அக்கரைப்பற்று கல்விவலய மாணவர்களின் கற்றல் விருத்திக்கு செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு
(எஸ்.எல்.மன்சூர்)
அக்கரைப்பற்று வலயத்தில் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய மூன்று கல்விக் கோட்டங்களிலும் அறுபத்தி நான்கு பாடசாலைகள் காணப்படுகின்றன. இப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களினது கற்றல் பேறுகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பல்வேறுபட்ட கல்விச் செயற்பாடுகளும், செயலமர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஆரம்பக்கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக ஆரம்பக்கல்விக்கான உதவி;க் கல்விப் பணிப்பாளர் என்.ஏ. அப்துல் வஹாப் தெரிவித்துள்ளார். தரம் 4, 5 மாணவர்களின் கற்றற்பேறுகளை விருத்தி செய்யவும், அவர்களது மொழியறிவினை மேம்படுத்தவும் இவ்வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள், சுற்றாடல் சார் செயற்பாடுகளுடன் இணைந்த ஆரம்பவிஞ்ஞானம் தொடர்பான கற்றல் உபகரணங்கள் தொடர்பாக மாணவர்களை இலகுவாகக் கையாளத்தக்கதான செயலமர்வுகள், மொழி தொடர்பான அறிவை மேம்படுத்தும் நோக்கில் தமிழ், ஆங்கிலம் போன்ற விசேட பயிற்சி பெற்ற வளவாளர்களைக் கொண்டு பயிற்சி முகாம்களை நடாத்துதல், ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை காட்சிப்படுத்தி பொருள் கண்காட்சி நடாத்துதல், மாணவர்களின் அடைவினை பகுப்பாய்வு செய்தல் போன்ற பலதரப்பட்ட செயற்றிட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உதவியாக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்களான அல்ஹாஜ். எம்.ஏ. அபூதாஹிர், எஸ்.எல். மன்சூர் ஆகியோரும் உதவி செய்து வருகின்றனர்.
அத்துடன், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ், தகவல் தொழில் நுட்பம், சிங்களம், முறைசாராக் கல்விப் பிரிவி மற்றும் அனர்த்த பாதுகாப்புச் செயற்பாடுகள், பிள்ளைநேயப் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்றிட்டங்கள் போன்றனவும் முறையாக திட்டங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேவேளை இம்முறை தரம் ஐந்து மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் நிகழ்த்திய சாதனைக்காக பாடசாலைகளில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இது அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி விருத்திச் செயற்பாட்டில் உயர்வான அடைவு மட்டத்தினை எடுத்துக் காட்டுவதாகவே பார்க்கப்படுகின்றது. இதற்காக இவ்வலயத்தின் அதிபர்கள், ஆசிரியர்கள் தொடக்கம் கல்வி அதிகாரிகள் வரை அனைவரும் தம்மை அர்ப்பணித்து செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment