Header Ads



முஸ்லிம் காங்கிரஸும், ஷிராணி பண்டாரநாயக்கவும்..!



(UN)

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணையில் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட விவகாரத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் இரட்டை வேடம் பூணுவதாகக் கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

மு.கா. தலைவரும், நீதி யமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அறிவுறுத்தலுக்கமையவே குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டதை நன்கு அறிந்திருந்தும் கட்சியின் தீர்மானத்தை செயலாளர் நாயகம் வெளிப்படையாகவே கொச்சைப்படுத்த முனைவது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என்றும் அப்பிரமுகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பாக தெரியவருபவை வருமாறு,

குற்றவியல் பிரேரணையில் மு.கா. கையொப்பமிடுவது தொடர்பில் மூன்று தடவைகள் ஆராயப்பட்டுள்ளது. மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டங்கள் இரண்டில் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலியும் கலந்து கொண்டு கையொப்பமிடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தினமான நவம்பர் முதலாம் திகதி மு.கா. தலைவரின் இல்லத்தில் காலை 9 மணிக்கு மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மூன்றாவது தடவையாக நடைபெற்றது. 

இதில் ஹஸனலி பங்கு பற்றவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களுக்காகவே அவர் அன்று பங்குபற்ற வில்லையாம். 

அன்றைய கூட்டத்தில் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பிரேரணையில் கையொப்ப மிடவேண்டுமென தலைவர் ரவூப் ஹக்கீம் பணிப்புரை விடுத்துள்ளார். இதற் கமையவே நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸும், பசீர் சேகுதாவூதும் கையொப்பமிட்டுள்ளனர்.

நீதியமைச்சர் என்ற வகையில் தன்னை கையொப்பமிட வேண்டாமென ஜனாதிபதி அறிவுறுத்தியதாகச் சுட்டிக்காட்டிய மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அரசின் பங்காளிக்கட்சி என்ற வகையில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கையொப்பமிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். 

இதன் பிற்பாடே தலைமைக்கு கட்டுப்பட்டு மேற்படி இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்ப மிட்டனர் எனத் தெரியவருகின்றது. மேற்சொன்ன விடயங்கள் ஆதாரபூர்வமாக நேற்று தெரியப்படுத்தப்பட்டது. இது தொடர்பாகக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரை தொடர்பு கொண்டு இதன் உண்மைத் தன்மையை அறிய முற்பட்ட போது அப்பிரமுகர்கள் "உண்மை' என்பதை ஊர்ஜிதப்படுத்தினர்.

கட்சியின் செயலாளர் நாயகம் மு.காவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் ஏற்பட திட்டமிட்டு செயற்படுகின்றாரோ என்ற ஐயப்பாடு இதன் மூலம் எமக்கு ஏற்படுகின்றது.

இவரின் இரட்டைவேட செயற்பாடு அண்மைக்காலமாக அரங்கேறிவருகின்றது. அரசிடமும் இரட்டை வேடம் போடப்போய் மூக்குடைபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தவறான கருத்துகளை ஊடகங்களுக்கு வழங்குகிறார் என அப்பிரமுகர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

இதேவேளை, மு.கா. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இவ்விவகாரம் காரணமாக இன்று அவசரமாகக் கூடுகின்றது. இக்கூட்டத்தில் செயலாளர் நாயகத்துக்கு எதிராகக் கடும் சொற்கள் பிரயோகிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுவதாக மு.கா. அதியுயர்பீட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். 

1 comment:

  1. இந்த தகவலை சொன்ன மு.கா அதியுயர்பீட உருப்பினர் யார் என்பதை ஏன் குறிப்பிடவில்லை ??

    ReplyDelete

Powered by Blogger.