Header Ads



நீதிமைச்சர் ரவூப் ஹக்கீம் ஐரோப்பிய ஒன்றிய இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு (படங்கள்)



இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதா, இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார் என தெரிவித்த நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அதுபற்றி ஆராய்வதற்கான ஒரு குழுவை நியமிக்குமாறு தாம் தமது அமைச்சின் செயலாளரைப் பணித்திருப்பதாகவும், விரைவில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையிலான அக் குழு செயல்படவிருப்பதாகவும் கூறினார். 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னார்ட் சவேஜ்  அமைச்சர் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று திங்கள் கிழமை (05) காலையில் நீதியமைச்சில் இடம்பெற்ற பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார். 

கொலை போன்ற பாரிய குற்றச்செயல்களை இழைப்போருக்கு இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது 1976 ஆம் ஆண்டிலும் , மாலைத்தீவில் 1953 ஆம் ஆண்டிலும் இருந்து கைவிடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், மீண்டும் இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதா, இல்லையா என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் விதத்தில்  எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது நீதியமைச்சர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார். 

அதுபற்றிய கடிதமொன்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, நீதியமைச்சுக்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறிய அமைச்சர் ஹக்கீம் சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில், சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு, குற்றவாளியாக காணப்படுபவர்களுக்கும் மரண தண்டனை விதிப்பது பற்றி சீர்தூக்கிப் பார்க்குமாறு குறிப்பிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

தமது பணிப்புரையின் கீழ் நீதியமைச்சின் செயலாளர் மிக விரைவில் நியமிக்கவுள்ள மேல் நீதிமன்ற நீதிபதியொருவரின் தலைமையிலான இக் குழுவில் சட்டமா அதிபர் திணைக்களம், நீதியமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் சிலர் உட்பட உளவியல் நிபுணர் ஒருவரும் இடம்பெறுவார் எனவும் அமைச்சர் கூறினார். 

இக் குழு கூடி ஆராய்ந்து விதந்துரைக்கும் விடயங்களைப் பொறுத்து மரண தண்டனையை இலங்கையில் மீண்டும் அமுல்படுத்துவதா? இல்லையா என்பதை ஜனாதிபதி தீர்மானிப்பார் என்று அவர் மேலும் தெரிவித்தார். அப்பொழுது கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், தற்பொழுது பல நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்றார். சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ரிஸானா நபீக் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது.    

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விஜயம் செய்து சட்டமுறைமை மற்றும் நீதிச் சீர்திருத்தங்கள் பற்றி கண்டறிவதற்கான வாய்ப்பை தமது தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவிற்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஏற்படுத்தித் தருமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை தூதுவர் பேர்னார்ட் சவேஜ் ஏற்றுக்கொண்டதோடு, அது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். 

இலங்கையில் தூக்குத் தண்டனை இறுதியாக 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. 2002 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டு, அத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 

ஓக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரையில் பெண்கள் மூவர் மற்றும் ஆண்கள் 377 பேர் உட்பட மொத்தம் 380 நபர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக ஆண்கள் 453 பேரும் பெண்கள் 20 பேரும் மொத்தம் 473 நபர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். 

இவற்றுக்கான குற்றச்சாட்டு ஹெரோயின் போதைப்பொருள், கொலை  என்பனவாகும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நீதியமைச்சுக்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.   

இவ்வாறு நீதியமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




No comments

Powered by Blogger.