Header Ads



பரீட்சை வினாத்தாளில் நபிகள் நாயகம் அவமதிப்பு வாசகம் - பாகிஸ்தானில் பரபரப்பு


பாகிஸ்தானிலுள்ள லாகூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற மசூதி அருகே பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சமீபத்தில் மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. அந்த கேள்வித்தாளில் இறை தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வாசகம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனால் பள்ளிக்கூட நிர்வாகியை கண்டித்து ஜமாத்-உத்-இஸ்லாமிக் மாணவர் இயக்கத்தினரும், மாணவிகளின் பெற்றோரும் ஆவேசத்துடன் பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். உடனே போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். பிறகு இவர்களில் ஒரு பகுதியினர் திடீரென்று பள்ளிக்குள் நுழைந்து நிர்வாகியை தேடினர். அவர் சிக்கவில்லை. 

இதனால் அங்குள்ள 3 கட்டிடங்களில் இருந்த மாணவிகளை வெளியேற்றினார்கள். பின்னர் அந்த கட்டிடத்தில் நுழைந்து பொருட்களை அடித்து சூறையாடினர். அங்கிருந்த மேஜை-நாற்காலிகள் மற்றும் பொருட்களை வெளியே போட்டு தீ வைத்தனர். பள்ளிக்கூட நிர்வாகி காரும் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

தகவல் அறிந்ததும் அரசியல் கட்சி தலைவர்களும், போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதிமொழி கூறி போராட்டக்காரர்களை சமாதானம் செய்தனர். அதன்பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். 

இது தொடர்பாக லாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கூட அதிபர் அசிம் பாரூக், ஆசிரியர் அரீபா ஆகிய 2 பேரை கைது செய்தனர். அத்துடன் பள்ளிக்கூடத்தில் சூறையாடல், தீ வைப்பில் ஈடுபட்ட சிலரையும் போலீசார் தேடுகிறார்கள் 

No comments

Powered by Blogger.