Header Ads



அட்டாளைச்சேனையின் முதல் விஞ்ஞான பட்டதாரி மர்ஹும் சம்சுதீன்


(எஸ்.எல்.மன்சூர்)

அட்டாளைச்சேனையின் முதல் விஞ்ஞானப் பட்டதாரியான அல்ஹாஜ். எம்.ஏ.சம்சுத்தீன் இன்று (2012.11.26) காலமானார். இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜியூன். இவர் அட்டாளைச்சேனையின் காலஞ்சென்ற மர்ஹூம் முகம்மது அலியார் (அக்கிராசனர்)அவர்களின் மூத்தபுதல்வாராக 1931ஆண்டில் பிறந்து தனது திறமையான கற்றல்பேறு காரணமாக ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்று சிறுதுகாலம் சேவையாற்றியதன் பின்னர் இந்தியாவுக்குச் சென்று அங்கு விஞ்ஞானத்தில் திறமைச் சித்திபெற்று, ஒரு விஞ்ஞான பட்டதாரியாக வெளியேறினார். 

அக்காலத்தில் இப்பிராந்தியத்தில் விஞ்ஞானத்துறையில் பட்டப்பெற்றவர்கள் மிகக்குறைவாக இருந்தபடியினால் 1961ஆண்டில் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக தனது கல்விப் பணியை தொடர்ந்த மர்ஹூம் எம்.ஏ. சம்சுதீன் அவர்கள் தனது திறமையின் காரணமாக அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி, ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலம்  போன்றவற்றில் அதிபராகவும் சேவையாற்றி மக்களின் மனதில் இடம்பிடித்துக் கொண்டார். இன்றும் இவரது நினைவுகள் அப்பாடசாலைகளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பானம் பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் விரிவுரையாளராகவும், உதவி அதிபராகவும், பின்னர் அதிபராகவும் சேவையாற்றியதன் பிற்பாடு அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபராகவும் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பிராந்திய பிரதம கல்வி அதிகாரியாகவும், மேலதிக கல்விப் பணிப்பாளராவும் நியமனம் பெற்று இப்பிராந்தியத்தின் கல்விப்புலத்தில் சிறப்பான சேவைகளை ஆற்றினார். சுமார் 40ஆண்டுகளுக்கும் மேலாக தன்னைக் கல்வித்தாய்க்கு அர்ப்பணித்துவிட்டு ஓய்வுபெற்றார். தனது ஓய்வின் பின்னர் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான அதிகாரமளிக்கப்பட்ட ஆணையாளராகவும் கடமையாற்றினார். 

இவர் காலஞ்சென்ற முன்னால் பொத்துவில் முதல்வாரான பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஏ.எம். ஜலால்தீன், மற்றும் ஓய்;வுபெற்ற மேலதிக மகாணக் கல்விப் பணிப்பாளரான அல்ஹாஜ் எம்.ஏ.எம். சாபித்தீன், அல்ஹாஜ். எம்.ஏ.எம்.சுபைர்தீன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், டாக்டர் எஸ். கியாசுத்தீன், எஸ்.நியாஸ்(சுங்கத்தினைக்களம்), எஸ்.முனாஸ், எஸ். நவாஸ் மற்றும் ஜெஸீமா, அனித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும், முன்னாள் அதிபர் அல்ஹாஜ். கேஎம். சுபைரின் மாமனாருமாவார். இவரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை அட்டாளைச்சேனை மத்திய மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க இறைவனைப் பிராத்திப்போம். ஆமீன்.  



1 comment:

  1. May Almighty Allah accept his good deeds and give him Jannathul Firthouse .Amin

    M. Siraj Ahamed from Palestine

    ReplyDelete

Powered by Blogger.