சவூதி அரேபிய பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு..!
(tn)சவூதிஅரேபிய பெண்கள் நாட்டைவிட்டு வெளியேறும்போது அவர்களது ஆண் பாதுகாவலர்களின் கையடக்க தொலைபேசிக்கு தானாக அறிவுறுத்தும் குறுஞ்செய்தி அனுப்பும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
ஏற்கனவே பெண்களுக்கு கட்டுப்பாடு நிலவிவரும் சவூதியில் இவ்வாறான புதிய முறைகளுக்கு கண்டனங்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் தொடக்கம் சவூதி ஆண் பாதுகாவலர்களுக்கு இவ்வாறான குறுந்தகவல் வெளியாகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சவூதியில் ஆண் பாதுகாவலர் இன்றி வெளியே செல்வதற்கும் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும் தடை காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அறிமுகமான மின் கடவுச் சீட்டு முறை மூலமே சவூதி அரசு பெண்கள் வெளிநாடு செல்வதை கண்காணித்து வருகிறது.
எனினும் தமது ஆண் பாதுகாவலரின் அனுமதி இன்றி பெண்களுக்கு சவூதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. இவர்கள் வெளிநாடு செல்ல மஞ்சள் அட்டை என அழைக்கப்படும் ஆவணத்தில் ஆண் துணையின் அனுமதி கையொப்பம் பெறப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் சவூதி மன்னர் அப்துல்லா அண்மைக் காலமாக அங்கு கடைப்பிடிக்கப்படும் கடுமையான சட்டங்களில் சில தளர்வுகளை அறிமுகப்படுத்தி வருகிறார். கடந்த 2011, செப்டம்பரில் பெண்களுக்கு வாக்களிக்க உரிமை அளிக்கப்பட்டதோடு அவர்கள் மாநகர தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டது. அத்துடன் பெண்கள் நீதிமன்றத்தில் வழங்காடவும் அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது.
Post a Comment