இஸ்ரேலுக்காக உளவு பார்த்த ஊடகவியலாளரே கதை கட்டுவித்தாராம்..!
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானிக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருப்பதாக வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒரு இணையதள பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த காதலை பிலாவல் பூட்டோவின் தந்தை எதிர்த்ததாகவும், ஹினா ரப்பானி காதலுக்காக தனது கணவரை விவாகரத்து செய்யவும் தயாராக இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தி பாகிஸ்தான் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹினா ரப்பானியின் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி பறி போகும் வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் கருத்து தெரிவித்து இருந்தன. இது வெறும் வதந்தி என்றும் தங்களுக்குள் காதல் எதுவும் இல்லை எனவும் ஹினா ரப்பானியும் பிலாவல் பூட்டோவும் தனித்தனியாக பேட்டி அளித்திருந்தனர்.
தற்போது, ஹினா ரப்பானி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் ஹினா ரப்பானி குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட சலாவுதின் ஷோயப் சௌத்ரி என்பவரை வங்காள தேச போலீசார் கைது செய்து உள்ளனர்.
பண மோசடி வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவின் படி அவரை கைது செய்ததாக டாக்கா காவல்துறை துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். சாஜத் உசைன் என்பவரிடம் 6.7 மில்லியன் டாக்கா மோசடி செய்ததாக சௌத்ரி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 2003 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டு மொசாட் உளவுப் பிரிவுக்காக வங்காள தேசத்தில் உளவு சேகரித்த வழக்கில் இவர் ஏற்கனவே கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினாவை ஹினா ரப்பானி நேற்று சந்தித்து பேசினார். இதைப்போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் போது வேறு ஏதும் அவதூறு செய்தி வெளியிட்டு பாகிஸ்தான் - வங்காள தேசத்திற்கிடையே பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்க சௌத்ரி முன்கூட்டியே கைது செய்யப்பட்டுள்ளார் என வங்காள தேச ஊடகங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.
Post a Comment