காலி நகரில் நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமையும் இடத்திற்கு ஹக்கீம் விஜயம்
இலங்கையின் தென் மாகாணத்தின் மிகப் பெரிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை காலியில் 850 மில்லியன் ரூபா செலவில் நிறுவுவதற்கு நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
காலி மாநகர எல்லைக்குள், பத்தேகம வீதியில், பெலிகஹ சந்திக்கு அருகில் உள்ள பிரஸ்தாப நீதிமன்றக் கட்டிடத் தொகுதி அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஹக்கீம் சென்று பார்வையிட்டதோடு, உரிய நிலத்தினதும், உத்தேச கட்டிடங்களினதும் வரைபடங்களையும் பரிசீலித்தார். பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்கார மற்றும் நீதியமைச்சின் பொறியியலாளர் ஜயக்கொடி ஆகியோரும் அமைச்சருடன் அங்கு சென்றிருந்தனர்.
இந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம், வர்த்தக மேல் நீதிமன்றம் மாகாண குடியியல் (சிவில்) மேன்முறையீட்டு நீதிமன்றம், காதி நீதிமன்றம், தொழில் நியாயசபை, நடுத்தீர்ப்பு மையம் என்பவற்றை நிர்மாணிப்பதற்கு நீதி அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
அத்துடன், சட்டத்தரணிகள் நானூறு பேர் செயலாற்றக்கூடியதாக அவர்களுக்கான அலுவலகங்கலும் இக் கட்டிடத் தொகுதியில் அமைக்கப்படவுள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்திற்கு தலைமை தாங்கிச் சிறப்பிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு நீதியமைச்சர் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment