ஐரோப்பாவின் பல நாடுகளில் ஒரேநேரத்தில் வேலைநிறுத்தம்
வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை கண்டித்து, ஐரோப்பிய யூனியன் நாடுகளில், 14 -11 -2012 வேலை நிறுத்தம் நடந்தது. ஐரோப்பிய நாடுகளில், கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக்கூட நிதியில்லாத நிலை உள்ளது.
இதைச் சமாளிக்க உலக வங்கியும், ஐரோப்பிய பொது வங்கியும் கணிசமான அவசர நிதியை ஒதுக்கியுள்ளன. அதே நேரத்தில் ஏராளமான கட்டுப்பாடுகளையும் இந்த வங்கிகள், கடன் வாங்கிய நாடுகளுக்கு விதித்துள்ளன.
சர்வதேச வங்கிகளின் நிர்பந்தத்துக்குப் பணிந்து, மானிய குறைப்பு, ஓய்வூதிய குறைப்பு, ஆட் குறைப்பு உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை, ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு உள்ளன. இதைக் கண்டித்து, 23 நாடுகளில், 40 தொழிற்சங்கங்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டன. ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ், பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பெரிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.
பிரான்ஸ் நாட்டில் அந்நாட்டு அரசைக் கண்டித்து, போராட்டக்காரர்கள் போராடவில்லை. சக நாடுகளின் ஊழியர்களுக்கு ஆதரவாக, பாரிஸ் நகரில் போராட்டம் நடத்தினர். ஸ்பெயின், போர்ச்சுகல் நாட்டில், முழு அளவில் வேலை நிறுத்தம் நடந்ததால், விமானம், ரயில் உள்ளிட்ட போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கல்வி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஸ்பெயின் நாட்டின் சில நகரங்களில், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, 30 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தாலி நாட்டில், நான்கு மணி நேரம் வேலை நிறுத்தம் நடந்தது.
Post a Comment