கேரம் உலகப்கோப்பை - சம்பியன் பட்டம் வென்றது இலங்கை
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்து முடிந்துள்ள கேரம் உலகக் கோப்பை போட்டியில் தனி நபர் உலக சாம்பியன் பட்டத்தை இலங்கை வீரர் நிஷாந்த ஃபெர்ணாண்டோ வென்றுள்ளார்.
16 நாடுகள் கலந்துகொண்ட இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவைத் தவிர்த்து அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் முதலிடத்தில் வந்துள்ளனர்.
கொழும்பு கலதாரி விடுதியில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பாரதிதாசனை 25/4, 25/10 என்ற நேர் செட் கணக்கில் நிஷாந்த வீழ்த்தினார்.
இலங்கையின் தேசிய சாம்பியனாகவும் இருந்துவருகின்ற நிஷாந்த ஃபெர்ணாண்டோ இந்த பந்தயத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
எதிராளிக்கு வாய்ப்பு கொடுக்காமல் தான் போடவேண்டிய காய்கள் அனைத்தையும் ஒரே தடவையில் போட்டுவிடும் ஸ்லாம் சாதனையை இந்தப் போட்டியில் அவர் ஏழு முறை செய்துள்ளார்.
தனது அரையிறுதிப் போட்டியில் இந்தியத் தரவரிசையில் மூன்றாவது இடத்திலுள்ள ஸ்ரீநிவாஸை நிஷாந்த வீழ்த்தினார்.
உரிய உதவிகள் கிடைத்தால் எதிர்காலத்திலும் தன்னால் சாதிக்க முடியும் என்று நிஷாந்த நம்பிக்கை தெரிவித்தார்.
"இப்போதுகூட எனக்கு வருமானம் தேடித்தரக்கூடிய ஒரு வேலை இல்லை. பள்ளிக்கூடங்களூக்கு சென்று மாணவர்களுக்கு கேரம் பயிற்சி வழங்குவதில் கிடைக்கின்ற வருவாய் மூலமும் நண்பர்களின் உதவிகள் மூலமுமாகத்தான் எனது வாழ்க்கை செலவினங்களை ஈடுசெய்துவருகிறேன். நிலையான வருமானத்தை தரக்கூடிய ஒரு எனக்கு ஒரு வேலையும் கிடைத்து, பயிற்சிக்கான ஒத்துழைப்பும் கிடைத்தால் எதிர்காலத்திலும் என்னால் பெரும் வெற்றிகளை ஈட்ட முடியும்."
Post a Comment