இலந்தைக்குள முஸ்லிம்களை சொந்தவிடத்தில் மீள்குடியேற்ற வலியுறுத்து
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
திருகோணமலை மாவட்டத்தில் இலந்தைக் குளம் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய முஸ்லிம் மக்களை அவர்களது சொந்தக் கிராமத்தில் மீள்குடியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கையெடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், தேசிய மரபுரிமை அமைச்சின் அலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தேசிய மரபுரிமை அமைச்சர் பேராசிரியர் ஜகத் பாலசூரிய தலைமையில் பாராளுமன்றக் கட்டிடத்தில் இடம் பெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்திலேயே பாராளுமுன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இதனை முன் வைத்தார்.
இலந்தைக் குளம் கிராமத்தில் 1983 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை மற்றும் பள்ளிவாசல்கள் என்பன அங்கு காணப்படுவதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், தற்போது அங்கிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் மீள்குடியேற செல்ல முற்படும் போது,மரபுரிமை அமைச்சின் அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்து வருவது குறித்து அப்பிரதேச மக்கள் தமது ககவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் சுட்டிக்காட்டினார்.
இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜகத் பாலசூரிய, அடுத்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் முழுமையான அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேலும் கூறினார்.
Post a Comment