வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க சதி - அமைச்சர் றிசாத்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கு மிகவும் கடு கச்சிதமான முறையில் திட்டங்கள் வகுத்து அதன் பின்னணியில் புலம் பெயர் அமைப்புக்கள் செயற்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதனை வடக்கில் செய்ய நினைத்தாரோ அதனை அங்கீகரிப்பவர்களாக நாம் இருக்க கூடாது என்றும் கூறினார்.
தில்லையடி உமராபாத் அன்சாரி அரசினர் கலவன் பாடசாலையில் நேற்று மாலை இ்டம் பெற்ற முப்பெரும் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
2011 மற்றும் 2012 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவித்தல் மற்றும் பாடசாலையின் ஜந்தாம் ஆண்டை நினைவு கூறும் வகையில் அறிவகம் அன்சாரி சஞ்சிகை என்பனவற்றை வெளியிடும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.எச.வதுாத் தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீ்ன் பேசும் போது கூறியதாவது,
இன்று நாம் எமது மீள்குடியேற்றம் பற்றி பேசுகின்றோம். அதனது சவால்களை எவ்வாறு எதிர் கொள்வது என்பது பற்றி கலந்துரையாடுகின்றோம். ஆனால் எம்முன் நிற்கும் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்வதில் அசிரத்தை காட்டுகின்றோம்.20 வருட இடம் பெயர்வு என்பது மிகவும்பெரும் சுமையானது.இருந்த போதும் இன்று நாம் எமது மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளாமல் நாம் வாழ்ந்த பூமியின் இயற்கையினையும் அதனது வசந்தத்தையும் அனுபவிக்க முயற்சிக்கமால் இருப்பது என்பது மேலும் எம்மை பின்னடைவுகளுக்குள்ளாக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வடக்கில் முஸ்லிம்கள் வாழக் கூடாது என்பதால் தான் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இன்று அது மாறியுள்ள போதும் பிரபாகரன் அன்று எதை நினைத்தாரோ அதனை நாம் அங்கீகரிப்பவர்களாக இருக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மீள்குடியேற்றத்தை பொறுத்த வரையில் அதனை தடுப்பதற்காக அன்று புலிகளுடன் செயற்பட்ட ஒரு பலம் பொருந்திய சக்தி பின்னால் இருக்கின்றது.அன்று புலிகள் ஆயுதத்தை வைத்து எம்மை விரட்டிய போதும் இன்று ஆயுதமில்லலாத நிலையில் இருந்து கொண்டு அன்று புலிகளுடன் நெருக்கமாக உறவாடியவர்கள் இன்று அதனை மிகவும் திட்டமிட்ட முறையில் மிகவும் சூசமாக செயற்படுவதை கண் கூடாக காண முடிகின்றது.
அன்று இந்த நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக எவரும் நினைத்திருக்க மாட்டார்கள் மீண்டும் இந்த நாட்டில் அமைதியானதொரு சூழல் ஏற்பட்டு வடக்கில் தாம் வாழ்ந்த பிரதேசங்களில் மீண்டும் மக்கள் செல்ல முடியும் என்று, அவ்வாறான நிலையில் தான் இடம் பெயரக்கப்பட்ட மக்கள் தாம் வாழந்த பிரதேசங்களில் நிரந்தரமான கடட்டிடங்கள் கட்டப்பட்டன. இது இவ்வாறு இருந்த போதும்,எமக்கு தார்மீக பொறுப்பு இருக்கின்றது. புத்தளத்து மக்களின் மன நிலையினையும் அறிந்து செயற்பட. நாம் இடம் பெயர்க்கப்பட்டு வந்த போது இம்மக்களும்,உலமா சபையும்,பெரிய பள்ளிவாசலும்,அரசியல் வாதிகளும், எமக்கு செய்த உதவிகள் என்றும் மறக்க முடியாததொன்று. பெறும் எண்ணிக்கையிலான மக்கள் வந்த போது அவர்களை மனம் கோணாமல் வரவேற்று தமது காணிகளையும், கட்டிடங்களையும், தமக்கு கிடைக்க சகல உதவிகளையும் பகிர்ந்தளித்து, தியாகம் செய்த அரவணைத்ததை நாம் ஒரு போதும் மறந்த விடக் கூடாது.
குறிப்பாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வெறும் ஆட்டோ சாரதிகாளக, கல்வியறிவு அற்றவர்களாக இருப்பவர்கள் என்ற அடையாளம் மாற்றப்பட்டு பல் துறையாளர்கள் என்பதையும் நாம் சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்.எனவே பாடசாலைகள் தமது மாணவ சமூகத்திற்கு உயர்ந்த அறிவு தயாகத்தை தீர்க்கும் இடமாக செயற்பட வேண்டும்,பாடசாலை அதிபரினால் மட்டும் இந்த இலக்கை அடைந்து கொள்ள முடியாது.அதற்கு ஆசிரியர்களின் தியாகமும்,பெற்றோர்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய, யஹ்யான்,யாழ் மாநகர சபை உறுப்பினர் ரூமி அஸ்கர்,மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்,வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன்,உதவிக்கல்விப்ப பணிப்பாளர்களான எம்.அக்பர்,ஹினாயத்துல்லா,முன்னால் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் எம.மூசீன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புத்தளம் காசிம் சிட்டி றிசாத் பதியுதீன் மஹா வித்தியாலய பிரதி அதிபர் கலைஞர். ஹாஜா அலாவுதீன் சஞ்சிகை விமர்னத்தை செய்தார்..மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இங்கு மேடையேற்றப்பட்டன.
Post a Comment