ஹெல உறுமயவுடன் முஸ்லிம் அமைப்புக்கள் சந்திப்பு - பல முக்கிய விடயங்கள் ஆராய்வு
முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் நீண்ட காலமாக நிலவி வரும் நல்லுறவை மேலும் கட்டியெழுப்புவது மற்றும் முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல், சமூக கலாச்சார பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சிலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் ஜாதிக்க ஹெல உறுமயவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்த முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் 13 ஆவது அரசியல் அமைப்புச் சீர்திருத்தச் சட்டம் மற்றும் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் எதிர்நோக்கிவரும் சவால்கள் உட்பட பல விடயங்கள் குறித்து சுமார் இரு மணி நேரமாக ஜாதிக ஹெல உறுமய பிரதிநிதிகளும் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளும் கலந்துரையாடியதாக முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி எரிபொருள் அமைச்சின் கேட்போர்கூடத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கைக்கெதிரான ஜெனிவா பிரேரணையின் போது முஸ்லிம் சமூகம் முஸ்லிம் உலகின் ஆதரவைப் பெற்றுத் தருவதற்கு ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மின்சக்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பாக அமெரிக்க ஆதரவு நாடுகளாக இருக்கும் சவுதி அரேபியா, கட்டார் போன்ற நாடுகளின் ஆதரவும் இலங்கைக்கு கிடைக்க இலங்கை முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார்.
யுத்தம் முடிவுற்று மூன்று வருடங்களாகியும் முஸ்லிம்களை வடக்கில் மீளக்குடியமர்த்த இன்னும் நடவடிக்கை எடுக்காது இருப்பது குறித்து இதனை துரிதப்படுத்துவதற்கு, ஹெல உறுமய ஆதரவு வழங்க வேண்டுமென்றும் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர். சிங்களவர்களும் முஸ்லிம்களும் மீளக்குடியமர்த்தப்பட்ட பின்பே வடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தமது கட்சி உறுதியாக இருப்பதாக இதன்போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கிழக்கில் முஸ்லிம் மக்களுக்காக தனியான அலகொன்று கோரப்படுவது தொடர்பாக இக்கலந்துரையாடலின் போது ஹெல உறுமயவின் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் அன்று வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு கிழக்கில் பெரும்பான்மையான முஸ்லிம்களை மிகச் சிறுபான்மையாக மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதே இந்த கோரிக்கை முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தினால் முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.
மாகாண சபை முறையை ஒழிப்பது தொடர்பாக இங்கு எழுப்பப்பட்ட போது இது தொடர்பாக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தின் கருத்தைப் பெற்றே நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் என முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஹலால் உணவு முறை முஸ்லிம் மக்களுடைய சனத்தொகை அதிகரிப்பு கொழும்பு முஸ்லிம்களது கல்வி மற்றும் பொருளாதார நிலை உட்பட பல விடயங்கள் பற்றி இங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இலங்கையர்கள் என்ற அடிப்படையில் சகல இனத்தவர்கள் ஒன்றுபட்டு செயற்படும் சுற்றாடலை உருவாக்குவதற்கு ஹெல உறுமய முன்வரவேண்டுமெனவும் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன் தலைமையிலான இத்தூதுக்குழுவில் அகில இலங்கை ஜம்மியத்துலமாவின் பொதுச் செயலாளர் எம். எம். முபாரக் , முன்னாள் தூதுவர்களான எம். எம். ஸுஹைர், வை. எல். எம். ஸவாகிர், ஜாவித் யூசுப், எஸ்.ஏ.சி.எம். ஸுஹைல் முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர் அஸ்கர்கான் மற்றும் உறுப்பினர்களான சட்டத்தரணி ரஸித் எம் இம்தியாஸ், எம். எச், எம் நியாஸ், சிராஜ் மசூர் மற்றும் தாரீக் மஹ்முத் மௌலவி அஸ்ஹர், எம் பௌஸர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஹெல உறுமய சார்பில், மின்சக்தி எரிபொருள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கட்சியின் தவிசாளர் அதுரலிய ரத்ண தேரர், தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க, பொருளாளர் தயாபெரேரா, வெளிவிவகாரச் செயலாளர் நவின் குணதிலக, செயற்குழு கட்சி மத்திய குழு உறுப்பினர்களான பத்தர முல்ல தயாவங்க தேரர், புத்தகல ஜினவங்ச தேரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் கவுன்சில் தலைவரின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியனவாகவே இருக்கின்றன..
ReplyDeleteஎந்த சந்தர்பத்திலும் அவுருக்கு எமது ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்.
Muslim Council should maintain the relationship with Helaurumaya for the sake of sustainable unity amongst Muslims and Buddhists. Only through open discussions, misconceptions and discrimination can be eradicated. I appreciate this initiative. God bless you!
ReplyDelete