ஹமாஸ் போராளிகளிடம் ஆளில்லா விமானம் - அமெரிக்க பத்திரிகை தகவல்
(tn)
இஸ்ரேலின் மிகப் பெரிய மற்றும் வர்த்தக நகரான டெல் அவிவ், ஜெரூசலம் வரை காசாவிலிருந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஹமாஸ் தனது ஆயுத சக்தியை பலப்படுத்தியுள்ளது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல் அவிவில் நான்காவது நாளாகவும் சைரன் ஒலி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர்.
எனினும் டெல் அவிவின் கடலோர ஹோட்டல்கள், பூங்காக்கள் மற்றும் வீதிகள் 18-11-2012 தினத்தில் வெறிச்சோடி கிடந்ததாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டெல் அவிவ் மக்கள் தற்போது தாக்குதலுக்கு பழகிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார். “டெல் அவிவ் மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வடக்கு, தெற்கு இஸ்ரேலை எப்போதும் ரொக்கெட்டுக்கள் தாக்கி வருகிறது. ஆனால் டெல் அவிவில் இவ்வாறு இதற்கு முன்னர் நிகழ்ந்ததில்லை” என்று ஜொக்கர் என்பவர் குறிப்பிட்டார்.
ஈரானில் தயாரிக்கப்பட்ட பஜ்ர்-5 என்ற தொலை தூரம் தாக்கும் ரொக்கெட் மூலமே ஹமாஸ் டெல் அவிவ் வரை தாக்கியுள்ளது. இந்த ரொக்கெட் 75 கிலோ மீற்றர் வரை சென்று தாக்கக் கூடிய வலு கொண்டது.
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவு தளபதி அஹமட் அல் ஜபரியே ஹமாஸின் ஆயுத சக்தியை வலுப்படுத்தியுள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தவிர்க்கவே இஸ்ரேல் அவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் ஹமாஸிடம் 100 க்கும் அதிகமான தொலை தூரம் தாக்கும் ரொக்கெட்டுகள் இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது. இவ்வாறான ரொக்கெட்டுக்கள் ஈரானில் இருந்து கப்பலூடாக சூடானுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து டிரக் வண்டியூடாக எகிப்தின் சினாய் பாலைவனத்தை கடந்து காசாவுக்கு கொண்டு வரப்படுவதாக இஸ்ரேல் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான கடத்தல் பாதையில் ஹமாஸ் சம்பளம் பெறும் ஊழியர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோன்று ஈரான் தொழில்நுட்ப நிபுணர்களும் காசா சென்றுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.
ஜபரியின் கீழ் ஹமாஸ் இராணுவப் பிரிவு தமது சொந்த ஆயுத உற்பத்தியையும் மேம்படுத்தியுள்ளது. குறிப்பாக தொலை தூரம் செல்லும் ரொக்கெட் மற்றும் ஆளில்லா விமானங்களும் ஹமாஸால் தயாரிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பை மேற்கோள் காட்டி “வொஷிங்டன் போஸ்ட்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு ஆகியன ஈரான் நிபுணர்களின் உதவியுடன் தமது ஆயுத பலத்தை மேம்படுத்திக் கொண்டுள்ளது” என முன்னணி இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வொஷிங்டன் போஸ்டுக்கு தெரிவித்துள்ளார். அதேபோன்று ஹமாஸிடம் ஆளில்லா விமானங்களும் இருப்பதற்கு ஆதாரம் உள்ளது. இவை அனைத்தும் ஜபரியின் முயற்சியால் அமைந்தது. அவர் சாதுர்யமாக சிந்திக்கக் கூடியவர் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் அண்மைக்காலமாக ஹமாஸின் ஆயுத விநியோகச் சங்கிலியை உடைக்கும் இலக்கில் தாக்குதல்களை முன்னெடுத்து வந்துள்ளது. கடந்த ஒக்டோபரில் சூடானில் ஆயுதக் கிடங்கொன்றுக்கு வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு காசாவுக்கு கொண்டு செல்ல வைக்கப்பட்ட ஆயுதங்களே அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல ஆண்டுகளாக இஸ்ரேல், சூடானில் தாக்குதல் நடத்திவருவதாக சூடான் அரசு குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக வாகனத் தொடரணிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
தவிர கடந்த 2010 இல் டுபாய் ஹோட்டல் அறையில் வைத்து ஹமாஸ் முக்கிய அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். அவர் ஆயுதக் கடத்தலில் முக்கிய புள்ளி என கூறப்படுகிறது. இவரை இஸ்ரேலின் உளவுப் பிரிவான மெசாட் கொன்றதாக நம்பப்படுகிறது.
கடந்த 2005 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரும் போது ஹமாஸ் அமைப்பிடம் ஒரு மைல் தூரம் சென்று தாக்கக் கூடிய ரொக்கெட்டுகளே இருந்தன. அது பின்னர் 12 மைல்களாக மேம்படுத்தப்பட்டது. எனினும் 2007 ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. “இந்த காலப் பிரிவில் ஜபரி, ஹமாஸ் ஆயுதக் குழுவை ஒரு இராணுவ பிரிவாகவே மாற்றினார்” என ஓய்வு பெற்ற இஸ்ரேல் இராணுவ ஜெனரல் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இஸ்ரேல், காசாவில் இருந்து வரும் ரொக்கெட்டுகளை இடை மறிக்க தனது ஏவுகணை பாதுகாப்பு முறையான “அயன் டோம்மை” பயன்படுத்தி வருகிறது. இந்த அயன் டோம்மையும் கடந்து நூற்றுக்கணக்கான ரொக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் விழுந்துள்ளன. இந்த தாக்குதல்களில் இஸ்ரேலின் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
Post a Comment