நீதித்துறை பாராளுமன்றத்தை கட்டுப்படுத்த முடியாது - சபாநாயகர் அறிவிப்பு
பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணையை விசாரணை செய்ய நிமித்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு, சபாநாயகருக்கு பதில் கூறும் கடப்பாட்டை மட்டுமே கொண்டுள்ளது. அது வேறு எந்தவெளிச் சக்திகளுக்கும் நிறுவனங்களுக்கும் பதில் கூற வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ 29-11-2012 பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் முன்வைத்த சிறப்புரிமை பிரச்சினையைத் தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு சபாநாயகர் பதிலளித்தார்.
மேற்படி பாராளுமன்றத் தெரிவுக்குழு வேறு எந்த வெளிச்சக்திகளுக்கும் நிறுவனங்களுக்கும் பதில்கூறும் கடப்பாடுடையதல்ல எனவும் அவ்வாறு வெளியிலிருந்து வரும் உத்தரவுகள் செல்லுபடியற்றதாகும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
மேற்படி விடயம் பாராளுமன்ற வரம்பிற்குள் வருகின்ற விடயமாகும். எமது முன்னோர்கள் இத்தகைய நிலைப்பாட்டினையே கொண்டிருந்தனர். முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்கவின் தீர்ப்பு இதில் முக்கியமானது. பாராளுமன்ற அதிகாரத்துக்குட்பட்ட விடயங்களில் தலையிடுவது பாராளுமன்ற அதிகாரத்துக்கு ஊறுவிளைவிப்பதாகவே அமையும்.
சபாநாயகருக்கோ அல்லது தெரிவுக்குழு உறுப்பினருக்கோ அனுப்பிவைக்கப் பட்டிருக்கும் அழைப்பாணை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
Post a Comment