முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டால் அமெரிக்க, இஸ்ரேல் அட்டகாசத்தை தடுக்கலாம்
(எஸ்.எம்.அறூஸ்)
இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்டுவரும் மோசமான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு அங்கு அமைதி நிலவ ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலில் இதுவரை 52 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபையும், உலக சண்டியன் அமெரிக்காவும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கின்றனர். அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதை அங்கீகரிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகள் முஸ்லிம் நாடுகளுக்குள் தனது மூக்கை நுளைத்து அதனை பிளவுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்த விடயமாகும்.
முஸ்லிம்கள் உலகில் பலம் பொருந்தியவர்களாக இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தனது ஒவ்வொரு செயற்பாட்டிலும் முன்னிற்கும் அமெரிக்கா முஸ்லிம் நாடுகளில் ஏற்படும் உள்ளுர் பிரச்சினைகளில் தனது மூக்கை நுளைத்து அந்நாடுகளை சின்னாபின்னாப் படுத்தி ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாகுவதற்கு காரணமாக இருந்து வருகின்றார்கள்.
இன்று ஒரு நாட்டின் மீது பாரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் அமெரிக்கா அதனை தட்டிக்கேட்காது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றமை மிகக் கவலைக்குரிய விடயமாகும். இதனை முஸ்லிம்கள் அனைவரும் கண்டிக்கவேண்டும்.
; இப்படி என்றால் ஐக்கிய நாடுகள் சபையும் இதில் தலையிடாது மௌனமாக உள்ளது. முஸ்லிம் நாடுகளை அழிப்பதில் இவர்களுக்கு ஒருமித்த கருத்து உள்ளது என்பதை இப்படியான சம்பவங்கள் மூலம் நாம் தொடர்ச்சியாக அறிந்து வருகின்றோம்.
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் உணவுக்காக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இது மிகக் கவலைக்குரிய விடயமாகும். முஸ்லிம் நாடுகள் உடனடியாக ஒன்றுகூடி இது விடயத்தில் காத்திரமான நடவடிக்கையில் இறங்க வேண்டும். முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு ஒரு அணியில் செயற்படுவார்களாயின் அமெரிக்கா போன்ற மனித படுகொளையாளியின் அட்டகாசத்தையும் இஸ்ரேலின் அட்டகாசத்தையும் தடுத்து நிறுத்தலாம்.
இவ்வாறான கஸ்டமான காலகட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரும் இறைவனிடம் அந்த மக்களுக்காக பிரார்த்திக்குமாறும்கேட்டுக் கொள்கின்றேன். என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Post a Comment