விபத்தில் மாணவி படுகாயம் - சந்தேக நபர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை
(அனா)
வாழைச்சேனை மீறாவோடை பகுதியில் இன்று (10.11.2012) நண்பகல் 12 மணியளவில் இடம் பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவர் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் தரம் 03ல் கல்வி கற்கும் யாக்கூப் பாத்திமா ஸஹ்ரா (வயது -08) என்ற மாணவியே காயமடைந்துள்ளவராவார்.
இச் சம்பவத்தையடுத்து இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் தப்பிச் சென்றுள்ளதையடுத்து குறித்த வாகனத்தினையும் வாகனத்தில் பயணம் செய்த ஒருவரையும் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்புப் பகுதியில் இருந்து அம்பாரை நோக்கி குறித்த கப் வண்டி ஒன்று வாழைச்சேனை நாவலடி ஊடாக ஊடறுத்துச் செல்லும் வேலையில் அவ் விடத்தில் நின்ற மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் வாகனத்தை சோதனைக்காக மறித்து சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற குறித்த வாகனச் சாரதி உட்பட மேலும் சிலர் தப்பிச் சென்று மீறாவோடை உள் வீதி வழியாக தப்பிச் செல்ல எத்தனித்த வேளையில் வேகக் கட்டுப்பாடடை இழந்து மேற்படி பாடசாலை மாணவி மீது வாகனம் மோதுண்டுள்ளது.
இவ் வாகனம் மோதுண்ட சம்பவத்தில் குறித்த பாடசாலை மாணவி படுகாயம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து வாகனத்தை விட்டு விட்டு வாகனச் சாரதி மற்றும் அவருடன் பயனித்த ஒருவரம் தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையினை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த பாடசாலைச் சிறுமி வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Post a Comment