சாதனைகள் பல படைத்த யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகம்
(முஹம்மத் ஜான்ஸின்)
விளையாட்டத்துறை என்பது தனிமனிதனதும் சமூகத்தினதும் ஒரு நாட்டினதும் திறமையையும் பலத்தையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உதவுகின்றது. ஆரம்ப கால விளையாட்டுத் துறைகளாக குதிரையேற்றம், வாள் சண்டைகள், மல்யுத்தம், அம்பு எய்தல் என்பன காணப்பட்டன. பின்னர் பல்வேறு வகை விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்ப்பட்டன. அவற்றில் கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் பிரபள்யமான விளையாட்டுகளில் கால்பந்தாட்டம், றக்பி, கிறிகட் போன்றன தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இந்த உதைபந்தாட்டத்துறையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஒரு காலத்தில் தொடர் சாதனைகளைப் படைத்து வந்தார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
யாழ்ப்பாணத்தில் 2.5 சதவிழுக்காடாக வாழ்ந்த முஸ்லிம்களிடத்தில் ஆங்கிலேயர் மூலமாக கால்பந்தாட்டம் 1890களில் அறிமுகமானது. ஆரம்பத்தில் முஸ்லிம்கள் தமது கால்பந்தாட்ட பயிற்சிகளை முத்து முஹம்மது வெளியில் (முத்தர் வெளி) தான் மேற்கொண்டு வந்தனர். இதன் பிறகு 1940களில் ஜின்னா மைதானம் சிறிய ஒரு மைதானமாக உருவாக்கப்பட்டிருந்தது. 1956 களில் எஞ்சிய காணிகள் வாங்கப்பட்டு ஜின்னா மைதானம் தற்போதுள்ள அளவுக்கு மாற்றப்பட்டது.
ஆனால் ஜின்னா மைதானம் ஆரம்பிக்க முன்னரே யாழ் மத்திய கல்லூரியின் கால்பந்தாட்டக் குழுவின் தலைவராக முஸ்லிம் ஒருவர் இருந்துள்ளார். இந்த விடயத்தைப்பற்றி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற பல முஸ்லிம் மாணவர்களிடம் கேட்ட போது அவர்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை. புரட்சிகரமான சிந்தனைகளை சிறுவயது முதல் கொண்டிருந்தவர்களுக்கும் அது தெரியவில்லை. ஆனால் யாழ் மத்திய கல்லூரியின் கிறிக்கட் வரலாற்றிலும் கால்பந்தாட்ட வரலாற்றிலும் அந்த முஸ்லிமின் பெயர் இடம்பெற்றுள்ளது.
1963 இல் ஒஸ்மானியா கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம்களில் கால்பந்தாட்டத்தை விளையாடக்கூடியவர்கள் ஒஸ்மானியாக் கல்லூரியையே தெரிவு செய்தனர். இருந்த போதிலும் காலத்துக்கு காலம் சில சிறந்த முஸ்லிம் வீரர்களை யாழ் மத்திய கல்லூரியும் யாழ் இந்துக் கல்லூரியும் வழங்கின.
1960களில் யாழ் முஸ்லிம்களிடையே இரண்டு கழகங்கள் பெயர் பெற்று விளங்கின. ஒன்று ஜொலி ஸ்ரார் கழகம் மற்றது கிரஸண்ட் கழகம். ஜொலி ஸ்ரார் கழகத்தில் மர்ஹும் எஸ்.எச்.தாஹிர் (ராசதுரை), மர்ஹும் கச்சுதுரை, மர்ஹும் என்.எம்.ஏ.கபூர் மாஸ்ரர், மர்ஹும் முத்துராசா, மர்ஹும் முஹிதீன் தம்பி றபீக், மர்ஹும் பிர்தௌஸ், மர்ஹும் கச்சுதுரை போன்றவர்கள் பிரபல வீரர்களாக விளங்கினர். அதே வேளை கிரஸண்ட் கழகத்தில் மர்ஹும் ஏ.எச். ஹாமீம் (அதிபர்), மர்ஹும் எம்.எம்.மக்பூல் (புயு), எம்.எம்.சாபிர், எம்.ஏஇசி.எம். இக்பால், என்.எம்.எஸ்.சுபைர் , எம்.ஹம்துன் (உதவி அதிபர்), லுக்மான், சுலைமான், கோயா முத்துராசா, ஐதுரூஸ் சாகுல் ஹமீத் , அப்துல் ரஹீம், ஏ.நியாஸ், எம்.ஏ.சி.சனூன், எம்.ரி.முஹம்மத் சரீப், எம்.கமால், எஸ்.எச். அப்துல் சலாம் (நுழு) ஆகியோர் பிரபல வீரர்களாக விளங்கினர்.
1960களின் இறுதியில் ஜொலி ஸ்ரார் கழகத்தில் மூஸின்(பெத்தம்மா), மர்ஹும் ஏ. ஜலீல் மாஸ்ரர், ஏ.எல்.சபருல்லாஹ், ஏ.எல்.கபூர், மர்ஹும் எம்.எம்.மன்சூர் ஆகியோர் இடம் பெற்றனர். 1968ஆம் ஆண்டு மர்ஹும் எம்.எம்.இஸ்ஸதீன் ஹாஜியார் மற்றும் எம்.எஸ்.சுகார்னோ ஆகியோர் சேர்ந்து சம்சுன் கழகத்தை உறுவாக்கினர். ராசதுரை அவர்கள் ஜொலி ஸ்ராரிலிருந்து பிரிந்து ரைகர் (புலி) விளையாட்டுக்கழகத்தை உருவாக்கினார். முற்றிலும் சிறுவர்களைக் கொண்ட கட்டியமைக்கப்பட்ட இந்த கழகத்தின் பல வீரர்கள் பின்னர் யாழ் முஸ்லிம் அணியில் இடம் பிடித்திருந்தனர். 1975 ஆம் ஆண்டு ஒஸ்மானியா கல்லூரி அணி யாழ் மாவட்ட சம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து அதே விளையாட்டு வீரர்களைக் கொண்டிருந்த ரைகர்ஸ் அணியும் பிரபள்யமானது. எம்.எம். மன்சூர் (செட்டியார்) சன்ரைஸ் கழகத்தை இக்காலத்தில் உருவாக்கினார். இக்கழகங்கள் யாழ் முஸ்லிம்களின் கால்பந்தாட்டத் துறையை வளர்த்து எடுப்பதில் உறுதுணையாக இருந்தன. வௌ;வேறு முஸ்லிம் அணிகள் வௌ;வேறு சாம்பியன் பட்டங்களை பெற்று யாழ்ப்பாணத்தில் பெயர் பெற்றிருந்தன. இந்நிலையில் முஸ்லிம் கழகங்களிடையே நடக்கும் போட்டிகளில் மோதல்களும் இடம்பெற்றன. இதனால் 1981இல் மர்ஹும்களான ஹாமிம் மாஸ்ரர், மக்பூல் (அரசாங்க அதிபர்) மற்றும் லுக்மான் ஆகியோர் ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சகல கழகங்களையும் ஒன்றினைத்து 'யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகத்தை' உருவாக்கினர்.
1981 முதல் பல வெற்றிகளை அள்ளிக்குவித்த யாழ் முஸ்லிம் அணி 1983இல் பல வீரர்கள் ஒரே நேரத்தில் சவுதியில் வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றதால் 1983, 1984 ஆம் ஆண்டுகளில் சில பின்னடைவுகளைச் சந்தித்தது. இருந்த போதிலும் முஸ்லிம் வீரர்களின் விளையாட்டை ரசிப்பதற்காக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மைதானங்களுக்கு வருவர். தமிழ் சமூகத்தைச் சேர்ந்த விளையாட்டை ரசிக்கும் மக்களும் முஸ்லிம் விளையாட்டுக் கழகத்தின் ரசிகர் கூட்டமாக இருந்ததை என்றுமே மறக்க முடியாது. யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டை ரசிப்பதற்காக வேலணை, இளவாளை, மணல்காடு, புத்தூர' போன்ற தூரப் பிரதேசங்களிலிருந்தும் தமிழ் ரசிகர்கள் வருவார்கள். இளவாளை சென் ஹென்றிஸ் கல்லூரியை நிர்வாகித்த அன்பு ராஜநாயகம் மற்றும் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் போன்றவர்கள் ஒவ்வொரு வருடமும் யாழ் முஸ்லிம் அணிக்கும் தமது சென் ஹென்ரீஸ் பாடசாலை அணிக்குமிடையில் உதைப்பந்தாட்டப் போட்டியொன்றை ஏற்பாடு செய்து நடக்கும் போட்டியையும் கண்டு ரசிப்பர்.
1984 ஆம் ஆண்டு யாழ் முஸ்லிம் அணி கடுமையான வீரர் தட்டுப்பாட்டை எதிர் கொண்டது. இதனால் சிறுவர்களையும் தமது அணியில் உள்வாங்கியது. எஸ்.எச்.இஹ்திசாம், ஜான்சின் ஆகிய பாடசாலை மாணவர்கள் கழகத்துக்காக விளையாடினர். இவர்களுடன் ஏ.சி. ஆஸாத், ஏ.ஜி. நகீப், நவ்ஸாத் மற்றும் பலர் சேர்ந்து கழகத்தை மீளமைக்க உதவினர். கழகம் பல சவால்களை எதிர்கொண்ட போதும் அதனைக் கைவிடாது தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றவர் எம்.எம்.மன்சூர் ஆவார். 1985 இல் வெளிநாடு சென்றிருந்த சில வீரர்கள் நாடு திரும்பியிருந்தனர். எம்.எஸ்.சலீம். ஏ.எம்.ஜலீஸ், ஏ. நஸீர், ஏ.நவாஸ்,அப்துல் வஹாப் ஜமீல், எம்.ரி.நவாஸ் போன்றவர்கள் நாடு திரும்பி மீண்டும் கழகத்தில் இணைந்ததால் கழகம் புத்துயிர் பெற்றது. எம்.ரி.நஸார்,எம்.எம். ஜஸுர்,எம்.எம்.முனாஸ், அஜு, கமால் அஸ்கர்,ரி. குவைஸ் ஆகியோரும் பயிற்சிகளை எடுத்து சிறப்பாக விளையாடி கழகத்தை முன்னேற்றினர். 1987ஆம் ஆண்டு முஹைமின், நஸுர், சித்தீக், சம்சீர், ஜாபிர், மற்றும் பல புதுமுக வீரர்கள் கழகத்தில் இணைந்தனர். கழகத்தின் புதிய அணியில் நஸார், ஜான்ஸின், நசூர், இஹ்திசாம், ஆஸாத், ஜலீஸ், முனாஸ், முஹைமின், சித்தீக் அஸ்கர், அஜு போன்ற அநேகமான வீரர்கள் இரண்டு கால்களாலும் பந்தை உதைக்கக் கூடிய பயிற்சியை எடுத்திருந்தனர். இதனால் யாழ்ப்பாணத்தின் விளையாட்டக் கழகங்கள் எல்லாம் யாழ் முஸ்லிம் அணியை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 1986 முதல் 1990ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் அசைக்க முடியாத கழகமாக யாழ் முஸ்லிம் அணி உருவெடுத்தது.
இந்த வெற்றிப் பாதையில் 1990ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்கது. 1990 ஜுன் மாதம் 11ஆம் நாள் கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்ட கால்பந்தாட்ட போட்டியில் பங்கு பற்ற யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப் படுத்த யாழ் முஸ்லிம் அணி தெரிவு செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த 8 இலட்சம் மக்களில் வெரும் 20000 பேராக காணப்பட்ட முஸ்லிம்களிலிருந்து ஒரு அணி தெரிவு செய்யப்பட்டது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்படவேண்டிய ஒரு விடயம். முதல் ஆற மாதங்களில் நடந்த எல்லா போட்டிகளிலும் யாழ் முஸ்லிம் அணி சம்பியனாக வந்ததே அதற்கான காரணமாகும். தூயஓளி வெற்றிக் கிண்ணம், யுபுயு வெற்றிக்கிண்ணம், யுபுயு பிரிவுகளுக்கிடையிலான வெற்றிக்கிண்ணம், யாழ் உதைபந்தாட்ட லீக் தலைவர் கிண்ணம், யாழ் மேயர் வெற்றிக் கிண்ணம் போன்ற அனைத்து போட்டிகளிலும் யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகம் வெற்றி கொள்ளமுடியாத சம்பியனானது. இந்தப் போட்டிகள் அனைத்துக்கும் அணித் தலைவராக எம்.எஸ்.எம்.ஜான்ஸின் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
1990 ஜுன் 10ஆம் திகதி இடம்பெற்ற தூய ஒளி வெற்றிக் கிண்ணத்துக்கான போட்டியில் யாழ் முஸ்லிம் அணி சென்மேரிஸ் அணியை 3இக்கு 1 கோல் கணக்கில் வெற்றியீட்டியது. அன்று வரலாறு காணாத ரசிகர் கூட்டம் மைதானத்தில் அலைமோதியது. பரிசளிப்பு முடிந்த பின்னர் வெளியேறிய கழகத்தை முப்பது மோட்டார் சைக்கிள்கள், நான்கு வேன்கள், ஒரு கார், 1200 சைக்கிள்களில் முஸ்லிம் ரசிகர்கள் பவணியாக கூட்டி வந்தனர். கோட்டையை நெருங்கும் போது அங்கு காவலில் நின்ற புலிகள் வானத்தை நோக்கிச் சுட்டதுடன் சத்தமிடாமல் செல்லுமாறு மிரட்டினர். புலிகளின் காவல் நிலையத்தை தாண்டியதும் மீண்டும் வெற்றிக் கோசங்கள் யாழ் ஆஸ்பத்திரி வீதி, கே.கே.எஸ்.வீதி மற்றும் மானிப்பாய் வீதி எங்கும் முழங்கின. இதன் பிறகு சோனகதெருவில் அனைத்து வீதிகளுக்கும் கழக வீரர்கள் பவணியாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் பிறகு விஷேட சிற்றுண்டிகள் வீரர்களுக்கு வழங்கப்பட்டன. மறுநாள் கொழும்புக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையில் மீண்டும் சண்டை தொடங்கி விட்டதாக செய்தி கிடைத்தது. கொழும்பு வந்த அணியின் வீரர்கள் மீண்டும் யாழ் செல்லமுடியாமல் கொழும்பிலுள்ள விளையாட்டு அமைச்சு மைதானத்தில் தங்கியிருந்தனர். ஒவ்வொரு திக்கிலும் பிரிந்து சென்ற கழக வீரர்கள் மீண்டும் 5 மாதங்களின் பின்னர் புத்தளத்தில் ஒன்று சேர்ந்தனர். புத்தளத்தில் இவர்கள் செய்த சாதனைகள் பிரிதொரு கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் எழுதப்படும்.
இந்த யாழ் முஸ்லிம் அணி தற்போது புத்தளத்தில் யுனைடட் கழகம் என்ற பெயரில் விளையாடி வருவதுடன் 1990 ஆம் அண்டு முதல் பல வெற்றிகளையும் பெற்றுள்ளது. விளையாட்டில் இவர்கள் தமது முன்னோரைப் போன்றில்லாததற்கு காரணம் யாழ் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனியான மைதானம் இல்லாமையே. அப்படியொரு மைதானம் இருக்கும் பட்சத்தில் பாடசாலை பருவம் முதல் மாணவர்களை விளையாட்டுத்துறையிலும் ஈடுபடுத்தி சிறந்த வீரர்களை கழகம் உருவாக்கக் கூடியதாகவிருக்கும். இங்கிலாந்தில் வாழும் புலம்பெயர் யாழ் முஸ்லிம் சகோதரர்கள் மைதானத்துக்கு காணியொன்றை வாங்கிக் கொடுத்துள்ளதை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். இந்த மைதானம் சரியான முறையில் செப்பனிடப்பட்டு ஒரு கால் பந்தாட்ட மைதானமாக மாற்றப்பட வேண்டியுள்ளது. இதற்கான முயற்சியையும் குறிப்பிட்ட சகோதரர்கள் மேற்கொள்வதாக அறியப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதை எப்படி எமது அசையாச் சொத்துக்கள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றனவோ அதே போன்று யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வீராதி வீர முஸ்லிம்களை இந்த விளையாட்டுத் துறை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது. 1980களில் விளையாடிய யாழ் முஸ்லிம் விளையாட்டுக்கழகத்தின் பல வீரர்கள் மறைந்து விட்ட போதிலும் அவர்களின் நினைவுகள் இன்றும் கால்பந்தாட்ட ரசிகர்களின் மனதில் நின்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் யாழ் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தி விளையாடிய யாழ் முஸ்லிம் உதைப்பந்தாட்ட அணி புத்தளத்திலும் யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்து இயங்க வேண்டுமென்பதும் 1990களைப் போன்று வெல்லப்பட முடியாத சிறந்த கழகமாக மீண்டும் வரவேண்டுமென்பதுமே என்னைப் போன்ற முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர்களின் ஆசையாகும்.
Unable to remember any Muslims captaining Jaffna Central soccer team, but there were Jaffna Muslims represented Jaffna Central soccer team. Names I could remember were Jabir (Jiffry's bro) and K.M.A Raheem. I think one Jamaldeen played too, but he was from Mannar.
ReplyDeleteJaffna Central cricket team was captained by M.S.Nazeer. M.S.Aboobucker and M.S.Rameez were prominent players one time or another. M.Y.A. Fowzan had captained St. Jones college cricket team.