காலம் மாறிப்போச்சு...!
மொபைல்போன் மூலமாக ஒருவரை, ஓராண்டு காலமாக, காதலித்து வந்த, 23 வயது இளம் பெண், முதல் முதலாக, காதலனை கண்டதும் அதிர்ச்சி அடைந்து, மயங்கி விழுந்தார். அவரது அதிர்ச்சிக்கு காரணம், காதலனின் வயது, 70, என்பதே.
கேரளா, திருவனந்தபுரம் போத்தன்காடு பகுதியைச் சேர்ந்த, 23 வயது இளம் பெண்ணுக்கு, ஓரு ஆண்டுக்கு முன், கண்ணூர் பகுதியைச் சேர்ந்த, அம்சா என்பவர், மொபைல் போன் மூலம் அறிமுகமானார். எம்.டெக்., பட்டதாரியான, அந்த இளம் பெண்ணும், அம்சாவும், அடிக்கடி மொபைலில் பேசினர்.இதில், இருவரும் காதல் வயப்பட்டனர். ஓராண்டாக, இருவரும் நேருக்கு நேர் பார்க்காமலேயே, மொபைல் பேச்சிலேயே தங்கள் காதலை வளர்த்தனர்.
இந்நிலையில், காதலனை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல், அந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்டது. அதற்காக, இம்மாதம், 9ம் தேதி இரவு, திருவனந்தபுரத்திலிருந்து பஸ்சில் புறப்பட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, கண்ணூர் கூத்துப்பரம்பு பஸ் நிலையம் சென்றடைந்தார்.
அங்கிருந்தபடி, பலமுறை காதலனை தொடர்பு கொள்ள முயற்சித்தும், முடியவில்லை. இதனால், நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்தார். அதைக்கண்ட சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், இளம்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.விசாரணையில், அவர் தன் காதலன் அம்சாவை தேடி வந்ததாக கூறி, அவரது மொபைல்போன் எண்ணை போலீசாரிடம் கொடுத்தார். போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, இப்ராகிம் என்பவர், போனை எடுத்தார்.
அவர் உடனடியாக, போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். "இளம் காதலன் வருவார்' என, ஆவலோடு காத்திருந்த இளம்பெண்ணுக்கு, இப்ராகிமை கண்டதும் கலக்கம் ஏற்பட்டது. ஏனெனில், அவருக்கு வயது, 70, என்பதுதே காரணம்.அவர் தான், இதுவரை தன்னுடன் மொபைலில் பேசி வந்த காதலன் என, தெரிந்ததும், அதிர்ச்சி அடைந்து, அப்பெண் மயக்கமடைந்தார். அவர் மயக்கம் தெளிய, போலீசார் உதவினர். மயக்கம் தெளிந்து எழுந்த அப்பெண், "இளம் வயதுடையவர், அம்சா தன் பெயர்' என, இப்ராகிம் தன்னிடம் பொய் சொல்லி, ஏமாற்றி விட்டதாக, போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை ஒரு முறை கூட, இப்ராகிம் அப்பெண்ணை அழைத்து பேசியதில்லை என்றும், இளம்பெண்ணுக்கு சொந்தமாக, மொபைல்போன் இல்லை என்றும், அவரது உறவினர்களின் மொபைல் போன் மற்றும் தரைவழி தொலைபேசி மூலம், இப்ராகிமை, அவரே தொடர்பு கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, அந்த இளம் பெண்ணின் உறவினர்களை போலீசார் வரவழைத்து, அவர்களிடம், அப்பெண்ணை ஒப்படைத்தனர்.
Post a Comment