அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் ஷிராணி பண்டாரநாயக்கா
கொழும்பில் இருந்து செயல்படும் நீலகந்தன் மற்றும் நீலகந்தன் என்ற சட்ட நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தலைமை நீதிபதி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தேசிய வளர்ச்சி வங்கியில் மட்டுமே கணக்கை வைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
தான் செயல்பாட்டில் வைத்திருந்த அனைத்து வங்கிக் கணக்குகள் குறித்த விபரங்களையும் தலைமை நீதிபதி தனது சொத்துக்கள் விபரத்தோடு அரசிடம் கொடுத்திருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்கியில் ஷிரானி பண்டாரநாயக பெயரில் பணம் ஏதும் இல்லாத சில பழைய இயங்காத கணக்குகள் இருப்பதாக தேசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதிக்கு முன்னதாக வேறு சில வங்கிகளிலும் செயல்படாத சில வங்கிக் கணக்குகளை தமது வாதி வைத்திருக்கலாம் என்றும் அந்த சட்ட நிறுவனம் கூறியுள்ளது.
தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின் முக்கிய அடிப்படையாக ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இந்த விளக்கம் வந்துள்ளது.
தலைமை நீதிபதியின் சொந்த சகோதரியும் அவரின் கணவரும் ஆஸ்திரேலியாவில் வாழ்வதாகவும் அவர்கள் தமது தேவைக்காக கொழும்பில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை வாங்க தலைமை நீதிபதியின் வங்கிக் கணக்கில் சுமார் 27 மில்லியன் ரூபாய்களை செலுத்தியதாகவும் அதை ஷிரானி பல தவணைகள் மூலம் அந்த குடியிருப்பை கட்டும் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆவணங்களை வங்கி உறுதிப்படுத்தியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதியின் வங்கிக் கணக்குக்கு 34 மில்லியன் ரூபா வந்ததாக தெரிவிக்கும் செய்திகள் அடிப்படையற்றது என்றும் தலைமை நீதிபதி பக்கசார்பின்றி தனது பணிகளை தொடர்ந்து செய்து வருவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
Post a Comment