Header Ads



ஐ.தே.க.யில் இன்று மற்றுமொரு யுத்தம் - கபீர் ஹாசிமின் கோரிக்கையை நிராகரித்த ரணில்



ஐக்கிய தேசியக்கட்சியில் இன்று 1-12-2012 நடைபெறவுள்ள மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்கவின் 6  வருட பதவிக் காலத்தை இரத்துச் செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் அந்த வேண்டுகோள் ரணிலினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சியின் இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் கட்சியின் முக்கிய எம்.பி.க்களின் பாதுகாவலர்கள் இன்று நடைபெறும் ஐ.தே.க. கூட்டத்தில்  ஆயுதம் வைத்திருக்க அனுமதி மறுக்கப்பட்டமையும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. 

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கபீர் ஹாசிம், ரஞ்சித் அலுவிஹார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பதவிக் காலத்தை ஆறு வருடங்களுக்கு நீடிக்கும் முன்மொழிவை கொண்டுவர வேண்டாமென கேட்டுக்கொண்ட போதிலும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒன்றை தம்மால் அகற்ற முடியாதென ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அதேநேரம், ஆறு வருடங்களுக்கு கட்சித் தலைமையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக எழுந்து நிற்பதற்கு ஐ. தே. க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆயத்தமாக உள்ளதாகவும் ஐ. தே. க. மாற்றுக் குழுவினர் தெரிவிக்கின்றனர். 

மேலும் சஜித் பிரேமதாசவுடன் மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகவும் தெரிய வருகின்றது. இன்றைய தினத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் 1500 இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.