அமெரிக்காவை தாக்கிய புயலினால் ஒபாமாவின் செல்வாக்கு அதிகரிப்பு
சாண்டி புயல் மீட்பு பணிகளில் அதிபர் ஒபாமா காட்டிய ஈடுபாடு காரணமாக, மீண்டும் அவருக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. ஜனநாயக கட்சியின் சார்பில், தற்போதைய அதிபர் பராக் ஒபாமா போட்டியிடுகிறார். குடியரசுக்கட்சியின் சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர். இருவரும் அமெரிக்கா முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்நாட்டு தேர்தல் நடைமுறையின் படி, இதுவரை 3 முறை விவாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவில், ஒபாமாவை விட மிகக்குறைந்த அளவில் ரோம்னி முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் முன்பை விட வேகமாக தனது பிரசார பணிகளை ஒபாமா மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், கரிபியன் கடலில், கடந்த வாரம் தோன்றிய, "சாண்டி' புயல், அமெரிக்காவின், நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி உள்ளிட்ட, 15 மாகாணங்களை தாக்கியது. புயலுக்கு இதுவரை,97 பேர், பலியாகினர். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நியூஜெர்சியும், நியூயார்க்கும் இந்த புயலில் அதிகமாக பாதிக்கப்பட்டன. நியூயார்க் பங்கு சந்தை இரண்டு நாட்கள் மூடப்பட்டது. 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பலத்த காற்றினால், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான நகரங்கள், இருளில் மூழ்கின. 75 லட்சம் பேர், மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரோம்னிக்கு சரிவு: சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஒபாமா நிர்வாகம் காட்டிய வேகம், அமெரிக்க மக்களிடையே மீண்டும் ஒபாமாவுக்கு ஆதரவு கூடியுள்ளதை தற்போது வெளிவரும் கருத்து கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. கடந்த அக்டோபர் 26ம் தேதி நடந்த கருத்துக்கணிப்பில், ரோமனிக்கு 47.7 சதவீத ஆதரவும், ஒபாமாவுக்கு 47 சதவீத ஆதரவும் காணப்பட்டது. இது கடந்த 30ம் தேதி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, ரோம்னிக்கு 47.9 சதவீதமாகவும்,ஒபாமாவுக்கு 47.1 சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில், நேற்று (நவம்பர் 1)ம் தேதி நடந்த கருத்துக்கணிப்பில் இருவருமே 47 சதவீத ஆதரவை பெற்றுள்ளனர். மேலும், ஒபாமா வலுவாக உள்ள மாகாணங்களில் அவருக்கு 196 ஓட்டுகளும், இதர மாகாணங்களில் அவருக்கு 41 ஓட்டுகளும் கிடைத்துள்ளன. மொத்த ஓட்டுகள் 237. இதே போல், ரோம்னி வலுவாக உள்ள மாகாணங்களில் அவருக்கு 159 ஓட்டுகளும், இதர மாகாணங்களில் 47 ஓட்டுகளும் என 206 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இதன்படி, தொடர்ந்து ரோம்னியை விட ஒபாமா முன்னிலையிலேயே இருக்கிறார்.
Post a Comment