Header Ads



பொத்துவில் மக்களுக்காக குரல்கொடுத்தார் அஸீஸ் - அனுதாப செய்தியில் ஹக்கீம்


பொத்துவில் மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அதற்காக அச்சமின்றி குரல் கொடுப்பவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பீ.ஏ. அஸீஸ் விளங்கினார் என அவரது மறைவையொட்டி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தில் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

மறைந்த அஸீஸ், எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக 2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பிரவேசித்தார். எமது கட்சி பொத்துவில் மக்களை கண்ணியப்படுத்தும் வகையில் அவருக்கு அந்த தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அன்னார் எமது கட்சியில் இல்லாத போதிலும், பேரினவாத கடும் போக்காளர்களின் அத்துமீறல்களை சகித்துக்கொள்ள முடியாதவராக, எப்பேர்பட்ட அரசியல்வாதியாக இருந்தாலும், அரச அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் முன்னிலையில் தராதரம் பாராமல் உரத்த தொனியில் தனது எதிர்ப்பையும், நிலைப்பாட்டையும் அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடியவராக மர்ஹூம் அஸீஸ் காணப்பட்டார். 

அவரது மறைவு குறிப்பாக பொத்துவில் மக்களுக்கும், பொதுவாக முழு கிழக்கிலங்கைக்குமே பாரிய இழப்பாகும். 

அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பிழைகளைப் பொறுத்து மேலான ஜென்னதுல் பிர்தௌஸ் சுவனபதியை வழங்குவானாக என பிரார்த்திக்கிறேன்.  

இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.