முஸ்லிம் காங்கிரஸ் பயந்தாங்கொள்ளி அரசியல் செய்கிறதா..?
(ஜூனைட்.எம்.பஹ்த்)
திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கு அச்சுறுத்தலே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி தெரிவித்துள்ளதன் மூலம் அக்கட்சி யாரின் கைப்பொம்மையாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இவ்வாறான அச்சுறுத்தல் என்பது கட்சித்தலைமையால் விடுக்கப்பட்டதா அல்லது இல்லாது போன புலிகளால் விடுக்கப்பட்டதா? அல்லது அரச தரப்பால் விடுக்கப்பட்டதா? அவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அதற்குப்பயந்து ஆதரவாக வாக்களிக்கும் அளவு உலக மகா கோழைப்போராளிகள்தான் முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களா என்ற கேள்விகள் எழுகின்றன.
மு. காவின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் தலைவராக உள்ள ஜமீல், தலைமைக்கு கட்டுப்பட்டவர் என தேர்தல் காலத்தில் விதந்துரைக்கப்பட்டார். சம்மாந்துறையை சேர்ந்த மனசூர் கட்சியின் ஆரம்ப காலப்போராளி என அடை மொழி கூறப்பட்டார். உறுதியான சமூகப்போராளி என கட்சி தாவிய அக்கரைப்பற்று ஏ. எல். தாவம் கூறினார். இவர்கள் அனைவரும் சேர்ந்து யாருக்கோ எதற்கோ பயந்து போய் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என்றால் இதன் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.; இத்தகைய பயந்தாங்கொள்ளிகளால் முஸ்லிம் சமூகத்தின் சிறு உரிமையைக் கூட பெற்றுத்தர முடியுமா என்பதை சமூகம் சிந்திக்க வேண்டும். வாக்களித்த மக்களுக்கு கொஞ்வமும் பயப்படாமல் யாருக்கோ இவர்கள் பயந்துள்ளார்கள் என்பது தொடர்ச்சியான சோரம் போதலின் இன்னுமொரு மைல்கல்லாகும்.
மு. காவின் தலைமை உட்பட அதன் உயர் பீடமும், பிரதேச உறுப்பினர்களும் பதவி பெறுவதில் ஆசை கொண்டல்ல வெறி கொண்டு அலைகிறார்கள் என்றும் சுய நலத்துக்காக சமூகத்தை காட்டிக்கொடுக்கிறார்கள் என்றும் நாம் நீண்ட காலமாக சொல்லி வருகிறோம். இக்கட்சி தனது சமூகத்தை விட தமது தனிப்பட்ட நலன்களை மட்டுமே கருத்திற் கொண்டுள்ளதால் இக்கட்சியை நிராகரிப்பதன் மூலம் மட்டுமே சமூகத்தின் உரிமைகளை விற்றுப்பிழைக்கும் அதன் தலைமைக்கும் உயர் பீடத்துக்கும் பாடம் படிப்பிக்க முடியும் என்பதை மக்கள் உணராத வரை மேலும் மேலும் பல பாதகங்களை சமூகம் சந்திக்க நேரும் என்பதை பல தடவைகள் எச்சரித்துள்ளோம். இவற்றை நரூபிக்கும் வகையில் கிழக்கு மானகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தே வாக்களித்தார்கள் என வெட்கமின்றி சொல்வதை பார்த்துக்கொண்டிருக்குமளவு கிழக்கு முஸ்லிம்கள் வெட்கங்கெட்டு போய்விட்டனரா?
இத்தகைய உறுப்பினர்களை மட்டும் குற்றம் சாட்டுவதில்; பயனில்லை. மாறாக ஏமாற்று தலைமையை கொண்ட ஏமாற்றுப்போராளிகளுக்கு தாம் ஏமாறுகின்றோம் என தெரிந்து கொண்டே வாக்களிக்கும் மக்களும்தாம் முதன்மை பொறுப்புதாரிகளாவர்.
ஆக கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவிகள் பறிபோய் விடும் என பயந்தே திவி நெகும சட்ட மூலத்துக்கு வாக்களித்துள்ளார்கள் என்பது அவ்வாறு ஆதரவாக வாக்களித்தமையை விட கேவலமானது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்..
Post a Comment