Header Ads



பலஸ்தீன கனவு நனவாகுமா..? உலகெங்கும் பரபரப்பு - இன்று மாலை முடிவு தெரியவரும்..!


(tn) பலஸ்தீனம் ஐ. நா. வின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இன்று  29-11-2012 சமர்ப்பிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மாலை ஐ. நா. பொதுச் சபையில் இந்த விண்ணப்பத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக பலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐ. நா.  உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்தை பெறுவதன் மூலம் இஸ்ரேலுடன் இரு நாட்டு தீர்வுத்திட்டத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முக்கிய படியாக அமையும் என பலஸ்தீன நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும் இஸ்ரேல், அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே பலஸ்தீன நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நியூயோர்க்கில் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ. நா. வின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்தைப் பெறுவதற்கு 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பலம்வாய்ந்த பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் தேவைப்படாது. இதற்கு 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பொதுச் சபையின் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் மாத்திரமே போதுமானது. ஆனால் பொதுச் சபையில் இருக்கும் மூன்றில் இரண்டு நாடுகள், அதாவது 132 நாடுகள் பலஸ்தீன் தேசத்தை அங்கீகரித்துள்ளன. எனவே இன்றைய வாக்கெடுப்பில் பலஸ்தீனம் வெற்றிபெறுவது உறுதியானது.


பொதுச்சபையில் பலஸ்தீன விண்ணப்பத்தின் வாக்கெடுப்புக்கு முன்னர் இன்றைய தினம் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் 193 அங்கத்துவ நாடுகளின் முன்னிலையில் தமது உரையை நிகழ்த்தவுள்ளதாக ஐ. நா. வின் பலஸ்தீன தூதுக் குழுவின் பேச்சாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த 2011 செப்டெம்பரில் ஐ. நா. வின் முழு அங்கத்துவ நாட்டுக்காக பலஸ்தீனம் விண்ணப்பித்த போது அமெரிக்காவின் எதிர்ப்பால் அது தடைப்பட்டது. ஐ. நா. வின் முழு அங்கத்துவ நாடாவதற்கு அதன் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்தை பெறவேண்டும். 

எனினும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடான அமெரிக்கா இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. மீறி வந்தால் தாம் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விண்ணப்பத்தை ரத்துச் செய்வதாக அமெரிக்கா எச்சரித்தது. இந்த விடயத்தில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டே ஐ. நா.வை அணுகியிருக்க வேண்டும் என அமெரிக்கா அப்போது விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் பலஸ்தீனின் உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்திற்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பலஸ்தீனம் தனிநாடு குறித்து யூத தேசத்துடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாறாக பேச்சுவார்த்தையில் இருந்து விலகி நின்று ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்கக்கூடாது என அமெரிக்கா, இஸ்ரேல் விமர்சித்துள்ளன.

“இந்த செயற்பாடு பலஸ்தீன மக்கள் தனிநாட்டை பெறும் முயற்சியை நெருங்கச் செய்யும் என நாம் நினைக்கவில்லை” என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நுலான் கடந்த திங்கட்கிழமை வொஷிங்டனில் வைத்து ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். “இது தவறான முடிவு என நாம் நம்புகிறோம்” எனக் கூறிய அவர் “அதற்கு நாம் எதிராக செயற்படுவோம்” என வலியுறுத்தினார். இது தொடர்பில் வாக்களிக்கவுள்ள ஏனைய நாடுகளுக்கு தமது நிலைப்பாடு குறத்து அறிவுறுத்தவுள்ளதாக நுலான் மேலும் கூறினார்.

பிரான்ஸ் ஆதரவு

இதனிடையே பலஸ்தீனின் ஐ. நா. விண்ணப்பத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. பலஸ்தீனர்களின் தனிநாட்டு எதிர்பார்ப்புக்கு பிரான்ஸ் நீண்ட காலமாக ஆதரவு அளித்து வருகிறது. எனவே பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லவ்ரோவ் பபியஸ் அறிவித்தார்.

இது குறித்து பபியஸ் பிரான்ஸ் பாராளுமன்றத்தின் கீழவையில் விளக்கம் அளிக்கும் போது, “பலஸ்தீன தனிநாட்டு பிரான்ஸ் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வருவது உங்களுக்கு தெரியும். இதனால்தான் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பிரான்ஸின் பதில் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு நாம் ‘ஆம்’ என்றுதான் பதில் அளிப்போம்” என்றார்.

இதன்மூலம் ஐ நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடான பிரான்ஸ் ஐரோப்பாவின் முதலாவது பிரதான நாடாக பலஸ்தீன விண்ணப்பத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இதில் ஜெர்மனி எதிராக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளதோடு பிரிட்டன் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. தவிர, போர்த்துக்கல், ஸ்பைன் பலஸ்தீனின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்துக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளன.

ஆனால் அவுஸ்திரேலியா இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்த வாக்களிப்பில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ள அவுஸ்திரேலியா 27 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மை யான நாடுகள் ஆதரவாக வாக்களித்தால் அதற்கு தாமும் ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளது. என்றாலும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியான் கில்லாட் பலஸ்தீனின் விண்ணப்பத்திற்கு எதிராக வாக்களிக்கவே திட்டமிட்டிருந்த தாகவும் தமது கட்சியின் அழுத்தத்தாலேயே வாக்களிப்பதைத் தவிர்க்க தீர்மானித்ததாகவும் தெரிய வருகிறது என அந்நாட்டின் ஏ.பி.சி. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்கா மற்றும் ஆதரவு நாடுகளின் வாக்குகள் இன்றியே பலஸ்தீனால் இந்த விண்ணப்பத்தின் மீது பொதுச் சபையில் வெற்றிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.சி.சி. செல்லும் வாய்ப்பு

பலஸ்தீனம் தற்போது ஐ.நா.வின் நிரந்தர பார்வையாளர் அந்தத்தைப் பெற்ற நாடாக உள்ளது. இந்த அந்தஸ்துக்கு சர்வதேச அமைப்புகளுக்கும் விண்ணப்பிக்க முடியும். இதன்கீழ் ஐ. நா. பொதுச்சபை கூட்டங்களில் பேசவும் செய்முறை தொடர்பான வாக்கெடுப்புகளை கொணரவும் கையொப்பமிடவும் உரிமை உள்ளது. எனினும் தனது தீர்மானங்களில் மற்றும் நிலையான கருத்துகளில் வாக்களிக்க பார்வையாளர் அந்தஸ்துள்ள நாட்டுக்கு உரிமை இல்லை. 

இந்நிலையில் உறுப்பினரல்லா பார்வையாளர்கள் ஐ. நா. பொதுச் சபை அரங்கில் உறுப்பினர் நாடுகளுக்கு அடுத்தும் பிற பார்வையாளர்களுக்கு முன்பும் அமர்த்தப்படுவர். உறுப்பினரல்லாத பார்வையாளராக அங்கத்துவம் பெறுவதன் மூலம் ஐ.நா. குறித்த நாட்டை ஒரு இறையாண்மை உள்ள தேசமாக ஏற்கும். இதன்மூலம் பொதுச் சபை விவாதங்களில் பங்கேற்க முடியும் என்பதோடு ஐ. நா. அமைப்புகளிலும் இணைய வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக ஹேகிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் (ஐ. சி. சி) இணைய வாய்ப்பு உள்ளது.

1967 ஆம் ஆண்டு எல்லையைக் கொண்ட மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெரூசலம் ஆகிய பகுதிகளைக் கொண்ட பலஸ்தீன தேசத்திற்கே ஐ. நா. உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்து கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பலஸ்தீன எல்லைகளான மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத யூத குடியேற்றங்களை அமைத்துள்ளது. இதற்கு எதிராக உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்தைப் பெறும் பலஸ்தீனத்துக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வரை செல்ல முடியும்.

சுவிட்சர்லாந்து கடந்த 2002 ஆம் ஆண்டுவரை ஐ. நா.வின் உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்து பெற்ற நாடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்கா, இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

எனினும் பலஸ்தீன முயற்சிக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் கடைசிவரை தனது இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பலஸ்தீனம் ஐ. நா. வின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க யுநெஸ்கோவுக்கான தனது நிதியை நிறுத்திக்கொண்டது. இதனால் யுனெஸ்கோ தனது பட்ஜட்டில் 22 வீத நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டது.

அதேபோன்று யுனெஸ்கோவில் இணைந்த பலஸ்தீனத்திற்கு எதிராகவும் அமெரிக்கா நிதி உதவியை இடைநிறுத்தியது. அதேபோன்று பலஸ்தீன் தனி நாட்டு கோரிக்கையை முன்னெடுத்தால் அதன் மீது பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்க கொங்கிரஸ் சபை எச்சரித்திருந்தது. மறுபுறத்தில் 1992 இல் செய்து கொள்ளப்பட்ட ஒஸ்லோ அமைதி உடன்பாட்டை மீறியே பலஸ்தீனம் ஐ. நா. வை அணுகுவதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இந்த மாத ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார். 

இதில் இஸ்ரேலுடனான பிரச்சினையை தீர்க்குமாறு பலஸ்தீன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சென்றால் அதனைத் தடுக்க இஸ்ரேல் கடும் நடவடிக்கையை எடுக்கும் எனவும் அவர் எச்சரித்தார். எனினும் அது எவ்வாறான தடைகள் என்பது குறித்து அவர் விளக்கவில்லை. குறிப்பாக பலஸ்தீன நிர்வாகத்தை கொண்டு செல்ல இஸ்ரேல் வழங்கும் வரி வருமான பரிமாற்றத்தை நிறுத்திவிடுவது, மேற்குக்கரையை முடக்குவது என இஸ்ரேல் கடும் தடைகளை விதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் இந்த விண்ணப்பத்தின் மூலம் அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட தாம் முற்படவில்லை என பலஸ்தீன நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். இந்த விண்ணப்பத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்த அடுத்த தினத்திலேயே இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேல்- பலஸ்தீனத்திற்கு இடையில் விட்டு விட்டு கடந்த இரண்டு தசாப்தங்களாக தொடரும் அமைதி பேச்சுவார்த்தை மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் அதிகரிக்கும் யூதக் குடியேற்றங்கள் காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மஹ்மூத் அப்பாஸின் ஐ. நா. விண்ணப்பத்திற்கு காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷாலும் ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 





2 comments:

  1. யா அல்லாஹ் பலஸ்தீன சகோதரர்களின் நியாயமான அபிலாசைகளை நிறைவேற்றி வைப்பாயாக. எல்லா வகையான சுய நிர்ணய உரிமைகளோடும் கூடிய சுதந்திர நாடாக அதனை மாற்றிவிடுவாயாக. எமது மௌத்திற்கு முன்னர் அல் மஸ்ஜிதுல் அக்ஸாவில் சென்று தொழுகின்ற பாக்கியத்தைத் தந்தருள்வாயாக. அப்புனித பூமியை சத்தப்படுத்தியருள் யா ரஹ்மானே!

    ReplyDelete
  2. யா அல்லாஹ் பலஸ்தீன மக்களினதும் உலக முஸ்லீம்களினதும் இந்த சிறிய அவாவை எற்றுக்கொள்வாயாக

    ReplyDelete

Powered by Blogger.