முஸ்லிம் காங்கிரஸ் பாவத்தின் பங்குதாரியா..?
(தம்பி)
ஜனநாயகத்துக்கு நான்கு தூண்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றம், அரச நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியவையே ஜனநாயகம் என்கிற கட்டிடத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் அந்த 04 தூண்களுமாகும். இந்தத் தூண்களில் ஒன்று உடைந்து போனாலும் - கட்டிடம் காலி!
ஏற்கனவே, நாட்டில் ஊடகச் சுதந்திரம் மரணப்படுக்கையில் இழுத்துக் கொண்டு கிடக்கிறது. நாட்டின் ஆட்சியாளர்களை துணிந்து நின்று எழுதி வந்த சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் பெரெற்றிகா ஜான்ஸ் - தனது இரண்டு குழந்தைகளுடன் நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டார். ஆட்சியாளர்களின் ஆயிரத்தெட்டு அழுத்தங்களுக்கு மத்தியில் இருந்து கொண்டுதான் இவர் எழுதி வந்தார். கடைசியில், உயிருக்கு ஆபத்து என்கிற நிலையில்தான் இந்த முடிவுக்கு அவர் வந்ததாகக் கூறப்படுகிறது.
'எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள்' எனும் சர்வதேச அமைப்பின் தரப்படுத்தலின் படி, ஊடக சுதந்திரத்தில் இலங்கை 163 ஆவது இடத்தில் உள்ளது. அதாவது 179 நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இந்த மோசமான இடம் கிடைத்திருக்கின்றது. சாதாரணமாக நாளாந்தம் கொலைகளும், குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஈராக் போன்ற நாடுகள் இலங்கையை விடவும் ஊடக சுதந்திரத்தில் முன்னேறியுள்ள நாடுகளாக இந்த தரப்படுத்தலில் மதிப்பிடப்பட்டுள்ளதுன. குறித்த பட்டியலில் ஈராக் 152 ஆவது இடத்தில் உள்ளது.
இது ஒருபுறமென்றால், நீதித்துறையும் நாட்டில் மிகக் கடுமையான நெருக்குவாரங்களுக்கு உள்ளாகி வருவதை அண்மைக் காலங்களில் கண்டு வருகின்றோம். அதுவும், ஆட்சியாளர்களாலேயே நீதித்துறை அதிக ஆபத்தைச் சந்தித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணையானது - நீதித்துறை மீதான அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய நடந்து கொள்ளாமையினாலேயே பிரதம நீதியரசரை இவ்வாறான குற்றப் பிரேரணையொன்றின் மூலம் அவரின் பதவியிலிருந்து தூக்கி வீசுவதற்கு ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும்.
பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணையினை ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதை அறிவீர்கள். அந்தக் குழுவில் ஆளுந்தரப்பைச் சேர்ந்தவர்களே அதிமாக உள்ளனர் என்பது கவனத்துக்குரிய விடயமாகும். பிரதம நீதியரசரை அவரின் பதவியில் இருந்து அகற்றுவதென்பது – 'இன்றைக்கு நினைத்து நாளை முடிக்கும்' காரியமல்ல. அதற்கு சில மாதங்கள் செல்லும். கடைசியில், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இதற்குத் தேவைப்படும். அப்போது – அரசாங்கத்தோடு இணைந்து செயற்படும் தமிழ் - முஸ்லிம் கட்சிகள் என்ன நிலைப்பாடுகளை எடுக்கும் என்பது மிகவும் கவனிக்கப்படும்.
ஏற்கனவே, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் 15 தமிழ் - முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். இவர்களில் 07 பேர் முஸ்லிம் உறுப்பினர்கள். இந்த 07 பேரில் இருவர் மு.காங்கிரசைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மு.கா.வின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றவர் எச்.எம்.எம். ஹரீஸ்.
அந்தவகையில், மு.கா.வைச் சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளமைதான் இன்று ஆயிரத்தெட்டு விமர்சனங்களுக்குரிய பேசு பொருளாக மாறியிருக்கின்றது.
இந்த நிலையில், தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் - பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கையொப்பமிட்ட விவகாரத்தினை முஸ்லிம் காங்கிரஸ் 'போட்டுப் புதைப்பதற்கு' எடுத்த எத்தனங்கள் எவையும் பலிக்கவில்லை. அதனால், கிழக்கு மாகாணசபையில் திவிநெகும சட்டமூலத்துக்கு தமது உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து விட்டு, மு.கா. தலைவரும் - செயலாளரும் நாடகமொன்றினை ஆடினார்களல்லவா? அதைப் போல இந்த விடயத்திலும் - மு.கா. தலைமை நாடகமொன்றுக்குத் தயாராகி வருவதை அவதானிக்க முடிகிறது.
அதாவது, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் மு.கா.வின் நிலைப்பாடு குறித்தோ, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டமை தொடர்பிலோ மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் இதுவரை மூச்சுக்கள் விடவில்லை. இதேவேளை, கட்சியின் செயலாளர் ஹசனலியாரோ திவிநெகும சட்ட மூலத்தில் நடந்து கொண்டமை போன்று, இந்த விடயத்திலும் 'ஒளித்து விளையாட'த் துவங்கியுள்ளார். 'பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கட்சியின் தலைவரும், தானும் கையொப்பமிடவில்லை' என்பதை ஊடகங்களுக்கு திரும்பத் திரும்ப அழுத்திக் கூறிவருகின்றார் ஹசனலியார்! இதனூடாக – தலைவர் ஹக்கீமையும், தன்னையும் இந்த விவகாரத்தில் புனிதர்களாகக் காட்டிக் கொள்வதோடு, கையொப்பமிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சிக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளாகப் பார்க்குமாறும் செய்துள்ளார்.
உண்மையில், மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத் மற்றும் ஹரீஸ் ஆகியோர் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் ஏன் கையொப்பமிட்டார்கள். கட்சித் தலைவர் ஹக்கீம் இதற்குப் பின்னணியில் எவ்வாறு இருந்துள்ளார் என்பதையெல்லாம் கொஞ்சம் விரிவாகச் சொன்னால்தான் இந்த விவகாரத்தில் திருவாளர் பொதுஜனங்களுக்கு ஓரளவாவது தெளிவு கிடைக்கும்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கையொப்பம் இடுவதற்கு முன்னர், அது தொடர்பில் மு.காங்கிரஸ் 03 கூட்டங்களை நடத்தியுள்ளது. முதல் கூட்டம் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமை தாங்கினார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஓரிருவரைத் தவிர, ஏனையோர் அந்தக் கூட்டத்துக்கு சமூகமளித்திருந்தனர்.
இதற்கு முதல் நாள் - அதாவது, 29 ஆம் திகதியன்று, கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. அதில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு மு.கா. தலைவர் ஹக்கீமிடம் ஜனாதிபதி கேட்டிருக்கின்றார். ஆனால், தான் நீதியமைச்சராக இருப்பதால் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கையெழுத்திட மாட்டேன் என்று ஹக்கீம் கூறியதாக அறிய முடிகிறது. இருந்த போதும், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்றுத் தருவதாக ஹக்கீம் வாக்குறுதியளித்துள்ளார்.
எனவே, 30 ஆம் திகதி நடந்த கூட்டத்தில், அதற்கு முந்தைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டம் குறித்து மு.கா. தலைவர் ஹக்கீம் - தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி தன்னிடம் விடுத்த வேண்டுகோள் பற்றியும் ஹக்கீம் கூறினார். எனவே, சிரேஷ்டத்துவம் குறைந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாவது, பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணையில் கையொப்பம் இட வேண்டும் என்று ஹக்கீம் கூறினார். அதிலும், தௌபீக் எம்.பி. கட்டாயமாக கையொப்பம் இட வேண்டும் என்றார் ஹக்கீம்.
இதன்போது ஹரீஸ் எம்.பி. ஒரு விடயத்தை முன்வைத்தார். அதாவது, 'எங்களின் சமூகப் பிரச்சினைகள் என்று வரும் போது அரசு அலட்டிக் கொள்வதில்லை. மு.காங்கிரசுக்கும் உரிய இடம் கிடைப்பதில்லை. அப்படியிருக்கும் போது, அரசாங்கத்துக்கு இவ்வாறான விடயங்களில் மு.கா. ஏன் உதவ வேண்டும் என்பதை ஜனாதிபதி விளங்கப்படுத்துதல் வேண்டும்' என்றார். இவ்விடயம் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தப்பட்டது. 31 ஆம் திகதி மு.கா. தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்குமாறு ஜனாதிபதி நேரம் வழங்கினார்.
இதற்கிணங்க, அலறி மாளிகையில் 31 ஆம் திகதி அந்தச் சந்திப்பு இடம்பெற்றது. மு.கா. தலைவர் ஹக்கீம், செயலாளர் ஹசனலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், தௌபீக் மற்றும் அஸ்லம் ஆகியோர் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர். இதன்போது, பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார். சவாலான முறையில் நீதித்துறை செயற்படும் போது, அரசாங்கத்தினைக் கொண்டு நடத்துவதிலுள்ள கஷ்டங்கள் குறித்து ஜனாதிபதி பேசியதாகத் தெரியவருகிறது.
இதன்போது, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியிடம் பேசியுள்ளனர். குறிப்பாக, தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டமை தொடர்பில் சுட்டிக் காட்டப்பட்டது. இது தொடர்பில் தீர்வினைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பிலான மு.கா.வின் மூன்றாவது கூட்டம் நவம்பர் 01 ஆம் திகதி நடைபெற்றது. ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஹரீஸ் மற்றும் பஷீர் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். அன்றைய தினம் காலை 10 மணிக்கு பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதாக இருந்தது. எனவே – ஜனாதிபதிக்கு உறுதியளித்தமைக்கிணங்க மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டே ஆகவேண்டியிருந்தது. ஆனால், மு.கா.வின் வேறு நாடாளுன்ற உறுப்பினர்கள் எவரும் அந்தக் கூட்டத்துக்கு சமூகமளித்திருக்கவில்லை. இந்த நிலையில்தான் பஷீர் மற்றும் ஹரீஸ் ஆகியோர் உடனடியாக நாடாளுமன்றம் சென்று பிரேரணையில் கையொப்பமிட்டதாகத் தெரியவருகிறது.
நடந்த விடயம் இப்படியிருக்க, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் தவிசாளர் பஷீர் மற்றும் ஹரீஸ் எம்.பி. ஆகியோர் கையொப்பமிட்டமை தொடர்பில் மு.கா. தலைவர் ஹக்கீம் மற்றும் செயலாளர் ஹசனலி ஆகியோர் ஒளித்து விளையாடுவதற்கு முற்படுதல் என்பது, நயவஞ்சகமான செயற்பாடாகும் என்கிறார் மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் ஒருவர்!
பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணை தொடர்பில் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. பிரதம நீதியரசர் ஷிராணிக்கு எதிராக அரச தரப்பினர் முன்வைத்துள்ள பிரேரணையில் உள்ள குற்றச்சாட்டுக்களில் அதிகமானவை சிறுபிள்ளைத் தனமானவை. அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தால், பிரதம நீதியரசர் 'நல்ல பிள்ளை'யாகவே இருந்திருப்பார் என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.
இதேவேளை, பிரதம நீதியரசர் தொடர்பில் இன்னுமொரு கருத்தும் உள்ளது. 'ஷிராணி ஒன்றும் அத்துணை புனிதமான நீதி தேவதையல்ல. இவரின் கணவருக்கு தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பதவியினை ஆட்சியாளர்கள் வழங்கியபோது – அதை மகிழ்சியுடன் அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு வகையில், ஷிராணிக்கு ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட லஞ்சம்தான் அவரின் கணவருக்கு வழங்கப்பட்ட தேசிய சேமிப்பு வங்கி தலைமைப் பதவியாகும்' என்கின்றனர் இன்னுமொரு தரப்பினர்.
இந்த நிலையில், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதொன்றும் பெரிய பாவமல்ல. இது அரசியல். எனவே, அரசியலை அரசியலாகவே கையாள வேண்டியுள்ளது என்கின்றனர் பிரேரணைக்கு ஆதரவான அரசியல்வாதிகள். ஆனால், இந்த ஆட்சியாளர்களின் சர்வதிகாரப் போக்கின் இன்னொரு செயற்பாடுதான் பிரதம நீதியரசர் ஷிராணி மீதான நடவடிக்கையாகும். எனவே, ஆட்சியாளர்களின் இந்தப் போக்குக்கு ஆதரவு வழங்குவதானது – ஜனநாயகத்துக்கு மேலும் மேலும் ஆபத்தாக அமைந்து விடும் என்கின்றனர் குற்றப் பிரேரணைக்கு எதிரானவர்கள்.
இவ்வாறானதொரு சிக்கலான சேற்றுக்குள்தான் - மு.கா.வும் தனது கால்களை விட்டுள்ளது. தமிழ் சமூகத்தின் அரசியல் கட்சியாக த.தே.கூட்டமைப்பு பார்க்கப்படுவது போல, முஸ்லிம்களின் அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் பார்க்கப்படுகிறது. அதனால்தான், மு.காங்கிரசின் செயற்பாடுகள் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. அதாஉல்லாவோ, டக்ளஸ் தேவானந்தாவோ பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கியமையானது ஆச்சரியமானதொரு விடயமே அல்ல! இன்னொரு வகையில் சொன்னால், குறித்த குற்றப் பிரேரணையை மேற்படியாளர்கள் எதிர்த்திருந்தால்தான் அது - ஆச்சரியமான செய்தியாகி இருக்கும். எனவே, இந்த விடயத்தில் மு.கா.வை ஊடகங்கள் குறிவைத்துத் தாக்குகின்றன என்று, மு.கா. தரப்பினர் சிலர் கூறுகின்ற குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவையாகும்.
பிரதம நீதியரசர் விவகாரத்தில் மு.காங்கிரஸ் ஆகக்குறைந்தது - பக்கம் சாராததொரு நிலைப்பாட்டினை எடுத்திருக்கலாம் என்கிற குரல்கள் மு.கா.வுக்குள்ளேயே இருக்கின்றன. ஆனால், அரசோடு ஆட்சியில் இருந்து கொண்டு, மணிக்கூட்டுக்குள் அசைந்து கொண்டிருக்கும் 'பென்டியுலம்' போல் மு.கா.வால் செயற்பட முடியாது என்கிறார் மு.கா.வின் முக்கிய 'தலை'யான ஒருவர்! அரசோடு இருந்தால் - அரசுக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டும். இல்லையென்றால் - ஆட்சியை விட்டு வெளியேறி எதிர்த்தரப்பில் உட்கார வேண்டும். அதாவது, அடித்தால் மொட்டை, வைத்தால் குடுமி என்பதுதான் சரியான நிலைப்பாடு என்கிறார் அவர்!
சரி, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதில்லை என்கிற முடிவினை மு.கா. தலைமை எடுத்து விட்டால் மட்டும் - மற்றைய எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்குக் கட்டுப்பட்டு விடுவார்களா என்ன? ஆட்சியாளர்களுக்கு தமது விசுவாசத்தினைக் காட்டுவதற்காக, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்குத் துரோகம் செய்தால் என்ன செய்வது? ஆக, வழமையோல் கட்சியைக் காப்பாற்றுவதற்காக, பிரதம நீதியரசருக்கு எதிரான விடயத்திலும் ஆதரவளிப்பதென்கிற முடிவை மு.கா. தலைவர் எடுத்திருக்கலாமல்லவா? என்று மு.கா.வின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கேட்டோம்.
அதற்கு அவர் கூறிய பதில் கவனத்துக்குரியது. அதாவது, 'பிழைகளை அங்கீகரிப்பதென்பது கட்சியைக் காப்பாற்றுவது என்று ஆகிவிடாது. தவிரவும், மு.காங்கிரஸ் என்பது அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று அர்த்தமாகியும் விடாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி தாவி விடாமல் பார்த்துக் கொண்டிருப்பது – கட்சியினைக் காப்பாற்றி விடுவதாகாது. மு.காங்கிரஸ் தலைவரின் முடிவே மு.காங்கிரசின் முடிவாகும். ஆண்டாண்டு காலமாக அப்படித்தான் இருந்து வருகிறது. எனவே, பிரதம நீதியரசர் விடயத்திலும் மு.கா. தலைமை வெட்டொன்று துண்டிரண்டு எனும் வகையிலான முடிவொன்றினை எடுத்திருத்தல் வேண்டும். சிலவேளை, அரசுக்கு விருப்பமற்ற முடிவாகக் கூட அது இருக்கலாம். அப்படியானதொரு சந்தர்ப்பத்தில் - மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரெல்லாம் கட்சியின் தீர்மானத்துக்கு மாறு செய்து விட்டு, ஆட்சியாளர்களுடன் இணைகிறார்கள் என்பதை சமூகம் கண்டு கொள்ளும். பிறகு அவ்வாறானவர்களின் எதிர்கால அரசியலை சமூகம் தீர்மானிக்கும். எனவே, தனது தடுமாற்றத்துக்கும், இயலாமைக்கும் மு.கா. தமைமையானது இன்னுமின்னும் - கட்சியைக் காப்பாற்றும் காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கக் கூடாது' என்றார் அந்த முக்கியஸ்தர்.
கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, ஜனநாயகத்தின் கால்களை (தூண்களை) உடைத்து விடும் பாவத்தில் மு.கா.வுக்கும் பங்கு உள்ளது என்பதை மட்டும் மறுத்து விட முடியாது.
பாவத்துக்கு இரண்டு விதமான பரிகாரங்கள்தான் உள்ளன. ஒன்று தண்டனை. மற்றையது பிரார்த்தனை!
·
Muslim makkalin thanikkadsium thadumarukiratha?sarva vallamai arasin munnaal
ReplyDeleteமிகவும் நியாயமான பார்வை. காலத்துக்குத் தேவையான கட்டுரை.
ReplyDeleteஅபூ இமான்