செவ்வாய் கிரகத்தில் வரலாற்று முக்கியத்துவமிக்க விடயம் - பூமியை அதிரவைக்கக்கவுள்ளதாம்..!
(தினகரன்)செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கியூரியா சிட்டி இயந்திரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். எனினும் அது குறித்து அவர்கள் மெளனம் காத்து வருகின்றனர்.
ஒருசில வாரங்களிலேயே சிகப்பு கிரகத்தில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வுள்ளது. கியூரியா சிட்டியின் மிக முக்கியமான ஆய்வு இயந்திரமான ‘சாம்’ ஊடாகவே இந்த புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கியூரியா சிட்டியின் இரசாயன ஆய்வுகூடமாக செயற்படும் ‘சாம்’ மூலம் செவ்வாய்க் கிரகத்தின் மண், வாயு மற்றும் பாறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ‘சாம்’ இயந்திரத்திற்கு உயிரினங்கள் இருப்பதற்கான அடிப்படை கட்டமைப்பை கண்டறியும் திறன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், அதனது சமீபத்திய கண்டுபிடிப்பு குறித்த தகவலை வெளியிட விஞ்ஞானிகள் மறுத்து வருகின்றனர். ஆனால், அது பூமியை அதிரவைக்கக்கூடியது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“இந்த தரவு வரலாற்று புத்தகத்தில் பதியக்கூடியது. அது சிறப்பான ஒரு விடயம்” என கியூரியா சிட்டி இயந்திரத்தின் ஆய்வுக் குழுவின் தலைவர் ஜோன் கிரேட் சிங்கர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்நிலையில் புதிய கண்டுபிடிப்பு குறித்து எதிர்வரும் அமெரிக்க ஜியோபிசிக்கஸ் ஒன்றிய மாநாட்டில் வைத்து வெளிப்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த மாநாடு எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி கலிபோர்னியாவில் ஆரம்பமாகவுள்ளது.
கியூரியா சிட்டியின் புதிய கண்டுபிடிப்பை உறுதி செய்ய அதை இருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதனாலேயே அதனை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2.5 பில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆறு சக்கரங்கள் கொண்ட கியூரியா சிட்டி இயந்திரம் கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் கொல்காட்டர் என்ற பகுதியில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இரண்டு ஆண்டு பரிசோதனைக் காலத்தைக் கொண்ட கியூரியா சிட்டியில் 10 வகை ஆய்வு இயந்திரங்கள் உள்ளன.
Post a Comment