முஹம்மட் முர்ஸிக்கு நெருக்கடி..! (வீடியோ இணைப்பு)
வரம்பற்ற அதிகாரத்தை தனக்குத் தானே வழங்கும் அரசியல் சாசன அறிவிப்பை அதிபர் முகமது முர்ஸி வெளியிட்டதன் எதிரொலியாக எகிப்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
எகிப்து அதிபர் முர்ஸி தனக்கு நாட்டின் ராணுவம், அரசியல், நீதித் துறையில் வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கும் வகையிலான அரசியல் சாசன அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டார். தனது முடிவுகள் நீதிமன்றப் பரிசீலனைக்கு அப்பாற்பட்டவை என்று அவர் அறிவித்துக் கொண்டதை எகிப்து நீதித்துறை கண்டித்துள்ளது. ""இது, நீதித்துறை சுதந்திரத்தின் மீதும் அதன் உத்தரவுகள் மீதும் முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்'' என்று அந்நாட்டின் உச்ச நீதிக் கவுன்சில் விமர்சித்துள்ளது.
இதனிடையே, அதிபரின் அறிவிப்பை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சித் தொண்டர்கள் அடங்கிய ஒரு குழு கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளது. அவர்களுடன் சனிக்கிழமை காலையில் மேலும் சில தொண்டர்கள் சேர முயற்சித்தனர். அப்போது அவர்கள் மீது போலீஸôர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். தவிர, அதிபர் முர்ஸியின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, முன்னாள் அதிபர் முபாரக்கை எதிர்த்து அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் போராடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முர்ஸியின் ஆதரவாளர்களும் நாட்டின் பல பகுதிகளிலும் அவரை ஆதரித்து பேரணிகளை நடத்தினார். பல இடங்களில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இதனால் எகிப்தில் பதற்றம் நிலவி வருகிறது.
Post a Comment