சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணம் - முடங்கியது மும்பாய்
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே இன்று சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
மராட்டிய இனம், இந்திய நாடு, இந்து மதத்திற்கு ஆதரவான கொள்கைளை கொண்டது சிவசேனா கட்சி. இந்து மத ஆதரவு கொள்கைகளை கொண்ட, சிவசேனா கட்சி, 1966ல், துவக்கப்பட்டது.மும்பை நகரில், இந்துக்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் பாதுகாப்பான கட்சி என்ற பெயர் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் தலைவராக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியல் நடத்தி வருபவர், பால் தாக்கரே, 86.சில மாதங்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த புதன் கிழமை மிகவும் மோசமான நிலையை அடைந்தார். மூச்சு விடுவதில் சிரமம், இருதய கோளாறால் அவதிப்பட்ட அவருக்கு, அவரின் இல்லமான, மும்பை, பாந்த்ராவில் உள்ள, "மாதோஸ்ரீ'யின், இரண்டாவது மாடியில் உள்ள, அவரின் தனியறையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது.
மும்பை நகரின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான, லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், 24 மணி நேரமும், பால் தாக்கரே உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளித்து வந்தனர்.."தாக்கரே கவலைக்கிடமாக உள்ளார்' என்ற தகவல் பரவியதும், அவர் மீது மிகுந்த அன்பு கொண்ட கட்சியினர், மாதோஸ்ரீ முன் கூடி, "ஜெய் பவானி... ஜெய் சிவாஜி...' என்று கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். அரசியல், சினிமா மற்றும் கலைத்துறை பிரமுகர்கள், மாதோஸ்ரீக்கு வந்த வண்ணம் இருந்தனர்.எனினும், அவர்கள் யாரும், தாக்கரேயை சந்திக்க முடியவில்லை. தனியறையில் இருந்த அவரை, சிவசேனா கட்சியின் செயல் தலைவர், உத்தவ் தாக்கரே, அவரின் மனைவி, ராஷ்மி மற்றும் லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் மட்டுமே கவனித்து வந்தனர்.கடந்த புதன் கிழமை, தாக்கரே உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், வியாழக்கிழமை சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த, உயிர் காக்கும், அவசர கருவிகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் பால் தாக்கரே இன்று மாலை 3.33 மணியளவில் காலமானதாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அறிவித்தார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக கூறினார். பால் தாக்கரேவின் இறுதி தகனம்நாளை மாலை 3 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் பால் தாக்கரேவின் உடல் சிவாஜி பூங்காவில் அஞ்சலிக்கு வைக்கப்படும்.
கடந்த 1926ம் ஆண்டு பால் தாக்கரே பிறந்தார். கார்ட்டூன் வரைவதில் பால் தாக்கரே, பத்திரிகை ஒன்றில், கார்ட்டூனிஸ்டாக அறிமுகமாகி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியலில் ஈடுபட்டார். கடந்த 1966ம் ஆண்டு சிவசேனா கட்சி ஆரம்பித்த பின்னர் கட்சிக்கு சாம்னா பத்திரிகையை துவக்கினார். இதில் பல்வேறு கட்டுரைகள் மற்றும் தலையங்கங்களை பால் தாக்கரே எழுதி வந்தார். கடந்த 1995ம் ஆண்டு பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி ஆட்சியை பிடித்தது. அப்போது தாக்கரே அமைச்சர் பொறுப்பு ஏதும் ஏற்கவில்லை. பம்பாய் என்ற, அந்நகரின் பெயரை, மும்பா தேவி நினைவாக, மும்பை என, மாற்றியதில், தாக்கரேயின் பங்கு அதிகம்.தாக்கரேவுக்கு பிந்து தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் உத்தவ் தாக்கரே அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டு, தற்போது அவர் சிவசேனா கட்சியின் செயல் தலைவராக உள்ளார்.
பால் தாக்கரே காலமானதை தொடர்ந்து, சிவசேனா தொண்டர்கள் அமைதி காக்கும்படி, உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். பால் தாக்கரேவின் காலமானதை தொடர்ந்து மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை நகரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பா.ஜ., இரங்கல்: பால் தாக்கரே காலமானதற்கு பாரதிய ஜனதா கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.,வின் ஷா நவாஸ் ஹூசைன் கூறுகையில், பால் தாக்கரே புலி போல் வாழ்ந்தவர், அவர் இந்திய அரசியலில் முக்கிய தலைவர். இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் அவர் ஒருவர். அவரது மரணத்திற்கு பா.ஜ., இரங்கலை தெரிவித்து கொள்கிறது என கூறினார். பால் தாக்கரே காலமானது மிகுந்த மனவேதனை அளிப்பதாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். பால் தாக்கரே காலமானதை தொடர்ந்து ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பால் தாக்கரே காலமானதை தொடர்ந்து, எதிர்கட்சிக்கு பிரதமர் அளிக்க இருந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
மிகவும் சர்ச்சைக்குரிய தலைவராக செயல்பட்டு வந்த பால் தாக்கரே, தேசியவாதம் என்ற பெயரில், ஹிந்து அடிப்படைவாதத்தை பரப்பினார். கடந்த 1993-ல் நடந்த மும்பை கலவரத்தின்போது, முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் எழுதி, இனக்கலவரத்தைத் தூண்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. கலவரம் நடந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், உள்ளூர் நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்தது.
தான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் அல்ல என்று கூறிவந்த பால் தாக்கரே, பாகிஸ்தானுக்கு சாதகமாக நடந்து கொள்வோரை தான் கடுமையாக எதிர்ப்பதாக ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவதைக் கடுமையாக எதிர்த்த சிவசேனை கட்சியினர், பல முறை கிரிக்கெட் மைதானங்களை சேதப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு முறை, 1983-ல் இந்தியா வென்ற உலகக் கோப்பையைக் கூட சேதப்படுத்திவிட்டார்கள்.
காதலர் தினம் கொண்டாடுவோர் மீதும் சிவசேனை தாக்குதல் நடத்தி வந்தது.
சமீப ஆண்டுகளில், சிவசேனைக் கட்சியின் அரசியல் ஆளுமை குறைந்து வந்தாலும் கூட, பால் தாக்கரேவை வணங்கியவர்களும், அவரைக் கண்டு அச்சப்பட்டவர்களும் இருந்துகொண்டுதான் இருந்தார்கள்.
அதனால்தான், கடந்த சில தினங்களாக பால் தாக்கரே உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், அவரது வீட்டைச் சுற்றிலும் மும்பையின் முக்கியப் பகுதிகளிலும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வந்தது.
Post a Comment