மட்டக்களப்பில் குற்றச் செயல்கள் குறைந்த பகுதி ஆயித்தியமலை (படங்கள்)
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
'ஆயுத வன்முறைகள் இடம்பெற்ற கடந்த காலப் பாதிப்புக்களினால் தற்போதும் ஆயித்தியமலைப் பிரதேச மக்கள் பெரும் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற போதிலும் அவர்கள் சமாதானத்தை விரும்புபவர்களாக இருக்கின்ற படியால் இந்தப் பகுதியிலே குற்றச் செயல்கள் இடம்பெறுவது மிக மிகக் குறைவாக இருக்கின்றது. ஓப்பீட்டளவில் மட்டக்களப்பு மாவட்டத்திலே குற்றச் செயல்கள் மிகக் குறைவாக இடம்பெறும் பகுதி ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவுதான்'
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் பொலிஸ் அத்தியட்கர் எம்.எஸ்.என். மென்டிஸ் தெரிவித்தார். சிவில் பாதுகாப்புக் குழுக்களை வலுப்புடுத்தும் மீளாய்வுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிலுள்ள மணிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
ஆயித்தியமலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எஸ். பண்டார அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் உன்னிச்சை இராணுவ கட்டளை அதிகாரி ஹெட்டிகே உட்பட இன்னும் பல பாதுகாப்பு அதிகாரிகளும் சிவில் குழுக்களின் பிரதி நிதிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு விளக்கமளித்து உரையாற்றிய பதில் உதவிப் பெலிஸ் அத்தியட்சகர் மென்டிஸ், ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவின் கீழ் வரும் பொது மக்கள் பொலிசாருடனும் பாதுகாப்புத் தரப்பினருடனும் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதால் குற்றச் செயல்கள் இங்கே இடம்பெறாத வண்ணம் தங்களது பிரதேசத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள் என்றார்.
இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் மொத்தமாக 44 இடம்பெற்றிருக்கின்ற அதேவேளை ஆயித்திய மலைப் பொலிஸ் பிரிவில் ஒரேயொரு சம்பவமே இடம்பெற்றிருக்கின்றது என்பதையும் அவர் புள்ளி விவரங்களோடு தெரியப்படுத்தினார்.
Post a Comment