளது.

இவ்வாறு ஒரு செய்தியை மாத்திரம் கேட்பதற்காக கிழக்கு மாகாண சபை அந்த மேலிடத்தை சந்திப்பது தேவையற்றதாகும். அதேவேளை   அந்த மேலிடம் சிவில் அமைப்புக்களுக்கு கூறிய பதிலை ஒரு மாகாணத்தின் அதிகார தரப்பினருக்கு கூறமுடியாத பொறுப்புணர்வும் கடப்பாடும் இருப்பதனாலும் உரிய விடயத்தில் கவனம் செலுத்தவேண்டிய நிர்பந்தமொன்று ஏற்படவே செய்யும்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குறித்த  இவ்விடயத்தில்  கருத்தொருமித்ததோடு  நின்றுவிடாது அது செயலுருப் பெற்று கருமலையூற்று மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை கருமமாற்றுவது காலத்தின் தேவையாகும்.   

இம்மக்களது பிரச்சினைக்குத் தீர்வு கிட்டுகின்றபோது கிழக்கு மாகாணமெங்கும் பரவிக்கிடக்கின்ற இதையொத்த பிச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு வழியொன்று ஏற்படவே செய்யும். 

ஒரு உதாரணத்திற்கு  கூறுவதானால்: 2006ஆண்டில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இற்றைவரை இடைத்தங்கள் முகாம்களில் பெரும் துயரத்தில் வாழும் சம்பூர் மக்களை அவர்களது சொந்த வாழிடங்களில் அல்லது அதையொத்த வாழிடங்களில் குடியமர்த்தவேண்டிய பாரிய பொறுப்பொன்றும் உள்ளது. இம்மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கு முகமாக பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கும் அப்பிரேரணையை மாகாண சபை அங்கீகரிப்பதற்கும் அதன்வூடாக மத்திய அரசிற்கு அழுத்தத்தைக் கொடுப்பதற்கும் அதன் மூலம் அம்மக்களுக்கு புதிய வாழ்வொன்றை சமைப்பதற்கும் வழியேற்படும்.  

எது எவ்வாறிருந்த போதும் கருமலையூற்று கிராம மக்களது பிரச்சினை சம்பந்தமாக பிரேரணை யொன்று கொண்டு வரப்பட்டதற்காகவும் அதற்கு ஆதரவளித்ததற்காகவும் மாகாண சபையின்  அனைத்து  உறுப்பினர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களது பிரார்;த்தனையும் நன்றியும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கம்!



No comments

Powered by Blogger.