Header Ads



சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துங்கள் - மாகாண அமைச்சர் உதுமாலெப்பை

சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் இவ்வாறு தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைப் பேச்சாளருமான அமைச்சர் எம்.எஸ். உதுமாவெல்வை கூறினார்.

அண்மையில் அநுராதபுரம் மல்வத்தை வீதீயிலுள்ள தக்கியா பள்ளிவாசல் மற்றும் திருகோணமலை பாலையூற்று லூர்த் அன்னை ஆலயத்தின் மாதா சொருபம் என்பவற்றின் மீது இடம்பெற்ற இனந்தெரியாதோரின் தாக்குதல்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் உதுமாலெவ்வை மேலும் கூறுகையில்,,

இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு சுதந்திரத் தேசம். இத்தேசத்தில்; வாழுகின்ற ஒவ்வொரு இனத்தினரும் தாம் விரும்புகின்ற மதத்தினையும் அதன் சமய விழுமியங்களையும் பின்பற்றி நடப்பதற்கு உரிமையுடையவர்கள். இலங்கை அரசியல் சாசனத்தில் மதச் சுதந்திரம் பற்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகத்தின் வழிபாட்டுத்தளங்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இத்தகைய ஈனச் செயல்களை அனுமதிக்க முடியாது. இத்தாக்குதல்கள் சமூகங்களுக்கிடையேயான  ஒற்றுமையை சீர்குலைக்குமொரு நாககார நடவடிக்கையாகும்.

இன உணர்வுகளைத் தூண்டி இனங்களுக்கிடையே இன விரிசலையும் சந்தேகக் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி, அவற்றினூடாக சுய இலாபம் தேட ஒரு கூட்டம் திரைமறைவிலிருந்து  செயற்படுவதாகவே இத்தாக்குதல் நடவடிக்கைகளைக் கருத வேண்டியுள்ளது. இத்தாக்குதல் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கத்ததொன்றாகும்.

நாசகார சத்திகள் மேற்கொள்ளும் இத்தகைய வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்கள் ஒரு சில அரசியல் கட்சிகளின் அரசியல் பிரச்சாரத்திற்கான கருப்பொருளாக அமைந்துவிடுகிறது. நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்லின் பிரச்சார நடவடிக்கையின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெற்கில் இடம்பெறும் பள்ளிவாசல்களின் உடைப்புச் சம்பவங்களை கருப்பொருளாக வைத்தே தமது பிரச்சார நடவடிக்கைகளi முன்னெடுத்து 7 ஆசனங்களையும் பெற்று வாக்களித்த மக்களின் அபிலாஷைகளுக்கு மாறு செய்துவிட்டு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொணடுள்ளது.  

இத்தகைய அரசியல் கட்சிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்குக் கருப்பொருளாக பயன்படுத்தப்படும் வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல் சம்பங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது பாதுகாப்பளிக்க வேண்டிய தார்மிகப்பொறுப்பை அரசாங்கம் கொண்டுள்ளது.

வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட சிறுபான்மை சமூகங்களின் வழிபாட்டுத்தளங்கள் உடைக்கப்படுவதும் பின்னர் அவற்றைப் புனரமைக்க அமைச்சர்களினால் நிதி ஓதுக்கப்படுவதும் என்ற மோசமான கலாசாரம் உருவாகுவதைத் நிறுத்தி அவை தாக்குதல்களுக்கு உட்படாமல் பாதுகாக்கப்படுவது அவசியமாகும்.

நாட்டில் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டும். அவற்றை ஏற்படுத்த வேண்டும் எனச் சிந்தித்து அதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கும் மனித நேயமுள்ளவர்களின் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் இத்தகைய நாசகார நடவடிக்கைககள் இந்நாட்டில் ஆரோக்கியமற்றதொரு சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கக்கூடும்.

இதனால். சர்வதேச மட்டத்தில் இலங்கை மேலும் அவப்பெயரைச் சுமக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படக்கூடும். அதுமாத்திரமின்றி ஆசியாவின் ஆச்சரியம் என்ற இலக்கையும் அடைவிதில் சிக்கல்களைத் தோற்றுவிக்கும். 

இத்தகைய சம்பவங்களினால் ஏற்படும் எதிர்விளைவுகளைக் கருத்திற்கொண்டு சிறுபான்மை சமூகங்களின் வழிபாட்டுத்தளங்கள் தாக்குதல்களுக்கு உட்படாமல் பாதுகாப்பதுடன் இந்நாசகார சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பாரபட்சம் காட்டப்படாது உடனடியாகக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதுடன் இந்நடவடிக்கையானது சிறுபான்மை சமூகங்களிடையே நிலவும் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் நீக்கி நம்பிக்கையுடன் வாழ வழிவகுக்குமென அமைச்சர் உதுமாலெவ்வை மேலும் குறிப்பிட்டார்



1 comment:

  1. குருனாகல் றிதீ கம தெலும்பு கொல்ல பள்ளிவாசல் தாக்கி உடைக்கப்பட்டதட்கும் அதன் சூத்திரதாரிகளுக்கும் இதே சட்டம் தானே மாகாண அமைச்சரே?

    ReplyDelete

Powered by Blogger.