பொறியில் சிக்கிய தேசம்..!
(தம்பி)
என் செல்ல லாத்தாண்டே
எனக்கிந்த சோகயன் வேணான்டே
காக்கொத்தரிசில கஞ்சி வடிக்கிறான்
காறாத்தல் சீனில கணக்குப் பாக்கிறான்
ஓராமீன் ஆக்கினா ஓடி ஒளியிறான்
ஒட்டிமீன் ஆக்கினா சட்டிய உடைக்கிறான்
வேணான்டு சென்னாலும் போகாம கெடக்குறான்
வெரசி உட்டாலும் வலுப்புத்தான் காட்டுறான்
எண்ணத் தலையில மண்ணள்ளி போடுறான்
என் செல்ல லாத்தாண்டே
எனக்கிந்த சோகயன் வேணான்டே!
-கிழக்கு முஸ்லிம் நாட்டார் பாடல்-
நாட்டு நிலைமை அவ்வளவு நல்லதாக இல்லை. ஆட்சியாளர்கள் நினைப்பது அனைத்தும் கிரமமாக நடந்து கொண்டே வருகின்றன. ஆட்சியாளர்களுக்கு எதிரான குரல்கள் ஏதோவொரு வகையில் அடக்கப்படுகின்றன. திமிறுகின்றவர்கள் பழி தீர்க்கப்படுகிறார்கள்.
இதனால், அரசின் பங்காளிகள் - கூட்டாளிகள் என்று சொல்லிக் கொள்வோர் எல்லோரும் ஒன்றில் ஆட்சியாளர்களுக்கு கோரஸ் பாடுகின்றார்கள் அல்லது 'பொத்தி'க் கொண்டு இருக்கின்றனர்.
ஜாதிக ஹெல உறுமயவின் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தேசிய ஐக்கிய முன்னணியின் விமல் வீரவன்ச, தேசிய காங்கிரசின் அதாஉல்லா போன்றோர் - கோரஸ் பாடுகின்ற கூட்டத்தவர்கள் என்றால், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் போன்றோர் 'பொத்தி'க் கொண்டு இருப்போராகப் பார்க்கப்படுகின்றனர்.
மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றார்கள், பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணையை சமர்ப்பிக்கின்றார்கள், இடையில் அனுராதபுரம் பள்ளிவாசலுக்குச் சொந்தமான மதரஸாவும் எரியூட்டப்படுகிறது. ஆனால், இவை தொடர்பில் அரசாங்கத்தோடு கட்டிப் பிடித்து விளையாடும் நமது சிறுபான்னை சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் எவரும் 'சும்மா' கூட – ஒரு எதிர்க்குரலினை எழுப்பவில்லை!
குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தின் கணிசமான வாக்குகளைக் கொண்ட கட்சி என்று சொல்லிக் கொள்ளும் மு.காங்கிரசோ அதன் தலைமையோ - இதுவரை இவ்விவகாரங்கள் குறித்து எதுவிதமான எதிர்ப்புகளையும் இதுவரை வெளியிடவேயில்லை. எதிர்ப்பு என்று நாம் இங்கு குறிப்பிடுவது – பத்திரிகைகளுக்கு விடப்படும் வெற்று அறிக்கைகளை அல்ல!
'பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதைத் தடுப்பதென்றால் மு.காங்கிரசுக்கு வாக்களியுங்கள்' என்று கடந்த கிழக்குத் தேர்தலில் தொண்டை கிழியக் கூக்குரலிட்டு வாக்கு வசூலித்த மு.காங்கிரசும் அதன் தலைமையும் - அனுராதபுரம் பள்ளிவாசல் மதரஸா எரியூட்டப்பட்டமை தொடர்பில் மௌனித்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும்!
ஆகக்குறைந்தது – பள்ளிவாசல் உடைப்பு விவகாரம் குறித்து ஆட்சியாளர்களிடம் மு.கா. தலைமை இதுவரை தனது அதிருப்தியினை அல்லது கோபத்தினைக் கூட வெளிக்காட்டியதாகத் தெரியவில்லை!
இன்னொரு புறம், நாட்டின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை சபாநாயகரிடம் அரசு சமர்ப்பித்துள்ளது. இந்தக் குற்றப் பிரேரணையில் ஆளும் தரப்பைச் சேர்ந்த 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். இதில் மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். தமது கட்சியின் தீர்மானத்துக்கமைவாகவே, பிரேரணையில் தாம் கைப்யொப்பம் இட்டதாக மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நம்மிடம் கூறினார். நீதியமைச்சர் என்கிற வகையில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கையொப்பம் இடுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளார் என்றும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அரசியல் யாப்பின் சரத்து 107 (02) க்கு அமைவாகவே பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்புக் கூறுகின்றது.
மேற்படி சரத்தானது உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை அகற்றுதல் பற்றி விபரிக்கின்றது. அதாவது, 'அத்தகைய நீதிபதி ஒவ்வொருவரும் நன்னடத்தையுடையவராக இருக்கும் வரை பதவி வகித்தல் வேண்டுமென்பதுடன், எண்பிக்கப்பட்ட துர்நடத்தை அல்லது தகவின்மை அவர்பால் உள்ளது என்ற ஏதுவின் மீது அத்தகைய நீதிபதியை அகற்றும்படி கூறும் பாராளுமன்றப் பிரேரணையொன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின் பெரும்பான்மையினால் (சமூகமளிக்காத உறுப்பினர்கள் உட்பட) ஆதரவளிக்கப்பட்டு சனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், சனாதிபதியினால் ஆக்கப்படும் கட்டளையொன்றினால் மூலமாகவன்றி அகற்றப்படுதலும் ஆகாது' என்கிறது 107 (02) சரத்து!
இதன்படி பார்த்தால், பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க - நன்னடத்தையற்றவராக, துர்நடத்தை உடையவராக அல்லது தகவின்மை கொண்டவராக இருந்தால் மட்டுமே அவருக்கெதிராக இவ்வாறானதொரு குற்றப் பிரேரணையைக் கொண்டு செல்ல முடியும் என்பதை மேற்படி சரத்தின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
ஷிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நியமித்தார். அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்ட போது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. பிரதம நீதியரசராகப் பதவி வகிப்பதற்கு ஷிரானியை விடவும் சிரேஷ்டத்துவமும் தகைமையும் கொண்டோர் இருக்கும் போது, அந்த மரபினை மீறி ஷிரானி நியமிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனாலும், இந்த ஆட்சியாளர்கள் அவை எதனையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஷிரானியை பிரதம நீதியரசராக்கிப் பார்த்தனர்.
அப்படி மரபுகளையும், நியாயங்களையும் மீறி ஷிரானியை பிரதம நிதீயரசராக நியமித்தவர்கள்தான் இப்போது – அவர் 'நல்லமில்லை' என்கிறார்கள்..!
'தம்மால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் - தமது தாளத்துக்கெல்லாம் ஆடுவார் அல்லது ஆட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தாற்போல் நடக்கவில்லை. குறிப்பாக, 'திவிநெகும' விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், பிரதம நீதியரசரும் ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் நடக்கவில்லை. அதுதான் - பிரதம நீதியரசர் மீது ஆட்சியாளர்களுக்கு இத்தனை கொலவெறி' என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
இதேவேளை, பிரதம நீதியரசருக்கு இன்னொரு வழியாகவும் பொறி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அது – அவரின் கணவர் மீதான குற்றச்சாட்டாகும். அதாவது, பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசம் என்பவர் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவராவார். இவர் - தனது பதவிக் காலத்தின்போது, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார் என்றும், அதன் மூலம் அரசாங்கத்துக்கு 39 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தினை ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சுமத்தி - கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று பதியப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் பகிடி என்னவென்றால் - பிரதம நீதியரசரின் கணவர் பிரதீப் காரியவசத்தை தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தவரும் சாட்சாத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவேதான். கடந்த வருடம்தான் இந்த நியமனம் வழங்கப்பட்டது!
ஷிரானி பண்டார நாயக்க - இலங்கையின் முதலாவது பெண் பிரதம நீதியரசராவார். நாட்டின் 200 வருடங்களுக்கும் மேற்பட்ட நீதித்துறை வரலாற்றில் ஷிரானியுடன் 43 பிரதம நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவருக்க 54 வயதாகிறது. சட்டத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.
பிரதம நீதியரசருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பிரேரணை சொல்லும் செய்தியானது மிகவும் ஆபத்தானது. ஆட்சியாளர்களுக்கு விசுவாசமற்ற பிரதம நீதியரசர்கள் எவரும் மான ரோசத்துடன் நிலைத்திருக்க முடியாது என்பதே – அந்தச் செய்தியாகும். இதைத்தான் 'காட்டுச் சட்டம்' என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
இது தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமடையும். ஆட்சியாளர்களுக்கு விசுவாசமானவர்கள் மட்டுமே பிரதம நீதியரசராக நிலைக்க முடியும் என்கிறதொரு நிலைவரும். அப்படியென்றால், இனி, பிரதம நீதிபதி பதவியில் நிலைத்திருப்போரை - ஆட்சியாளர்களின் 'விசுவாசி'களாகவே மக்கள் பார்க்கத் தொடங்குவார்கள். அது - நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் ஒரு சூழலை உருவாக்கும்.
மகா ஜனங்களே... இவ்வாறானதொரு சூழலையும், நிலைவரத்தினையும் உருவாக்கும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்குத்தான் நீங்கள் வாக்களித்த அல்லது உங்கள் வாக்குகளினால் உருவான தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கையெழுத்திட்டதன் மூலம் ஆதரவளித்துள்ளார்கள்.
சரியாகச் சொன்னால், அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் 'விபரிப்பதற்கு வெட்கப்படும் ஒரு பொறிக்குள்' சிக்கியிருக்கின்றார்கள். கிட்டத்தட்ட துப்பவும் முடியாத, விழுங்கவும் இயலாததொரு நிலை. அதனால், ஆட்சியாளர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டித் தொலைத்தே ஆக வேண்டும். எதிர்த்தால், அரசியல் அநாதைகளாக்கப்படுவார்கள் அல்லது ஏதாவதொரு குற்றச்சாட்டுக்குள் சிக்க வைக்கப்படுவார்கள்.
இதை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஓரளவு வெளிப்படையாக பல மேடைகளில் ஒத்துக் கொண்டுள்ளார். 'ஆட்சியாளர்களுக்கு எதிரானதொரு முடிவினை மு.கா. தலைமை எடுக்க முயற்சித்தால், மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோரை ஆட்சியாளர்கள் விலைகொடுத்து வாங்கி விடுவார்கள். கட்சியைத் துண்டாடி விடுவார்கள். அதனால்தான் சில சர்ந்தப்பங்களில் மனச்சாட்சிக்கு விருப்பமற்ற முடிவுகளை எடுக்க நேர்ந்ததாக' மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம் சாடைமாடையாகச் சொல்லியிருக்கின்றார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை மு.கா. ஆதரித்தமைக்கும் பின்னாலும் இவ்வாறானதொரு 'பொறி' இருக்கலாம்! யார் கண்டார்!!
அரசில் ஒட்டிக் கொண்டிருப்போர் - ஆட்சியாளர்களின் 'நல்லது - கெட்டதுகள்' அனைத்தையும் ஆதரித்தே ஆக வேண்டியுள்ளது. ஏதாவதொன்றை எதிர்ப்பதாயின் ஆட்சியினை விட்டு விலகியே அதைச் செய்யவேண்டும். இதுதான் இன்றைய நிலைவரமாகும். கிழக்கு மாகாணசபையின் ஆதரவைப் பெறுவதற்கு 'திவிநெகும' சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது, ஆட்சியாளர்களால் மு.காங்கிரசுக்கு சொல்லப்பட்ட விடயமும் இதுதான்!
இப்படியே போனால், மேலுள்ள நாட்டார் பாடலை நாமும் பாட வேண்டியதுதான்!
(அநுராதபுரத்தில் தீயிடப்பட்ட பள்ளிவாசல்)
நல்ல கட்டுரை.தம்பி தங்க கம்பிதான்.
ReplyDeleteஎல்லோருக்கும்(வஹ்ன்)உயிராசையும்,பொருளாசையும் அதிகரித்து விட்டது.
ReplyDeleteநம்ம சமூகத்த represent பண்ண ஒரு தனி கட்சி தேவை அது மார்க்க ரீதியா செயட்படகூடியாத இருக்கணும்.
ReplyDelete