புத்தளம் நகர தூதுக்குழுவினர் பாகிஸ்தான் பயணம்
(முஹம்மத் இப்லால்)
கராச்சி மாநகரையும் புத்தளம் நகரையும் ஒன்றிணைக்கும் நட்புறவு முயற்சியின் ஓர் அங்கமாக, கராச்சி மாநகர முதல்வரின் அழைப்பையேற்று புத்தளம் நகர தூதுக்குழுவினர் பாகிஸ்தான் பயணமாகினர்.
சிறிலங்கா சுகந்திர கட்சியின் புத்தளம் தொகுதி பிரதம அமைப்பாளரும், புத்தளம் நகர முதல்வருமான கே.ஏ. பாயிஸ் அவர்களின் தலைமையிலான புத்தளம் தூதுக்குழுவினர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எம்.டீ.எம். தாஹிர், புத்தளம் நகர சபையின் உபத்தலைவர் ஆர்.ஏ.எஸ். புஷ்பகுமார, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சமூகப் பிரதிநிதிகளும் புத்தளம் நட்புறவு தூதுக்குழுவினுள் உள்ளடங்குவர்.
கராச்சி மாநகர முதல்வர், சிந்த் மாநில ஆளுநர் மற்றும் கராச்சி நிர்வாக உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புக்களும் இடம்பெறவிருக்கின்றது. அத்துடன் டெங்கு நோய் தொடர்பான செயலமர்விலும், இளம் சமூக சீர்த்திருத்த சம்மேளனத்தின் கருத்தரங்கிலும் இவர்கள் கலந்துக்கொள்வர். சேர். செய்யத் பல்கலைக்கழகம், பாகிஸ்தான் கலைச் சபை போன்ற இடங்களுக்கும் விஜயங்களை மேற்கொள்வர்.
கடந்த செப்டம்பர் மாதம் புத்தளத்திற்கு விஜயம் செய்த கராச்சி தூதுக்குழுவினர், சமூக மட்டத்திலான பல்வேறு சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டது. நட்புறவின் தொடர்ச்சியாக புத்தளம் தூதுக்குழுவினரது பாகிஸ்தான் விஜயம் அமையப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post a Comment