திவிநெகும சட்ட மூலம் சிறுபான்மையினரை சிக்க வைக்கும் பொறி
(நவம்பர் மாத அழைப்பு சஞ்சிகையின் ஆசிரியர் தலைப்பு)
இன்று இலங்கையில் அரசியல் மற்றும் பத்திஜீவிகள் மட்டத்தில் பேசு பொருளாக மாறியிருக்கும் ஓர் அம்சமே ‘திவிநெகும சட்ட மூலம்’. ‘கிராம மட்டத்தில் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதார தரத்தை தரமுயர்த்துவதன் ஊடாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடடுப்பதே திவிநெகும திட்ட வரைபின் முழு முதல் நோக்கம் என்று இதன் திட்ட வகுப்பாளராகிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரச தரப்பினர்கள் வாதிட்டு வருகின்றனர். ‘நிறைவான இல்லம் - வளமான தாயகம்’ எனும் சுலோகத்துடன் இத்திட்டத்தை கிராமங்கள் தோரும் ஜனரஞ்சகப்படுத்தும் முஸ்தீபுகள் பொருளாதார அபிவிருத்ததி அமைச்சின் ஊடாக நாசுக்காக நகர்த்தப்பட்ட வண்ணம் உள்ளன. பாராளுமன்றத்தில் இச்சட்ட மூலத்தினை பவ்வியமாய் பரப்புரை செய்யும் பணியில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பம்பரமாய் சுழன்று வருகிறார். இச்சட்ட மூலத்திற்கு எதிராக எழும் எதிர்ப்புக் கணைகளை தடுத்து, முரண்பட்டோரை கூட தன் முகாமுக்குள் முடக்கச் செய்யும் பணியில் வியுகம் அமைத்து செயற்படுகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.
திவிநெகும சட்ட மூலத்தை அமுல் படுத்துவதற்கு அரச தரப்பு எடுக்கும் பிரயத்தனம் ஒருபுறமிருக்க, அதனை அமுல் படுத்த விடக்கூடாது என்பதற்கான எதிர்ப்பலைகளும் கண்டனக் குரல்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக, இச்சட்ட மசோதா பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டதும் உச்ச நீதிமன்றத்தில் ‘இது 13 ஆம் திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு சமமான அதிகார சட்டம்’ எனக் கேள்விக்குட்படுத்தி மனுத்தாக்கல் செய்யப்பட்டதுடன், ‘மாகாண சபைகளின் அதிகாரத்திற்குட்பட்ட விடயங்கள் குறித்து மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்பே பாராளுமன்றத்திற்குக் கொண்டுவர வேண்டும்’ என உச்ச நீதி மன்றம் அறிவித்துள்ளது. மாகாண சபைகளின் அங்கீகாரத்துடன் திவிநெகும திட்ட வரைபை அமுல்படுத்துவது சிலபோது சிரமசாத்தியமாகும் என்பதனை புரிந்து கொண்டு ‘வடக்கு மக்களின் தேவைகளைப் புர்த்தி செய்வதற்கு 13ஆம் திருத்தச்சட்டம் தடையாகவிருந்தால் அதைத்திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை. அவ்வாறு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் போது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசு தயார்’ என்று கோட்டாபய ராஜ பக்க்ஷயும், பஷில் ராஜ பக்க்ஷயும் அறிக்கை வேறு விட்டுள்ளனர்.
திவிநெகும சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை கூர்மையாக நோக்குமிடத்து, இதற்குள்; புதைந்துள்ள மர்மங்களையும், ஆளும் அரச தரப்பு திவிநெகும சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டும் கரிசணைக்கான காரணத்தையும் துள்ளியமாய் எம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இலங்கையில் நீருபுத்த நெருப்பாய் கொதி நிலையில் இருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசியல் சட்டயாப்பில் சேர்க்கப்பட்ட ஒரு சட்டமே 13 ஆம் திருத்தச்சட்டமாகும். மத்திய அரசின் கைகளில் அதிகாரம் கொட்டிக்கிடந்தால் அதன் மூலம் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அவர்களுக்குரிய அபிவிருத்திப் பணிகள் முறையாக நடைபெறுவதில்லை. எனவே, காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், வறுமை ஒழிப்பு, சமூக நீதியை உறுதிப்படுத்தல், வாழ்வாதார அபிவிருத்திப் பணிகள், சமூகப் பாதுகாப்பு போன்ற இன்னோரன்ன பணிகளை சுயாதீனமாய் மேற்கொள்வதற்குரிய அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் போது சிறுபான்மை இனங்கள் நன்மை பெறும். இவ்வதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும் சட்டமே 13ஆம் திருத்தச்சட்டம்.
திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம் எனும் பெயரில் புதிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, அதனை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் கீழ் கொண்டு வருவதே திவிநெகும சட்ட மூலத்தின் பிரதான நோக்கமாகும். இதன் மூலமாக சுமார் 80 பில்லியன் ரூபா பெறுமதியான பாரிய தொகை நிதியினை கையாள்வதற்கான அதிகாரம் ஒரு தனி அமைச்சுக்கு வழங்கப்படுகிறது. இதற்கமைவாக சமுர்த்தி அதிகார சபை, தெற்கு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உடரட்ட அபிவிருத்தி அதிகார சபை என்பன திவிநெகுமவின் கீழ் உள்வாங்கப்படும். அத்தோடு, 13ஆம் திருத்தச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு எந்த காணி, பொலிஸ், பாதுகாப்பு, வாழ்வாதார அபிவிருத்தி, சமூக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல், உணவுப் பாதுகாப்பு வழங்கல், வறுமையை ஒழித்தல், சமூக நீதியை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தனவோ அத்தனை அதிகாரங்களையும் மாகாண சபைகளிடம் இருந்து அப்படியே கபளீகரம் செய்து, மத்திய அரசின் கீழ் கொண்டு வருதல். அதாவது, ஏற்கனவே 13ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாகவும், உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள அதிகாரங்களையும் மறைமுகமாக மத்திய அரசாங்கத்திலுள்ள அமைச்சர் ஊடாக கைப்பற்றிக் கொள்வது.
எனவே, 13ஆம் திருத்தச்சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வலது கையால் கொடுத்த அதிகாரங்களை இடது கையால் தட்டிப்பறிக்கும் இனவாத அரசின் நாpத்தன வக்கிரகப் புத்தியின் வெளிப்பாடே திவிநெகும சட்ட மூலம்!
பதவிகளுக்காய் சோரம் போய், சமூகத்தையே பலிகடாவாக்கும் சமூக பிரக்ஞையற்ற முஸ்லிம் அரசியல் வாதிகளும், அக்கிரமம் - அநீதிகள் அரங்கேறும் போது அதனை சுட்டிக்காட்டி தட்டிக்கேட்டு சமூகத்தை வழிநடாத்தாது, அதிகார வீச்சுக்கு முன் வாய் பொத்தி மௌனியாக நிற்கும் முதுகெழும்பற்ற மார்க்க அறிஞர்களும், தலைவர்கள் எதை சொன்னாலும் சரிதான் என்று தலையசைத்து அறிவை அடகு வைக்கும் பொது மக்களும் இந்த முஸ்லிம் உம்மத்தில் உள்ளவரைக்கும் விடிவு காலம் என்பது வெகுதூரத்தில் தான்!
Post a Comment