ஹக்கானி அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை தடை விதிப்பு
ஹக்கானி அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹக்கானி அமைப்பின் தற்கொலைப் படைத் தலைவர் காரி ஜாகிரின் வங்கிக் கணக்கை முடக்கவும், அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வற்கு அனுமதி மறுத்தும் பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
ஐ.நா. நடவடிக்கை எடுத்துள்ள அதே நாளில்தான் காரி ஜாகிரை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தடை ஏன்? ஹக்கானி அமைப்பு ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலிலும், ஆள் கடத்தலிலும் ஈடுபடுகிறது. அல் காய்தா, தெஹ்ரிக் - இ - தலிபான், ஜெய்ஷ் - இ - முகமது ஆகிய அமைப்புகளுடன் ஹக்கானிக்கு தொடர்பு உள்ளது. இந்தக் காரணங்களுக்காக அந்த இயக்கத்துக்கு தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்கா வரவேற்பு: ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி சூசன் ரைஸ், ஹக்கானி அமைப்புக்கு தடை விதித்திருப்பதை வரவேற்றுள்ளார். இதன் மூலம் ஹக்கானி அமைப்பின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆப்கனில் அமைதி திரும்ப வழி பிறக்கும் என்றார் சூசன்.
ஹக்கானியின் தற்கொலைப் படைத் தலைவராக உள்ள ஜாகிர், இயக்கத்தில் சேரும் இளைஞர்களுக்கு வெடிப்பொருள்களை இயக்கும் முறை குறித்தும், தாக்குதல்களை நடத்துவது குறித்தும் பயிற்சி அளிப்பதில் திறமையானவர் என்று கூறப்படுகிறது.
இந்த அமைப்பின் சார்பில் 2011 ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டலில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 2 போலீஸôர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு செப்டம்பரில் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஹக்கானி அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த அமைப்பின் தலைவராக சிராஜுதின் ஹக்கானி உள்ளார். முன்னதாக கடந்த செப்டம்பரிலேயே ஹக்கானி அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க அரசு அறிவித்துவிட்டது நினைவுகூரத்தக்கது.
Post a Comment