அமெரிக்காவை வாட்டும் பனிமூட்டம் - நூற்றுக்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள்
அமெரிக்காவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவின் தொடர்ச்சியாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. டெக்சாஸ் நெடுஞ்சாலையில் இன்று காலை காணப்பட்ட கடும் பனிமூட்டதால் சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 80 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று குவியலாக மோதி நிற்கின்றன. இதனால் டெக்சாஸ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குளான வாகனங்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஹூஸ்டனில் இருந்து கிழக்கே 128 கிலோமீட்டர் தொலைவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விடுமுறை என்பதால் வாகனங்களை அகற்றுவதிலும், போக்குவரத்தை சீரமைப்பதிலும் பெரும் சிரமம் ஏற்படாது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் சுமார் 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. பனிமூட்டம் மிகவும் அடத்தியாக ஏற்பட்டுள்ளதால் எதிரே வரும் வானத்தையும், சாலையின் சூழலையும் உடனடியாக புரிந்து கொள்ள முடியாததாலேயே அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக விபத்தில் காயமடைந்த கர்ரோல் என்பவர் தெரிவித்துள்ளார். சுமார் 100 கார்களும், டிரக்குகளும் இந்த விபத்தில் சிக்கி உள்ளதாக டெக்சாஸ் பொது பாதுகாப்பு நிர்வாக துறை தெரிவித்துள்ளது. விபத்தில் ஏராளமானோர் சிக்கி உள்ளதால் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி முடியாத சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளதாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment