யாழ்ப்பாணத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் கிளை
யாழ்ப்பாணத்தில் பிரிட்டிஷ் கவுண்சிலின் கிளை அலுவலகமொன்றினை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கவுன்சிலின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்டீபன் ரோமன் தெரிவித்துள்ளார்.
யாழ்.குடாவிற்கு நேற்றைய தினம் விஜயத்தினை மேற்கொண்ட பிரிட்டிஷ் கவுண்சிலின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்டீபன் ரோமன் யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்சகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் 2013ஆம் ஆண்டு முற்பகுதியில் பிரிட்டிஸ் கவுன்சிலின் கிளை அலுவலகத்தை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
பிரித்தானிய கவுன்சில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கடந்த 60 ஆண்டுகளாக கல்வி, கலாசார பண்பாடு சார் நிகழ்வுகளை நடாத்தி வருகிறது. யுத்தத்திற்குப் பின்னரான வடபகுதி மக்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன் ஆங்கிலக் கல்வியையும் ஏனைய கல்விசார் துறைகளையும் வளர்த்து வருகின்றோம்.
குறிப்பாக ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருவதுடன் இலங்கையிலுள்ள பாடசாலைகளை பிரித்தானியாவிலுள்ள பாடசாலைகளுடன் இணைக்கும் செயற்திட்டத்தையும் எமது அணியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாண மக்கள் கல்வியில் காட்டிவரும் ஆர்வத்தினைக் கருத்திற்கொண்டு விரைவாக யாழ்ப்பாணத்தில் பிரிட்டிஷ் கவுண்சிலின் கிளை அலுவலகமொன்றினை அமைப்பதற்குரிய ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம். அதற்கமை பிரித்தானிய கவுன்சில் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டுவரும் வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கும் அலுவலகத்தை அமைப்பதற்குமான இடத்தினை தெரிவு செய்வதற்காகவே நாம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளோம்.
Post a Comment