விடுதலை புலிகள் ஊடகங்கள் மூலம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் - ஜனாதிபதி மஹிந்த
(TM)
'ஊடகங்கள் தனிப்பட்டவரை மட்டுமல்ல, தாய் நாட்டைப் பற்றி உலக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வது ஊடகங்களின் பொறுப்பாகும். ஒரு காலத்தில் என்னையும் அமைச்சரவையின் நிரூபர் என்றனர். புலிகள் இன்று ஆயுதங்களினால் அல்ல, ஊடகங்களினூடாகவே போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்கு மடிகணினிகளும் சிரேஷ்ட கலைஞர்களுக்ககு வட்டியற்ற வாகனம் கொள்வனவு செய்வதற்கான கடன் திட்டத்தினை வைபவ ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வு, அலரி மாளிகையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி கூறுகையில்,
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக எழுத வேண்டும். சுதந்திரமாக கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கான சுதந்திரம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், ஊடகவியலாளர்கள் வாழ்க்கையை உயர்த்தினால் மட்டுமே அவர்கள் சுதந்திரமாக செயற்படுவார்கள். இல்லையேல், யாருக்கும் அடிபணிந்துவிடுவார்கள்.
நாங்கள் யாருக்கும் கடன்கொடுக்கவில்லை. இது எங்களுடைய கடப்பாடாகும். புலிகள் அமைப்பினர் உலகில் ஊடகங்களை நடத்துவது உங்களுக்கு தெரியும். ஊடக நிறுவனங்களை அப்படியே விலைக்கு பெற்றுவிடுகின்றார்கள்.
ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காகவும் பலியான தங்களுடைய அங்கத்தவர்களின் குடும்பங்களையும் பெற்றோர்களையும் காப்பாற்றி அவர்களுக்கு வாழ்வளிப்பதற்காகவும் காசு கொடுத்தவர்கள் இன்று ஊடகங்களை விலைக்கு வாங்குவதற்கு பணம் கொடுக்கின்றனர்.
புலிகள் இன்று ஆயுதங்களினால் அல்ல, ஊடகங்களினூடாக போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர். ஊடகங்கள் தனிப்பட்டவரை மட்டுமல்ல, தாய் நாட்டைப் பற்றி உலக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வது ஊடகங்களின் பொறுப்பாகும். ஒரு காலத்தில் என்னையும் அமைச்சரவையின் நிரூபர் என்றனர்' என்றார்.
Post a Comment