Header Ads



புதிய நியமனத்தை மறுபரீசிலனை செய்யவுள்ளேன் - அதிபர் முபாரக்


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் கடமைகளை பொறுப்பேற்குமாறு கல்முனையின் கல்விச் சமூகத்திடமிருந்து இதுவரை எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என இப்பாடசாலைக்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள யூ.எல்.ஏ.முபாரக் தெரிவித்தார்.

இதன் காரணமாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக நான் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கல்முனை பிரதேச மக்களிற்கு விருப்பமில்லை என அறிய முடிகின்றது என அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைவாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபரை தெரிவு செய்வற்கான நேர்முக பரீட்சை கடந்த நவம்பர் 1ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு மற்றும் காணி அமைச்சினால் நடத்தப்பட்டது.

இதனையடுத்து, காத்தான்குடி மத்திய கல்லூரியில் கடமையாற்றும்  யூ.எல்.ஏ.முபாரக் கடந்த நவம்பர் 15ஆம் திகதி புதிய அதிபராக  நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் இதுவரை அவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் கடமைகளை பொறுப்பேற்கவில்லை.

இது தொடர்பில் அதிபர் யூ.எல்.ஏ.முபாரகை தொடர்புகொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

'கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபாராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த 15ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு மற்றும் காணி அமைச்சினால் எனக்கு அறிவிக்கப்பட்டது. 
எனினும் தற்போது நான் கடமையாற்றுவது மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள காத்தான்குடி மத்திய கல்லூரியலாகும். ஆனால் எனக்குரிய புதிய நியமனம் மாகாண அரசாங்கத்தின் கீழுள்ள பாடசாலையிலாகும்.

எனவே தேசிய பாடசாலையிலிருந்து மாகாண பாடசாலைக்கு விடுவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு தற்போது நான் விண்ணப்பித்துள்ளேன்.

ஆனால் அங்கிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கல்வி அமைச்சின் பதில் கிடைத்த பின்னரே கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் கடமைகளை பொறுப்பேற்பேன் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளேன். 

எனினும், தனது புதிய நியமன அறிவிப்பை அறிந்த பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா உட்பட காத்தான்குடி கல்வி சமூகத்தினர் தொடர்ந்து காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபராக செயற்படுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் கடமைகளை பொறுப்பேற்குமாறு கல்முனையை சேர்ந்த யாரும் தன்னுடன் இதுவரை கோரவில்லை. எனவே எனது புதிய நியமனம் தொடர்பில் மறுபரீசிலனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன்' என்றார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் எம்.ரீ.எம்.நிசாமை தொடர்புகொண்டு வினவியபோது,

'நீதிமன்ற உத்தரவிற்கமைய நடைபெற்ற நேர்முக பரீட்சையின் மூலம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக யூ.எல்.ஏ.முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் தற்போது கடமை விடுப்பிற்கு விண்ணப்பித்துள்ளமையினால் கால அவகாசம் வழங்குமாறு அதிபர் முபாரக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது, இவரின் கோரிக்கைக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் இந்த கோரிக்கைக்கு நீண்ட கால அவகாசம் வழங்க முடியாது.  அதுவரை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பதில் அதிபராக ரஹ்மானே கடமையாற்றுவார்.

எவ்வாறாயினும் அதிபர் முபாரக்கின் பதிலை பொறுத்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும். எனினும் நேர்முக பரீட்சையில் இரண்டாம் நிலையிலுள்ள நபரை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக நியமிப்பதா அல்லது புதிதாக நேர்மூக பரீட்சையினை மேற்கொள்வதாக என்பதை கிழக்கு மாகாண கல்வி அமைச்சே தீர்மானிக்கும்' என்றார்.

No comments

Powered by Blogger.