Header Ads



ஜனாதிபதியின் வழிகாட்டலில் பட்டதாரிகளின் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி - ஹக்கீம்


வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனாதிபதி, தொழில்வாய்ப்பு வழங்கியுள்ளதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நீதியமைச்சிற்கு புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு கொழும்பு  12 இல் அமைந்துள்ள இலங்கை சட்டமன்ற கேட்போர் கூடத்தில் திங்கள்கிழமை (26) முற்பகல் நடைபெற்ற போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். நீதியமைச்சின் கீழ் பட்டதாரிகள் 195 பேர் புதிதாக நியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களிலும், நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களிலும் கடமையாற்றுவர்.  

இந் நிகழ்வில் உரையாற்றும் பொழுது நீதியமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, 

கடந்த காலங்களில் வேலையற்றிருந்த பட்டதாரிகளாகிய நீங்கள் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திலும், கோட்டை புகையிரத நிலையம் முன்பாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முக்கிய இடங்களிலும் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தீர்கள். ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலின் கீழ் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இப்பொழுது உங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் நீங்கள் விரக்தியின் விளிம்பில்; இருந்து மீண்டிருக்கிறீர்கள். 

உங்களை கற்பிப்பதற்கு பெற்றோர் பல சிரமங்களை அனுபவித்துள்ளனர். நீங்கள் அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தொழில் புரிவதோடு நின்று விடாமல், பட்டப்பின் படிப்பை மேற்கொண்டு மேலும் முன்னேற முயற்சிக்க வேண்டும். இலங்கை நிருவாக சேவை, வெளிநாட்டுச் சேவை, கணக்காளர் சேவை போன்ற பரீட்சைகளுக்கும் தோற்றி அவற்றிலும் சித்திபெற்று உயர்பதவிகளுக்கு செல்லும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டு.  

நாட்டின் அரசியல் அமைப்பில் நிறைவேற்று அதிகாரம், சட்டத்துறை, நீதித்துறை என வலுவேறாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முக்கிய துறைகளில் ஒன்றான நீதித்துறையின் கீழ் நீங்கள் பணியாற்றப்போகிறீர்கள். மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நீங்கள் கடமையில் ஈடுபட வேண்டும். 

வேலையற்றிருந்த உங்களைப் போன்ற பட்டதாரிகள் அத்தனைப் பேருக்கும் உரிய தொழில் வாய்ப்புகளை வழங்கியது இலேசான காரியமல்ல. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்கள் என்பவற்றின் வேண்டுகோள்களையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி திறைசேரிக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக உங்களுக்கு இந்த அறிய வாய்ப்பு கிட்டியுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான நியமனங்களை மேற்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகும் என்றார். 

இந் நிகழ்வில் நீதியமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டி சில்வா, மேலதிகச் செயலாளர் சுனில் சமரவீர ஆகியோரும் உரையாற்றினர். அமைச்சின் அதிகாரிகளும் இவ் வைபவத்தில் கலந்துகொண்டனர். பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை அமைச்சர் ஹக்கீமும், அமைச்சின் செயலாளரும் உரியவர்களிடம் கையளித்தனர். 

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் 
ஊடகச் செயலாளர் 










No comments

Powered by Blogger.