Header Ads



பலஸ்தீன் தேசத்தை விட்டுக்கொடுக்கும் அப்பாஸ் - சீறீப் பாய்கிறது ஹமாஸ்



(TN)

பலஸ்தீன நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், தான் பிறந்த சாபத் நகர் இஸ்ரேலுக்கு சொந்தமானது என்றும் தமக்கு அங்கு வாழ உரிமை இல்லை என்றும் இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த கருத்துக்கு பலஸ்தீனின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

மஹ்மூத் அப்பாஸ் 1967க்கு முன்னரான எல்லையைக் கொண்டு மேற்குக்கரை மற்றும் காசாவை உள்ளடக்கிய பலஸ்தீன தேசத்தை அமைக்க முயற்சித்து வருகிறார். எனினும் அப்பாஸ் தமது இறையாண்மை கொண்ட பகுதியையும் தந்திரமாக இணைக்கப்பார்ப்பதாக இஸ்ரேல் அண்மையில் குற்றம்சாட்டியது. 

இந்நிலையில் இஸ்ரேலிய தொலைக்காட்சியான ‘சனல் 2 டிவி’க்கு அப்பாஸ் கடந்த வியாழக்கிழமை பேட்டி அளித்தார். அதில் தாம் சாபத் நகரில் பிறந்த அகதி என்று கூறினார். ஆனால் தமக்கு மீண்டும் சாபத் நகருக்கு செல்லும் நோக்கம் இல்லை எனவும் அவர் கூறினார். ‘எனக்கு சாபத் நகரைப் பார்க்க உரிமை இருக்கிறது. ஆனால் அங்கு வாழ்வதற்கு அல்ல” என்று கூறினார்.

‘பலஸ்தீனம் என்பது 1967 ஆம் ஆண்டு எல்லைக்கொண்டது. கிழக்கு ஜெரூசலம் பலஸ்தீனின் தலைநகரம். நான் ஒரு அகதி. நான் ரமல்லாவில் வாழ்கிறேன். மேற்குக் கரையும், காசாவும் பலஸ் தீனமாகும். இவை தவிர்ந்தவை இஸ்ரேலுடையது” என்றும் மஹ்மூத் அப்பாஸ் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.

எனினும் மஹ்மூத் அப்பாஸின் இந்தப் பேட்டிக்கு பலஸ்தீனின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. 

“1967இல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மாத்திரமே பலஸ்தீனம் என்று அப்பாஸின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தேசத்துரோகமானது. இதன் மூலம் மீளத் திரும்புவது முழுமையாக நிராகரிக்கப்படுகிறது” என்று ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் சமி அடி அஹ்ரி கூறியுள்ளார். இது அப்பாசின் தனிப்பட்ட கருத்து என்றும் அவரது கலாசாரத்தை வெளிக்காட்டுவதாகவும் கூறியுள்ள அஹ்ரி இது பலஸ்தீன தேசத்தின் நிலைப்பாடல்ல என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பலஸ்தீன் அகதிகள் மீண்டும் தனது நிலத்திற்கு திரும்புவதற்கு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இஸ்ரேல் உருவாக்கப்பட்ட 1948-49 மற்றும் 1967 யுத்தங்களின் போது ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறினர். இவர்கள் தற்போது மேற்குக்கரை, காசா, ஜோர்தான், சிரியா மற்றும் லெபனான் அகிய நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு 50 இலட்சம் பலஸ்தீன் அகதிகள் உள்ளதாக ஐ. நா. கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.