Header Ads



முஸ்லிம் இளைஞன் தேசிய மெய்வல்லுனர் போட்டியில் சாதனை



(எஸ்.எம்.அறூஸ்)

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 90 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டிகளில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் ஒலுவில் கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.எம். ரஜாஸ்கான் முதலிடம் பெற்றுள்ளார்.

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இப்போட்டிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற 200 மீற்றர் இறுதிப்போட்டியில் இலங்கை இராணுவத்தின் சார்பில் பங்குபற்றிய ரஜாஸ்கான் 21.29 வினாடிகளில் ஓடி முதலிடத்தைப் பெற்றார்.

இலங்கைக்கு கிடைத்த புதிய குறுந்தூர ஓட்ட நடசத்திரமாக ரஜாஸ்கான் இதன் மூலம் கருதப்படுகின்றார். இப்போட்டியில் இலங்கை பொலிஸ் அணியைச் சேர்ந்த எச்.எஸ்.பத்திரண 21.39 வினாடிகளில் ஓடி இரண்டாமிடத்தையும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஐ.எம்.ஆர். புஸ்பகுமார 21.45 வினாடிகளில் ஒடி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

அட்டாளைசசேனை சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் தேசிய வீரராக சாதனை படைத்திருப்பது அம்பாரை மாவட்டத்திற்கு மட்டுமல்லாது முழுக்கிழக்கு மாகாணத்திற்குமே பெருமை தரும் விடயமாகும்.

அட்டாளைச்சேனை பிரதேசம் ரீதியாக பல போட்டி நிகழ்ச்சிகளில்  தேசிய ரீதியில்; கலந்து கொண்ட ரஜாஸ்கான் பல வெற்றிகளை ஈட்டியிருக்கின்றார். தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள் என பல போட்டிகளில் தனது திறமையை வெளிக்காட்டியிருக்கின்றார்.

2012 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா அட்டாளைச்சேனையில் நடைபெற்றபோது, அதில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைச் சுவிகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ரஜாஸ்கான் 200 மீற்றர் நிகழ்ச்சியில் 22.3 வினாடிகளில் ஓடி முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்றிருந்தார். இது இன்று வரை கிழக்கு மாகாணத்தின் சாதனையாக இருந்து வருகின்றது.

அது மட்டுமல்லாமல் அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட ரஜாஸ்கான் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினை சுவிகரித்திருந்தார் என்பது விசேட அம்சமாகும்.

நமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தேசிய வீரராக பரிணாமம் பெற்றிருப்பது அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்குத் தெரியாதாம். அதிலும் விளையாட்டுத்துறையில்  சம்பந்தப்பட்டவர்கள் இதனை அறியாதது மிகக் கவலைக்குரிய விடயமாகும்.

 இவ்வாறான அதிசயமிக்க திறமையான விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த அனுசரனைகளை வழங்குவதற்கு நமது பிரதேச தனவந்தர்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள் முன்வரவேண்டும். அபபோதுதான் அவரினால் தொடர்ச்சியாக பிரகாசிக்க முடியும்.

இன்று சர்வதேச வீரராக பரிணாமம் பெற்றுள்ள ரஜாஸ்கானை பாராட்டி கௌரவிக்க நமது மாவட்டமும் குறிப்பாக கிழக்கு மாகாணமும் முன்வர வேண்டும். அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டுக் கழங்களின் சம்மேளனம் மிக விரைவில் அவரைப் பாராட்டிக் கௌரவிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், அவரின் சாதனையை பாராட்டுவதாகவும் சம்மேளனத் தலைவர் ஹம்ஸா சனூஸ் தெரிவித்தார்.

தாய் நாட்டிற்காக சாதனைகள் படைக்க புறப்பட்டுள்ள கிழக்கின் இளம் சிங்கம் ரஜாஸ்கான் மென்மேலும் வெற்றிகளைத் தர வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.

No comments

Powered by Blogger.