புலிகளுக்கு எதிராக வளர்க்கப்பட்ட முதலைகள் கிண்ணியா மீனவர்களை அச்சுறுத்துகிறதாம்..!
கிண்ணியா கடலில் நடமாடும் முதலைகளால் மீனவர்கள் தமது தொழிலை அச்சத்துடனே மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறுகின்றனர். சீனன்குடா விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட முதலைகளே இவ்வாறு நடமாடுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனன்குடா விமான நிலையத்தை விடுதலைப் புலிகள் கடல் வழியூடாகத் தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாகவும், அத்தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே வெள்ளக்கல் எனும் பகுதியில் இந்த முதலைகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளன என்று கூறப்பட்டது.
எனினும், தற்போது நாட்டில் அமைதியான சூழல் ஏற்பட்டதற்குப் பின்னர் அந்த முதலைகள் பராமரிக்கப்படாததனால் அவை கடலின் பல பகுதிகளுக்கும் சென்று மீனவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
வெள்ளக்கல், சேத்துக்குடா, ஊத்தமோலடி, நாச்சிக்குடா, சல்லிக்களப்பு, பட்டியடி, கொப்படி, மூங்கில்கல், செம்மலைக்குடா உள்ளிட்ட பல பகுதிகளிலும் முதலைகள் நடமாடித் திரிகின்றன என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த முதலைகள் வளர்க்கப்பட்டவையா அல்லது வேறு பகுதிகளில் இருந்து வந்தனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எது எவ்வாறு இருந்த போதிலும் நூற்றுக் கணக்கான மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முதலைகளால் ஏதும் ஆபத்துகள் ஏற்படுவதற்கு முன்னர் இதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும் என்று மீனவர்கள் கூறுகின்றனர். un
Post a Comment