அக்கரைப்பற்று கல்விவலய பாடசாலைகளில் அனர்த்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை
(எஸ்.எல். மன்சூர்)
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் கோட்டங்களிலுள்ள கடற்கரை அண்டிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் பல கடந்த சுனாமியின்போது பாதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக பாடசாலைகள் பல இடமாற்றம் பெற்று புதிய இடங்களில் கட்டப்பட்டிருந்தாலும் அவை கடற்கரையை அண்மித்து இருப்பதாலும், அடிக்கடி இப்பிராந்தியம் இயற்கை அனர்த்தத்திற்கு
உட்பட்ட பிரதேசமாக இருப்பதன் காரணமாகவும், பாடசாலைகளில் அனர்த்த பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அடிக்கடி ஒத்திகையும் நடாத்தப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள ஒலுவில் அல் - ஜாயிஷா வித்தியாலம் கடந்த 2004 சுனாமியின்போது முற்றாக சேதமடைந்து அப்பாடசாலை வேறொரு புதிய இடத்தில் அமையப்பெற்றிருக்கின்றது. இருப்பினும் இப்பாடசாலையானது அனர்த்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு கல்விபயிலும் மாணவர்கள் அனர்த்தம் ஒன்று ஏற்படுகின்றபோது அவர்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டு தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர் என்பதை கண்டறியும் நிகழ்வு (2012.11.09) காலை 8.30மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. அக்கரைப்பற்று கல்வி வயலத்தின் ஆசிரிய ஆலோசர்களான அல்ஹாஜ்;. என்.எம். சம்சுதீன், எஸ்எல். மன்சூர் ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் இவ்வொத்திகை நிகழ்வுகள் நடைபெற்றன.
அபாய மணிச்சத்தம் ஒலிக்கப்பட்டதன் பின்னர் பாதுகாப்புக்கருதி மாணவர்கள் முறையாக வகுப்பறைகளை விட்டு வேகமாக வெளியேறி உரிய இடத்திற்கு வந்தடைந்தனர். இதன்போது அதிபர், ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள், அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழுக்கள் போன்றன உரியவாறு இயங்கியன. ஒத்திகையின் பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆசிரிய ஆலோசகர் என். எம். சம்சுதீன் மாணவர்கள் சிறப்பான முறையில் வெளியேறி பாதுகாப்பான இடத்தை அடைந்தமை, ஆசிரியர்களது முறையான பயிற்சிகள் இச்செயற்பாடுகளுக்கு மிகவும் காத்திரமாக அமைந்திருந்தமை பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார். இதுபோன்று ஏனைய பாடசாலைகளிலும் மேற்படி அனர்த்த பாதுகாப்பு ஒத்திகைகள் நடாத்தப்பட்டுவருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment