Header Ads



முழக்கம் மஜீத்துக்கு பதவி வழங்குமாறு கோரிக்கை


(எஸ்.எம்.அறூஸ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத்துக்கு கட்சியின் தீர்மானத்தின்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சின் இணைப்பாளர் பதவியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமிடம் எம்.எச்.எம்.அஸ்ரப் சமூகசேவைகள் நற்பணி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எம்.எச்.எம்.அஸ்ரப் சமூகசேவைகள் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் அபுபக்கர் பழில் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

முதலாவது வடகிழக்கு மாகாண சபைத்தேர்தலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தனது உயிரையும் துச்சமாக மதித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் முழக்கம் அப்துல் மஜீத்தாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்று ஆரம்பிக்கப்பட்டதோ? அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒருவர்.

கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும், 2012ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு அப்துல் மஜீத் முன்வந்த போதிலும் கட்சித் தலைவர் ஹக்கிமின் வேண்டுகோளினால் அந்த வாய்ப்பினை விட்டுக் கொடுத்த ஒரு தியாகியாகவே நாம் அவரைப் பார்க்கின்றோம்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் கட்சியின் தலைவரும் செயலாளர் உட்பட உயர்பீட அங்கத்தவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபையில் ஆட்சியின் பங்காளியாக வருமானால் முழக்கம் அப்துல் மஜீத்துக்கு பதவியொன்றினை வழங்குவோம் என்று அவரின் வீடு தேடிச்சென்று கூறியிருக்கின்றனர். 

அதன் நிமித்தம் விவசாய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் முழக்கம் அப்தல் மஜீத்துக்கு இணைப்பாளர் பதவியை வழங்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பணிப்புரை வழங்கியிருக்கின்றார். தலைவரின் பணிப்புரையை ஹாபிஸ் நஸீர் நிறைவேற்றாது தொடர்ந்தும்; ஏமாற்றும் செயற்பாட்டிலேயே இருப்பதாக அறிகின்றோம்.

அதுமட்டுமல்லாமல் திருகோணமலைக்கு அப்துல் மஜீத்தை, அமைச்சர் ; ஹாபிஸ் நஸீர் அஹமட் வரச்சொல்லியிருக்கின்றார். அவரும் அங்கு சென்றிருக்கின்றார். அடுத்த கிழமை நான் உங்களைச் சந்திக்கின்றேன். மட்டக்களப்பில் போட்டியிட்டு தோல்வி கண்ட பலர் இருப்பதாகவும் வேறு ஒழுங்கில் எல்லோரையும் கவணிப்பதாகவும் அமைச்சர் ஹாபிஸ் கூறியிருக்கின்றார்.

இது விடயத்தில் எமது அமைப்பு மிகுந்த கவலையடைகின்றது. கட்சிக்காக உழைத்து வரும் ஒரு தியாகியை இவ்வாறு அழைக்கழிப்பதும், கட்சியின் தேசியத் தலைவர் ஹக்கீமின் வேண்டுகோளை கட்சிக்குள் அண்மையில் தான் வந்து பதவி பெற்ற ஹாபிஸ் நஸீர் புறக்கணித்திருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

பதவிகள் தன்னைத் தேடி வந்தபோதல்லாம் கட்சியே எனது மூச்சு என்று வீராப்புப் பேசிய ஒரு உண்மைப் போராளிக்கு இவ்வாறு நடப்பது கட்சியின் அடிமட்ட போராளிகளையே அவமதிப்பதற்குச் சமமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகிச் சென்று அமைச்சர் அதாஉல்லாவோடு இணைந்து கொண்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த யூ.எல்.உவைசுக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் இணைப்பாளர் பதவி வழங்கப்பட்டு அவர் கௌரவப்படுத்தப்பட்டுள்ளதையும் இந்த இடத்தில் குறிப்பிடுகின்றோம்.

எனவே, கட்சியினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக முழக்கம் அப்துல் மஜீத்துக்கு மாகாண அமைச்சின் இணைப்பாளர் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.