முஸ்லிம்களின் அப்பாவித்தனம் எது..?
(அழைப்பு)
கடந்த இரண்டு மாதங்களாக கண்ட கண்ட ஊடக வலையமைப்பிலெல்லாம் மலிவு விற்பனை செய்யப்பட்ட ஒரு செய்தி இருக்குமென்றால், அது நமது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொச்சைப்படுத்திய "Innocence of Muslims" எனும் குறுந்திரைப்படமும், அதையொட்டிய சர்வதேச கிளர்ச்சியுமே.அமெரிக்கா ஒழிக! இஸ்ரவேல் நாசமடைக! ஸாம் பசீல் மண்ணாய்ப் போக! என்று தொண்டை கிழியக் கத்தியதன் விளைவாக நமக்கு ஏற்பட்டிருக்கும் தொண்டைப் புண் மெல்ல மெல்ல ஆறத் தொடங்கியிருக்கும் இத்தருணத்தில் ஆறாத காயம் பட்டிருக்கும் நம் உள்ளங்களைத் தட்டியெழுப்பி, சிந்தனையைக் கொஞ்சம் கசக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
கேள்விகள் பலநூறு நம் கண்முன்னால் நிற்கும் பொழுது உரிய விடைகளைக் கண்டறியாமல் அடுத்த அடியை எடுத்து வைப்பது ஆபத்தான பல பின்விளைவுகளுக்கு அடித்தளம் போட்டு விடும். அறியாமையையும், தெளிவின்மையையும் ஒட்டி நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் நமது உம்மத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்காற்ற வல்லது. ஆகவே எடுக்கப்படும் தீர்மானங்கள் பரிபூரண தெளிவுடனும், பொறுப்புணர்வுடன் எடுக்கப்பட வேண்டும். தெளிவுகள் பெறப்பட வேண்டுமென்றால், ஒரு சம்பவம் பல தடவைகள் மீட்டிப் பார்க்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இந்த சர்வதேச சர்ச்சையை இன்னொரு கோணத்திலிருந்து மீட்டிப் பார்ப்போம்.
நம் புரிதலின் வசதிக்காக இந்த மீள்பார்வையை மூன்று கட்டங்களாகவும், உலக மக்களை மூன்று பிரிவுகளாகவும் வகுக்க வேண்டியிருக்கிறது. இறுதியில் அனைத்துப் புள்ளிகளையும் கோடிழுத்து, ஒன்றிணைத்து, உள்ளே ஒளிந்திருக்கும் சரியான ஓவியத்தைக் கண்டுபிடிப்போம். இந்த வகைப்படுத்தல் பற்றிய விரிவான ஓர் அறிமுகம் இருந்தால் தான் இந்த சம்பவத்தின் உண்மையான பின்னணி தெளிவாகப் புரியும். மற்றும் இதுபோன்று உலகில் அவ்வப்போது நடக்கும் குழப்பங்களின் உண்மையான பின்னணியை அறிவதற்கும் இந்த அறிமுகம் உறுதுணையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
அறிமுகம்
முதல் கட்டம் : சர்வதேச ஊடக வலையமைப்பின் செய்தி
இரண்டாவது கட்டம்: ஊடகங்களின் போலித்தனங்களை அம்பலப்படுத்துவதாகக் கூறி அதே விஷமிகள் மறுபுறம் பரப்பும் பொய்ச் செய்தி
மூன்றாவது கட்டம் : சரியான செய்தி
அடுத்ததாக மூன்று பிரிவு மக்கள். எந்தவொரு சமுதாய மக்களையும் அவர்களது சிந்தனையோட்டத்தின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
முதல் பிரிவு – மந்தைகள் :
தமக்கென்று எந்தவொரு சுய சிந்தனையும் இல்லாமல் புகட்டப்படுவதையெல்லாம் அப்படியே நம்புகிறவர்கள். பள்ளிக்கூடங்கள், பொது அரங்கங்கள், நண்பர் வலையமைப்புக்கள், ஊடகங்கள் போன்றவை மூலம் எவையெல்லாம் கருத்துக்களாகப் புகட்டப்படுகின்றனவோ, அவற்றையெல்லாம் எந்தக் கேள்வியும், சந்தேகமும் இல்லாமல் "அப்படியா?" என்று அப்படியே நம்பி ஏற்றுக் கொள்கிறவர்கள். யாரையும் சந்தேகப்பவோ, எதிர்க்கேள்வி எழுப்பவோ எள்ளளவும் சக்தியற்ற நிலைக்கு தமது சிந்தனைத் திறனை முடக்கிக் கொண்டவர்கள். இவ்வாறானவர்கள் தான் எந்தவொரு சமுதாயத்திலும் 70 சதவீதத்திற்கும் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். உலக மட்டத்தில் நடக்கும் அத்தனை குழப்பங்களையும் மறைவிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் சர்வதேச விஷமிகளின் ஒன்றியம் இந்த "அப்பாவி"களுக்கு வழங்கியிருக்கும் பெயர் "மந்தைகள்". இந்தக் கட்டுரையின் வசதிக்காக நாமும் இந்த அப்பாவிப் பிரிவினரை "மந்தைகள்" என்றே அழைப்போம்.
இரண்டாம் பிரிவு – மனிதத் தோல் போர்த்திய மந்தைகள் :
மந்தைகளைப் போல் இருக்காமல் மனிதர்காக இருந்து எதையும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொள்பவர்கள். தம்மைப் பற்றி சிந்தனாவாதிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால், அடிப்படையில் இவர்களும் "மந்தைகள்". ஒரு கருத்து இவர்கள் முன் வைக்கப்பட்டால், அதை உடனே நம்பிவிட மாட்டார்கள். அதைக் கடும் எச்சரிக்கையுணர்வோடு பார்ப்பார்கள். அந்தக் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் ஏதும் நிலவுகின்றனவா என்று தேடுவார்கள். எங்காவதொரு மூலையில் ஓர் எதிர்க்கருத்து தட்டுப்பட்டால், அடுத்த கனமே அதை அப்படியே கவ்விக் கொண்டு, அது தான் உண்மையென்று ஊரெல்லாம் பரப்புவார்கள். இவர்களும் அடிப்படையில் சுயமாக சிந்திக்கும் திறனற்றவர்கள். இவர்களது மொத்த சிந்தனையும் ஒரு வாய்பாட்டுக்குள் (Formula) மட்டுப்படுத்தப்பட்டது:
முதல் தரப்பினர் சொல்லும் செய்தியை எந்த விசாரனையுமின்றி அப்படியே தட்டிக்கழிப்பார்கள். அதில் உண்மை இருக்கின்றதா, இல்லையா என்று கூட தேட மாட்டார்கள்.
இரண்டாம் தரப்பினர் சொல்லும் எதிர்க்கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். அதிலும் உண்மையிருகிறதா? பொய்யிருக்கிறதா? என்பதைக் கூட ஆராய மாட்டார்கள். இதனால் தான் இவர்கள் மனிதத் தோல் போர்த்திய மந்தைகள். இவ்வாறானவர்கள் அநேகமாக சமுதாயத்தில் கிட்டத்தட்ட 20 சதவீத எண்ணிக்கையில் இருப்பார்கள்.
மூன்றாம் பிரிவு – சிந்திக்கின்ற மக்கள் :
எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதன் இரு பக்கங்களையும் தீர ஆராய்ந்து, மூன்றாவது பக்கத்திலிருந்து தனது சுய சிந்தனையைத் தட்டியெழுப்பி, அதன் வெளிச்சத்தில் உண்மையைக் கண்டுபிடிக்கப் பாடுபடுபவர்கள். எந்தவொரு சமுதாயத்திலும் மிகச் சொற்பமான தொகையினராகவே இவர்கள் இருப்பார்கள். இருந்தாலும், மொத்தச் சமுதாயத்தையும் வளைத்தெடுத்து, வழிநடத்தும் சக்தியை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கியிருப்பான். இவ்வாறு இவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் ஆற்றலை இவர்கள் எந்த வழியில் செலவிடுகிறார்கள் என்பதை வைத்தே இவர்களது மறுமை வாழ்வு தீர்மானிக்கப்படும்.
இந்தக் கட்டுரையின் நோக்கம் :
முதல் இரண்டு பிரிவு மக்களையும் குறிவைத்து இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. அவர்களைக் குறிவைத்து என்ன தான் எழுதினாலும், அநேகமாக அதில் எந்தப் பிரயோசனமுமில்லை. வாசிப்பதோடு அவர்களுக்கும் கட்டுரைக்கும் உள்ள உறவு முறிந்துவிடுமே தவிர அவர்கள் அதற்கு மேல் சிந்திக்கப் போவதுமில்லை.
மூன்றாவது பிரிவினரான சிந்திக்கும் மக்களுக்காகவே இந்தக் கட்டுரை. அவர்களுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை. முதல் இரண்டு பிரிவினரைப் போல் நீங்களும் இந்தக் கட்டுரையின் கருத்துக்களை அப்படியே நம்பி விழுங்கி விடக் கூடாது. நான் சொல்வதையும் முழுமையாக நம்பி விடக் கூடாது. நான் சொல்வது உண்மையா, பொய்யா என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் ஐயம் தீர ஆராய வேண்டும். ஆராய்ந்த பிறகே தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தான் இதை எழுதியதன் நோக்கம் வெற்றி பெறும். ஏனெனில் வெறுமனே ஒரு சம்பவத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட மட்டும் இது எழுதப்படவில்லை. சிந்திக்க சக்தி பெற்றவர்களையெல்லாம் சிந்திக்கத் தூண்டுவதே இந்த ஆக்கத்தின் நோக்கம். ஏனெனில் இன்றைய சமுதாயத்தில் செல்வத்துக்குப் பஞ்சமில்லை, வீரத்துக்குப் பஞ்சமில்லை, பள்ளிப் படிப்புக்கும் பஞ்சமில்லை. சிந்தனையாளர் பஞ்சம் மட்டுமே இந்த சமூகத்தில் தலைவிரித்தாடுகிறது. சுயமாக சிந்திக்கின்ற ஒருவரை சந்திப்பதென்பது ஒரு இலட்சம் ரூபா நிலத்தில் விழுந்து கிடப்பதைக் காண்பதை விட அரிதாக இருக்கிறது. இஸ்லாம் சிந்திக்கத் தூண்டும் மார்க்கம். இந்தக் கட்டுரையின் மூலம் உங்கள் சிந்தனையை நான் எங்கெல்லாம் இழுத்துச் செல்லப் போகிறேனோ, அது தான் நான் உங்களிடத்தில் செய்யும் தஃவா.
இந்த அறிமுகம் போதும். இனி ஆய்வினுள் நுழையலாம்.
சம்பவத்தின் சாராம்சம் :
எம் உயிரினும் மேலான அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொச்சைப் படுத்தி ஒரு குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டது. நடிக நடிகைகள், திரைப்படத் தயாரிப்புக் குழு என்று அனைவரையும் உள்ளடக்கிய கிட்டத்தட்ட 80 பேர் கொண்ட ஒரு குழுவினரால் இது தயாரித்து வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் 13-14 நிமிட முன்காட்சிக் (trailer) காணொளி (video) இரண்டு மாதங்களுக்கு முன்பு (ஜூலை 2012) யூடியூப் (YouTube) இணையத்தளத்தில் "முஹம்மதின் உண்மை உண்மை வாழ்க்கை" (The Real life of Muhammad), மற்றும் "முஹம்மத் திரைப்பட முன்காட்சி" (Muhammad Movie Trailer) என்ற பெயர்களில் அப்லோட் செய்யப்பட்டது.
இது ஒரு முழுத்திரைப்படத்தின் முன்காட்சி மட்டும் தானா, அல்லது உண்மையில் மொத்தத் திரைப்படமுமே இவ்வளவு தானா என்பது பற்றிய ஐயப்பாடு ஊடகங்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது. இருந்த போதிலும் ஊர் பெயர் தெரியாத ஒருவரின் கூற்றுப் பிரகாரம் முழுத் திரைப்பமும் ஒரேயொரு தடவை ஹொலிவுட் வட்டாரத்தினுள் இருக்கும் வைன் தியேட்டர் எனப்படும் சினிமா கொட்டகையில் பத்துப் பேருக்கும் குறைவான அரங்கத்தினர் முன்னிலையில் ஜூன் மாதம் 30ம் திகதி காண்பிக்கப்பட்டது. அப்போது அந்தத் திரையரங்கின் வாசலில் ஒட்டியிருந்த சுவரொட்டியில் படத்திற்கு வழங்கப்பட்டிருந்த பெயர் "பின் லாதினின் அப்பாவித்தனம்" (Innocence of Bin Laden) என்பதாகும். இந்த முகம் தெரியாத மனிதரின் கூற்றை நம்புவதா? இல்லையா? என்பதை மெனக்கெட்டு விவாதித்துக் கொண்டு ஊடக வட்டாரத்துக்குள் ஒரு கூட்டம். பொய்க்கும் பொய்க்கும் போட்டி வைத்து எந்தப் பொய்யை நம்புவது என்று இந்தக் கூட்டம் போடுகிற கேளிக் கூத்து ஒருபுறமிருக்க....
நடிக நடிகைகள் உட்பட திரைப்படத் தயாரிப்புக் குழுவின் அனைவரும் ஒருமித்து, "இந்த சதித்திட்டங்களுக்கும் எங்களுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. இந்தப் படம் தயாரிக்கப்படும் பொழுது இது இஸ்லாத்தை எதிர்க்கும் படமாகத் தயாரிக்கப்படவில்லை. மாறாக 2000 வருடங்களுக்கு முன்பு எகிப்தில் வாழ்ந்த நாகரிகமற்றோர்களின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட நகைச்சுவைச் சித்திரமே இது. படத்தின் பெயர் கூட பாலைவனப் போர்வீரர்கள் (Desert Warriors) என்று தான் இருந்தது. முஹம்மத், இஸ்லாம் போன்ற எந்த வார்த்தையும் நாம் நடிக்கும் போது படத்தில் இருக்கவில்லை.
படத்தின் கதாநாயகனின் பெயர் கூட மாஸ்டர் ஜோர்ஜ் என்று தான் இருந்தது. எல்லாம் முடிந்த பிறகு தயாரிப்பாளர் இரகசியமாக படத்தில் நாம் பேசிய வார்த்தைகளையெல்லாம் டப்பிங் செய்து மாற்றியமைத்து, மொத்தப் படத்தையுமே தலைகீழாக மாற்றிவிட்டார். நாம் அறியாமலேயே ஓர் அநியாயதில் தயாரிப்பாளர் நம்மையும் பங்காளியாக்கி, நம்மை ஏமாற்றி விட்டார். இதற்காக நாம் மனதார வருந்துகிறோம்" என்று புலம்பிக் கொண்டிருப்பது இன்னொரு புறம். இவர்களின் புலம்பல் உண்மை தானா? அல்லது அதுவும் இன்னுமொரு நாடகமா என்று நமக்குள் எழும்பும் கேள்வி தொக்கி நிற்கும் அதே வேளை, படத்தில் நடிகர்களின் வாயசைப்பையும், வெளிவரும் சொற்களையும் ஒப்பிட்டு நோக்குகையில் அவர்கள் கூறுவது போல் கனிசமான அளவு திரை வசனங்கள் மாற்றப்பட்டு டப்பிங் செய்யப்பட்டிருப்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
படத்தின் தயாரிப்பாளர் தன்னை ஆரம்பத்தில் கலிபோர்னியவில் வசித்து வரும் இஸ்ரவேல் நாட்டுப் பிரஜை ஸாம் பசீல் (Sam Bacile) என்று உலக அரங்கில் அறிமுகப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தான் இஸ்லாத்தை மனதார வெறுப்பதாகவும், மற்றும் இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக 100 யூதத் தனவந்தர்கள் முன்வந்து ஐம்பது லட்சம் அமெரிக்க டொலர் பணத்தொகையைத் திரட்டித் தந்ததாகவும் ஊடகங்களுக்கு அறிவித்தான். பிறகு அஸோசியேட்டட் ப்ரெஸ் (Associated Press) ஊடகம் நடத்திய "உண்மை தேடும் (???) படலத்தின்" விளைவாக கிடைக்கப்பெற்ற,
தயாரிப்பாளரது உண்மையான விவரம்(?) :
பெயர்: நகோலா பஸிலி நகோலா (Nakoula Basseley Nakoula) இஸ்ரேலிய குடிமகன் அல்ல, மாறாக எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கொப்டிக் கிறித்தவன். கலிபோர்னியாவில் வசித்து வரும் இவன் கடந்த காலத்தில் பண மோசடிக்காக சிறைத் தண்டனை அனுபவித்தவன்.
மேலும், இந்தக் குறுந்திரைப்பட முன்காட்சியை செப்டம்பர் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் அரபி மொழியில் மொழிமாற்றம் செய்து, எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கிறித்தவ சட்டத்தரணி மொரிஸ் ஸாதிக் (Morris Sadek) என்பவன் அரபு உலகத்திற்கு "தேசிய அமெரிக்க கொப்டிக் சபை" (National American Coptic Assembly) யின் இணையத்தளம் மூலம் அறிமுகப்படுத்தினான்.
செப்டம்பர் மாதம் 9ம் திகதி இந்த முன்காட்சியின் ஒரு பகுதி அல் நாஸ் (Al-Nas) எனும் எகிப்திய தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து செப்டம்பர்; 11 2012 அன்று லிபியா, பெங்காஸியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகமும், மற்றும் எகிப்து, கய்ரோவிலுள்ள அமெரிக்க தூதரகமும் ஏக காலத்தில் முஸ்லிம்களால் தாக்கப்பட்டன. தாக்குதலின் விளைவாக லிபியாவின் அமெரிக்க தூதர் ஜே. கிரிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் (J. Christopher Stevens) மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்கள் மூவர் உட்பட மொத்தம் நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டார். இங்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த வன்முறை கொஞ்சம் கொஞ்சமாகப் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.இது சம்பவம். இனி இது பற்றிய கண்ணோட்டங்களைப் பார்ப்போம்.
மீள்பார்வையின் முதலாவது கட்டம் :
"மந்தைகள்" பிரிவைக் குறிவைத்து சர்வதேச ஊடக வலையமைப்பு விதைக்கும் கருத்துக்கள் :
கருத்து 1 :
ஸாம் பசீல் என்னும் இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு முன்னாள் சிறைக் கைதி. பண மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டவன். மத வெறி பிடித்த ஒரு கிறுக்கன்.
இதன் மூலம் மீடியா சொல்லாமல் சொல்வதும், "மந்தைகள்" மனதில் பதிய வைக்க விரும்புவதும் :
எவனோ ஒரு கிறுக்கன் பைத்தியகாரத் தனமாக ஏதாவதொன்றைச் செய்து விட்டால், அதற்காக உலகின் முதல் தர ஜனநாயக நாட்டையும், அதன் நேச நாடுகளையும் குற்றம் பிடிப்பது நியாயமில்லை.
கருத்து 2 :
ஸாம் பசீல் என்பவன் தனக்கு இஸ்லாத்தின் மீதுள்ள வெறுப்பை வெளிக்காட்டவே இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறான்.
இதன் மூலம் மீடியா சொல்லாமல் சொல்வதும், "மந்தைகள்" மனதில் பதிய வைக்க விரும்புவதும் :
ஜனநாயக நாடு என்றாலே அங்கு வாழும் யாருக்கும் யாரைப் பற்றியும் எதுவும் சொல்லும் உரிமை இருக்கிறது. அது கருத்துச் சுதந்திரம். அதனால், அரசாங்கம் அந்தக் கிறுக்கனைத் தண்டிப்பதற்கும் சட்;டத்தில் இடமில்லை. தண்டிக்கச் சொல்லி குரல் கொடுப்பதும் நீதியல்ல.
கருத்து 3 :
அமெரிக்க அரசாங்கமோ, அல்லது இஸ்ரேல் அரசாங்கமோ இதற்கு சம்பந்தமில்லை. இது ஒரு தனிமனித செயல்.
இதன் மூலம் மீடியா சொல்லாமல் சொல்வதும், "மந்தைகள்" மனதில் பதிய வைக்க விரும்புவதும் :
என் பிள்ளை வெளியில் எவனையாவது அநியாயமாக அடித்து விட்டு வந்தால், அதற்கு தந்தையாகிய நான் பொறுப்பல்ல. அது அவன் சுதந்திரம். அதனால் அவனைத் தண்டிக்க மாட்டேன். அதுமட்டுமல்லாமல், அவன் என் பிள்ளையாக இருப்பதனால் அவனை நான் இனியும் பாதுகாத்துப் பராமரிக்கவும் செய்வேன். அடி வாங்கியவர்கள் அடியை வாங்கிக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமே தவிர வீணாகக் கூச்சல் போடக் கூடாது.
கருத்து 4 :
உலகெங்கும் முஸ்லிம்கள் கொந்தலித்துப் போய் லிபியாவில் அநியாயயமாக அமெரிக்க தூதரையும், உதவியாளர்களையும் கொலை செய்து விட்டார்கள்.
இதன் மூலம் மீடியா சொல்லாமல் சொல்வதும், "மந்தைகள்" மனதில் பதிய வைக்க விரும்புவதும் :
என்று இஸ்லாத்திற்குள் வஹாபிக் கொள்கை (தவ்ஹீத்) மீண்டும் துளிர்த்து விட்டதோ, அன்றிலிருந்து சாந்தத்தை மட்டுமே போதித்து வந்த இஸ்லாம் ஒரு காட்டுமிராண்டித் தனமான முரட்டு மார்க்கமாக மாறி விட்டது. உலகெங்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் பெருகி விட்டார்கள். அலட்டிக் கொள்ளத் தேவையில்லாத சின்னச்சின்ன விசயங்களுக்கெல்லாம் கொலை செய்கின்ற அளவுக்கு முஸ்லிம்கள் இன்று தீவிரமடைந்து விட்டார்கள். இவர்களை இப்படியே விட்டால், நாளடைவில் மற்ற மதத்தவர்களை இந்த முஸ்லிம்கள் பூமியில் உயிர்வாழ விட மாட்டார்கள். ஒருவகையில் இந்தப் படத்தைத் தயாரித்த ஸாம் பசீல் இஸ்லாத்தை வெறுப்பதிலும் குற்றமிருப்பதாகத் தெரியவில்லை.
மேற்கூறப்பட்ட நான்கு கருத்துக்களையும் மீடியா முலம் விஷமிகள் விதைப்பதன் நோக்கம் :
"ஒரு பொய்யை உரத்தும், உறுதியாகவும், திரும்பத்திரும்பவும் மக்கள் மத்தியில் முன்வைத்து வரும்போது, நாளடைவில் மக்களில் அநேகர் அதை உண்மை என்றே நம்பத் தொடங்கி விடுவார்கள்" எனும் ஜேர்மன் நாட்டு ராஜதந்திரி ஜோஸப் கெபெல்ஸ் (Joseph Goebbels) இன் தத்துவத்துக்கமைய முஸ்லிம்கள் பற்றிய இந்தப் பொய்ப் பிரச்சாரங்களைத் திரும்பத் திரும்ப சர்வதேச ஊடக வலையமைப்பின் மூலம் பரப்புவதால், உலக சனத்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிக அளவினரான சிந்தனைத் திறன் மட்டுப்படுத்தப்பட்ட "மந்தைகள்" பிரிவினரை இதன் மூலம் மூளைச்சலவை செய்து, "வஹாபிகள் என்றாலே பிரச்சினைக் காரர்கள்" என்ற கருத்தை அவர்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டால், எந்த நிலையிலும் இந்தப் பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் உலகின் எந்த மூலையில் முஸ்லிம்களுக்கு என்ன அநியாயம் நடந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொள்வார்கள். "இவர்களுக்கு வேறு வேலையே இல்லை.
இதே பிழைப்பாகப் போய்விட்டது" என்று சலித்துக் கொள்வதோடு அவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். எந்த அநியாயத்தையும் ஏனென்று கேட்கக் கூட முன்வர மாட்டார்கள். விஷமிகள் அண்மைக்காலமாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் இந்தத் தந்திரோபாயத்தின் மூலம் அவர்களது நோக்கம் ஏற்கனவே பெரும்பாலும் நிறைவேறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இன்றைய உலக நடப்பைப் பார்த்தாலே இது தெளிவாகத் தெரிகிறது.
இரண்டாவது கட்டம் :
மனிதத் தோல் போர்த்திய மந்தைகளைக் குறிவைத்து, ஊடகங்களின் போலித்தனங்களை அம்பலப்படுத்தி, உண்மையை வெளிக்கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு அதே விஷமிகள் மறுபுறம் பரப்பும் போலிக் கருத்துக்கள்:
கருத்து 1:
வலதுசாரித் தீவிரவாதக் கும்பலொன்று ஹ{ஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பிறகு எகிப்திலும், முஅம்மர் கதாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு லிபியாவிலும் துளிர்விட்டிருக்கும் ஜனநாயகத்தை வேரறுப்பதற்காகவும், ஜனநாயகத்தை உலகெங்கும் பரப்புவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் நல்ல அரசியல்வாதிகளைக் கவிழ்ப்பதற்காகவும் திட்டமிட்டு ஏற்பாடு செய்த சதி இது. அவர்களது அந்த சதித்திட்டத்தில் அவர்கள் வெற்றி கண்டும் விட்டார்கள். – இவ்வாறு இங்கிலாந்தின் கார்டியன் (Guardian) பத்திரிகை கடந்த 13.09.2012 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை கார்டியன் பத்திரிகையின் இணையத்தளமானwww.guardian.co.ukஇன் 03.09.2012ம் திகதிக்கான பதிவுகளில் பார்க்கலாம்.
இதன் மூலம் விஷமிகள் மனிதத் தோல் போர்த்திய மந்தைகள் மனதில் பதிய வைக்க விரும்புவது :
எகிப்திலும், லிபியாவிலும் இதற்கு முன் காட்டுமிராண்டித் தனமான அரசர்களே ஆண்டு வந்தார்கள். அந்தக் கொடுங்கோல் அரசர்களின் கொடுமை பொறுக்க முடியாமல் நாட்டு மக்களே கொந்தளித்து, அவர்களை வீழ்த்தினார்கள். இந்த மக்கள் புரட்சியின் மூலம் ஜனநாயகம் எனப்படும் மகத்தான ஆட்சி முறை அங்கு துளிர்விட்டிருக்கிறது. உலகிலேய ஜனநாயகம் ஒன்று தான் மனிதநேயம் மிக்க ஆட்சி முறை. ஆகவே, அந்த நாடுகளில் வாழும் மக்கள் மீது கொண்ட அளவு கடந்த அக்கறையின் காரணமாக இந்த ஜனநாயகத்தை அங்கு நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளும் அந்தப் புரட்சிக் கார மக்களுக்கு உதவினர். சாராம்சம்: மேலைநாடுகளின் ஜனநாயத்தினால் தான் இந்த நாடுகளில் சுபீட்சம் தொடங்கியிருக்கிறது. இது சில தீவிரவாதிகளுக்குப் பிடிக்காததனால் இந்த திரைப்படத்தைக் காரணம் காட்டி, அவ்விரு நாடுகளினதும் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.
கருத்து 2 :
நவம்பர் மாதம் 6ம் திகதி நடைபெற இருக்கின்ற அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் முறையும் போட்டியிரும் பராக் ஒபாமா மீண்டும் வெற்றிபெற்று ஜனாதிபதியாவதைத் தடுப்பதற்காக ஒருசில தீவிரவாதிகள் பின்னும் சதி வலை இது. – பார்க்க: 15.09.2012 அன்று பிரசுரிக்கப்பட்ட இங்கிலாந்தின் இன்டிபெண்டன்ட் (The Independent) பத்திரிகை. இணையதளம் : www.independent.co.uk
இதன் மூலம் விஷமிகள் மனிதத் தோல் போர்த்திய மந்தைகள் மனதில் பதிய வைக்க விரும்புவது :
ஒபாமாவின் ஆட்சியின் பிறகு தான் அரபுலகில் மறுமலர்ச்சி தோன்றியிருக்கிறது. இரண்டாவது தடவையும் அவரைத் தொடர்ந்தும் பதவியில் இருக்க வைத்தால், அவர் மொத்த அரபுலகத்தையுமே அமைதிப் பூங்காவாக மாற்றி விடுவார். அரபு நாடுகள் அமைதியாக இருப்பதை ஒருசில தீவிரவாத சக்திகள் விரும்பவில்லை. அதனால் தான் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார்கள்.
கருத்து 3 :
தீவிரவாதிகளுக்கு லிபியாவின் அமெரிக்கத் தூதுவரான கிரிஸ்டோபர் ஸ்டீவன்ஸ்ஸை கொல்ல வேண்டிய தேவை ஏற்கனவே இருந்தது. ஏனென்றார் ஸ்டீவன்ஸ் மிகவும் நல்லெண்ணம் படைத்த ஒரு அரசியல் ராஜதந்திரி. லிபியாவில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு அச்சாணியாக இருந்தவர்களுள் இவர் பிரதானமானவர். – பார்க்க: 13.09.2012 அன்று பிரசுரிக்கப்பட்ட இங்கிலாந்தின் டெய்லிமெய்ல் (DailyMail) பத்திரிகை. இணையதளம் www.dailymail.co.uk
இதன் மூலம் விஷமிகள் மனிதத் தோல் போர்த்திய மந்தைகள் மனதில் பதிய வைக்க விரும்புவது :
க்ரிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் போன்ற நல்லெண்ணம் படைத்த அரசியல் ராஜதந்திரிகளே தற்போது அரபுநாடுகளுக்குத் தேவை. இவ்வாறான ராஜதந்திரிகள் மூலமாகத் தான் அரபுலகத்தில் அமைதியை ஏற்படுத்தலாம். இது தெரிந்து தான் தீவிரவாதிகள் இவ்வாறான நல்ல அரசியல்வாதிகளைத் தேடித்தேடி கொலைசெய்து வருகின்றனர். இதன் மூலம் அரபுலகத்தின் அமைதியைக் கெடுக்கப் பாடுபடுகின்றனர்.
கருத்து 4 :
செப்டெம்பர் 11 இல் அமெரிக்க உலக வர்த்தக மையத்தின் மீது நடாத்தப்பட்ட விமானக் குண்டுவெடிப்புத் தாக்குதலின் 11வது வருட பூர்த்தியைக் கொண்டாடும் விதமாகவும், மற்றும் அண்மையில் அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மூலம் கொல்லப்பட்ட பாக்கிஸ்தான் அல்காயிதாவின் உப தலைவராயிருந்த அபூ யஹ்யா அல்-லிபி யின் மரணத்திற்குப் பழி தீர்ப்பதற்காகவும் அல்காயிதா அமைப்பு தான் அமெரிக்க தூதுவரை லிபியாவில் கொலை செய்தது. – பார்க்க: 13.09.2012 பிரசுரிக்கப்பட்ட இங்கிலாந்தின் கார்டியன் (Guardian) பத்திரிகை. இணையதளம் www.guardian.co.uk
இதன் மூலம் விஷமிகள் மனிதத் தோல் போர்த்திய மந்தைகள் மனதில் பதிய வைக்க விரும்புவது :
அல்காயிதா என்பது உலகளாவிய ரீதியில் வியாபித்திருக்கும் ஒரு மாபெரும் பயங்கரவாத அமைப்பு. இவர்கள் தான் செப்டெம்பர் 11, 2012இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தை விமானக் குண்டுவெடிப்பின் மூலம் தகர்த்தவர்கள். இந்த சம்பவத்தின் நினைவாக அல்காயிதா ஒவ்வொரு வருடமும் ஏதாவது அசம்பாவிதம் செய்து வருகிறது. அந்தத் தொடரில் தான் இவ்வருடம் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.
மேற்கூறப்பட்ட நான்கு கருத்துக்களையும் "மறைந்திருக்கும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிற சத்தியவான் ஊடகங்கள்" என்று தம்மைப் பற்றி விளம்பரப்படுத்தி வைத்திருக்கும்.
மேற்கூறப்பட்ட பிரித்தானிய பத்திரிகைகள் மூலம் விஷமிகள் விதைப்பதன் நோக்கம் :
"மந்தைகளுக்கும்" மனிதத் தோல் போர்த்திய மந்தைகளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை விஷமிகள் நன்றாகவே விளங்கி வைத்திருக்கிறார்கள். எதைப் புகட்டினாலும், அதை அப்படியே விழுங்கி விட்டுப் போகிற "மந்தைகளை"ப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்களை ஏமாற்ற தொலைக்காட்சி அலைவரிசை நங்கூரங்களில் அமர்ந்து கொண்டு அவிழ்த்துப் போட்ட தலைமுடியுடன் கவர்ச்சி மொழியில் செய்தி வாசிக்கும் அழகிகள் சொல்லும் பொய்களே போதும். ஆனால் மனிதத் தோல் போர்த்திய மந்தைகள் அப்படியல்ல. உண்மையில் சுயமாக சிந்திக்கத் தவறினாலும், சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இரண்டாம் தரப்பினரிடம் இருக்கிறதென்பது விஷமிகளுக்குத் தெரியும். எந்தவொரு கருத்து சர்வதேச ஊடகங்களால் முன்வைக்கப்பட்டாலும், அதன் எதிர்க் கருத்து எங்கேயிருக்கின்றது என்று தான் இந்த இரண்டாம் தரப்பினர் முதலில் தேட ஆரம்பிப்பார்கள். ஏதாவதோர் எதிர்க் கருத்து கண்ணுக்குத் தட்டுப்படும்வரை தேடிக்கொண்டேயிருப்பார்கள்.
தேடல்களை அதிக நேரம் நீடிக்க விடுவது உண்மையை மறைக்க விரும்புபவனுக்கு ஆபத்து. ஏனெனில், சில சமயங்களில் எதிர்பாராத விதமாக அவர்கள் கண்களில் உண்மை தட்டுப்பட்டு விடவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பையும் அறவே இல்லாமலாக்க வேண்டுமென்றால், இவ்வாறு தேடித் திரிபவர்கள் கண்களில் இலகுவாகத் தட்டுப்படும் வகையில் ஆங்காங்கே உண்மைத் தோல் போர்த்திய பொய்களை நிறுத்தி வைத்தால் அந்தப் பொய்களில் ஏதாவதொன்றை "இது தான் உண்மை" என்று நம்பி இந்த இரண்டாம் தரப்பினர் ஏற்றுக் கொண்டு விடுவார்கள். அத்தோடு அவர்களின் தேடலும் முற்றுப்பெற்று விடும். உண்மையும் என்றென்றும் மறைக்கப்பட்டே இருக்கும்.
இனி....
மூன்றாவது கட்டம் :
உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அனைத்துத் தரப்பு வாதங்களையும் முன்னால் எடுத்து வைத்துக் கொண்டு அவை ஒவ்வொன்றையும் தமது சிந்தனையின் வெளிச்சத்தில் ஆராய்பவர்கள் கண்களில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தட்டுப்படும் யதார்த்தங்கள்:
யதார்த்தம் 1 :
இந்தக் குறுந்திரைப்படத்தின் அடிப்படை நோக்கம்: திட்டமிட்டு செய்யப்பட்ட அமெரிக்க தூதரின் கொலைக்கான உண்மைக் காரணத்தை மறைத்து, இந்தப் படத்தைக் காரணமாகக் கற்பிப்பதும், மற்றும் இதை அடிப்படையாக வைத்து ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் மத்தியகிழக்கிற்கு இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, தீயை இன்னும் வளர்ப்பதுமே. சம்பவத்திற்குப் பிறகு வெளிவந்த பல அறிக்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன. திரைப்படம் மத்தியகிழக்கில் அறிமுகப்படுத்தப் படுவதற்கு பல தினங்களுக்கு முன்பே தூதரகம் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டு விட்டது என்பதை அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான லூயி கோமெர்ட் (Louie Gohmert), Breitbart News இற்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் "Embassy attacks appear coordinated; not linked to the film" என்று பகிரங்கமாகக் குறிப்பிடுகிறார்.
யதார்த்தம் 2 :
அனுபவமற்ற, சிறுபிள்ளைத்தனமான பாணியில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதன் நோக்கம்: திரைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளர்களின் தடயங்களை மறைப்பதும், படம் வெளியிடப்பட்ட உண்மையான நோக்கத்தைக் கண்டுபிடித்து விடாமல் மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதுமே.
யதார்த்தம் 3 :
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஸிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீது முழு வீச்சுத் தாக்குதல் தொடுக்கப் போவதாக சர்வதேச அரசியல் அவதானிகள் மட்டத்தில் வலுவான கருத்துக்கள் நிலவிக் கொண்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில் இந்தத் திரைப்படச் சம்பவம் இடம்பெற்றிருப்பது இன்னுமொரு கோணத்திலும் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.
யதார்த்தம் 4 :
100 யூதர்களின் நிதியுதவியோடு இந்தப் படம் தயாரிக்கப்பட்டது என்ற ஒரு செய்தியை திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் மர்ம ஆசாமி ஊடகங்கள் மூலம் பரப்பி வருவதும் இன்னொரு பக்கம் சிந்தனையைக் கொண்டு செல்கிறது. தானாக ஒருவனை வலிய சென்று அடிப்பவன் கெட்டவன். தன்னை அடிக்க வருபவனைத் தற்காப்புக்காகத் திருப்பி அடிப்பவன் நல்லவன், வீரன். இந்தத் தத்துவத்தை அடிப்படையாக வைத்துத் தான் இஸ்ரேல் எனும் நாடே பலஸ்தீன மண்ணில் உருவாக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் துவக்கத்திலிருந்து வரலாறு நெடுகிலும் காலத்துக்குக் காலம் இஸ்ரேல், அதனை வளைத்திருக்கும் பாலஸ்தீன மக்களை அவ்வப்போது சீண்டுவதும், சீண்டப்பட்டவுடன் பாலஸ்தீன முஸ்லிம்கள் கொதித்தெழுந்து நான்கு யூதர்களைக் கொல்வதும், அந்தக் கொலைகளைக் காரணம் காட்டி இஸ்ரேல் "தற்காப்பு யுத்தம்" செய்து சுற்றியிருக்கும் பாலஸ்தீனக் குடிமக்களைக் கொன்று குவிப்பதும், எஞ்சுபவர்களை அங்கிருந்து துரத்தியடிப்பதும், அனைவரும் ஓடிய பிறகு காலியாயிருக்கும் அந்த நிலத்தையும் இஸ்ரேல் நாட்டின் வரைபடத்துக்குள் இணைத்துக் கொள்வதும், கொஞ்சம் நாள் கழித்து மீண்டும் இன்னொரு பகுதி மக்களை சீண்டுவதும், அவர்களும் இதே சதிவலையில் கண்மூடித்தனமாக வீழ்வதும், பிறகு அந்தப் பகுதியும் இஸ்ரேல் நாட்டு எல்லைக்குள் விழுங்கப்படுவதும்ஸ என்ற முடிவில்லாத இந்தத் தொடர்கதை வளைகுடா முழுவதையும், மற்றும் அரேபிய தீபகற்பத்தின் மேல் பாதியையும் இஸ்ரேலின் எல்லைக்குள் கொண்டு வரும் நாள் வரை தொடரும்.
இந்தத் தொடர்கதையின் அடுத்த அத்தியாயத்தின் ஆரம்பம் தான் இந்தச் சம்பவமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இந்தச் சம்பவத்தால் அதிகம் சீண்டப்பட்ட நாடுகளில் ஒன்றாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனான் மீடியாக்களில் பரவலாகக் காட்டப்படுவதும் சிந்திக்கத்தக்க விடயம். இதுவரை சர்வதேச மட்டத்தில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் 14.09.2012 அன்று லெபனானில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்கது. இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் நொறுக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல் வத்திகான் போப்பாண்டவரும் ஏக காலத்தில் லெபனானுக்கு விஜயம் செய்திருந்ததும், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருபகுதியினர் போப்பாண்வரை வம்புக்கிழுத்ததும் பல கேள்விகளை எழுப்புகின்றன. அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல் பல வருடங்கள் திரை மறைவிலிருந்தே இயங்கி வந்த ஹிஸ்புல்லாஹ் என்ற ஷீயா இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாஹ் ஆர்ப்பாட்டத்தின் போது பகிரங்கமாக வெளிவந்து கோபம் கொப்பளிக்கக் கருத்து வெளியிட்டதும், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் போருக்குத் தயாராகுமாறு எச்சரிக்கை விடுத்ததும் கொஞ்சம் அதிகமாகவே நம்மை சித்திக்கத் தூண்டுகிறது. இதற்கு மேலும், லெபனான் ஷீயா தீவிரவாதிகளான இந்த ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தை பாலூட்டி, சீராட்டிப் பராமரித்துக் கொண்டிருப்பது ஈரானும், ஸிரியாவும் தான் என்ற உண்மை இன்னும் கொஞ்சம் தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கிறது.
இறுதியாக....
இந்த மூன்று தரப்பு செய்திகளையும் ஒருங்கிணைத்து, அனைத்தையும் ஒவ்வொன்றாக சிந்தனையில் எடைபோட்டு நம்மால் எடுக்க முடிகின்ற தெளிவான முடிவுகள்:
அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கடந்த ஒருசில மாதங்களாக மத்தியகிழக்கில் செய்து முடித்திருக்கும் தில்லுமுல்லுகள் சர்வதேச அரங்கில் அம்பலப்படுவதற்கு முன் அவற்றின் தடயங்களைத் துப்பரவு செய்து கொள்வதற்காகவே இந்த மொத்த நாடகமும் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. எப்படியென்றால்....
உலக அரங்கில் பிரகடனப்படுத்தப் பட்டிருக்கும் அமெரிக்க அரசின் கொள்கை
பயங்கரவாதத்தை இந்தப் பூமியிலிருந்து துடைத்தெறிவது (War on Terror). இதன் அர்த்தம் உலகில் எங்கெல்லாம் பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் இயங்குகின்றார்களோ, அங்கெல்லாம் அமெரிக்கா நுழைந்து அவர்களை அடியோடு அழித்து, அந்த இடத்தில் அமைதியை நிலைநாட்டும். பயங்கரவாதிகளோடு அமெரிக்காவுக்கு எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது. பயங்கரவாதிகளோடு அமெரிக்காவுக்கு எந்த ஒட்டு உறவும் கிடையாது. கண்ட இடத்தில் பயங்கரவாதிகளைக் கொன்று அழிப்பதே அமெரிக்காவின் ஒரே கொள்கை. இந்தக் கொள்கையிலிருந்து அமெரிக்கா என்றைக்கும் தடம்புரளாது.இதில் வேடிக்கை என்னவென்றால், எகிப்தில் முபாரக்கையும், லிபியாவில் கதாபியையும் வீழ்த்தி விட்டு, அங்கு "ஜனநாயகத்தை" உருவாக்கும் அரும்பணியை அமெரிக்கா நேரடியாக செய்யவில்லை. எந்தப் பயங்கரவாதிகளை தனது பரம எதிரியென்று உலகெங்கும் தம்பட்டமடித்துக் கொள்கிறதோ, அதே பயங்கரவாதிகளான அல்காயிதா, இஹ்வான் போன்ற இயக்கங்களை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு, அவர்களை களத்தில் முன்னுக்கு அனுப்பிப் பின்னாலிருந்து அவர்களை அமெரிக்கா இயக்கியது. முபாரக்கும் கதாபியும் முழுமையாக வீழ்த்தப்படும் வரை இந்தப் பயங்கரவாதிகளுடனான அமெரிக்காவின் நட்பும், கூட்டணியும் நீடித்தது.
– பார்க்க: 12.09.2012 அன்று prisonplanet.com எனும் இணையத்தளத்தில் பிரசுரமான கட்டுரை, மற்றும் 6.09.2012 அன்று ரஷ்ய பிரதமர் வ்லாடிமிர் புட்டின் ரொயிட்டருக்கு வழங்கிய செய்தியில் இதை அவர் பகிரங்கமாகவே சொல்லியிருந்தார்.இப்பொழுது எகிப்து, லிபியா ஆகிய இந்த இரண்டு நாடுகளிலும் அமெரிக்காவுக்குத் தேவையான ஆட்சி மாற்றங்கள் நடந்து முடிந்து விட்டன. இந்த ஆட்சி மாற்றம் செய்வதற்கான அருமையான சதித்திட்டங்களையெல்லாம் அமெரிக்கா சார்பாகக் களத்தில் முன்நின்று பயங்கரவாதிகளின் உதவியோடு வெற்றிகரமாக நடத்தி முடித்த ராஜதந்திரி தான் லிபியாவில் கொல்லப்பட்ட அமெரிக்க தூதுவர் க்ரிஸ்டோபர் ஸ்டீவன்ஸ். – பார்க்க 13.09.2012 பிரசுரமான இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிகை. இணையதளம் :
guardian.co.ukசிந்திக்கும் மக்களுக்கு இப்போது புள்ளிகளுக்குள் மறைந்திருக்கும் ஓவியம் புலப்பட ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆம், காரியம் நடந்து முடிந்தபின் கறிவேப்பிலைக்குக் கறிச்சட்டிக்குள் என்ன வேலை? காரியம் நடக்கும் வரை நட்பு பாராட்டிக் கொண்டிருந்த பயங்கரவாத இயக்கங்களைப் பழையபடி பகைத்துக் கொள்ள ஒரு காரணம் வேண்டும். காதும் காதும் வைத்தாற்போல் காரியத்தைக் கச்சிதமாக நடத்தித் தந்த ராஜதந்திரியின் கைவசம் விஷமிகளின் வண்டவாளங்கள் பல ஆதாரங்களாக சிக்கியிருப்பதும் விஷமிகளின் எதிர்காலத் திட்டங்களுக்கு நல்லதல்ல. கூட்டுச் சேர்ந்து களவு செய்தபின், கூட்டாளி உயிரோடு இருக்கும் காலம் முழுவதும் களவெடுத்தவனுக்கு நிம்மதி இருக்காது.
எந்த நிமிடமும் கூட்டாளி தன்னைக் காட்டிக் கொடுத்து விடலாம் என்ற திகிலோடு தான் அவன் ஒவ்வொரு நிமிடத்தையும் நிம்மதியின்றிக் கழிப்பான். இவ்வாறு கஷ்டப்படுவதைவிட அந்தக் கூட்டாளியைக் கொன்று விட்டால் ஒரேயடியாகத் தீர்ந்தது தொல்லை. தடயங்களும், ஆதாரங்களும் நிரந்தரமாகவே அழிந்து விடும். இந்தத் திட்டத்தை இலகுவாக செயல்படுத்துவதற்கு விஷமிகளுக்குத் தேவைப்பட்டதெல்லாம் முஸ்லிம்களைச் சீண்டும் விதமாக 13 நிமிடத்தில் ஒரு குறுந்திரைப்படம். படத்தைக் காட்டிக் குட்டையைக் குழப்பி, குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிப்பது போல் பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க தூதுவரையும் அவரது துணைவர்களையும் கொன்று மொத்தத் தடயங்களையும் அடியோடு அழித்ததோடு மட்டுமல்லாமல், அந்தப் பழியை அப்படியே எடுத்து அவர்களது தீவிரவாத நண்பர்களான அல்காயிதா மீது போட்டு, அவர்களது உறவையும் அத்தோடு முறித்துக் கொண்ட இந்தத் தந்திரோபாயம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துப் போட்டது இந்த விஷமிகள் எப்பேர்ப்பட்ட குள்ளநரிகள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் விஷமிகள் நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் இறுதி நோக்கம் :
சர்வதேச முஸ்லிம்களின் உணர்ச்சிகளைக் கிளறி, வன்முறையைத் தூண்டிவிட்டு, அதையே ஒரு காரணமாக உலகுக்குக் காட்டி, முஸ்லிம் நாடுகள் பட்டியலில் அவர்களின் அடுத்த இலக்கைத் தாக்குவது.
சிந்திக்கும் மக்களிடம் இறுதியாக ஒரு கேள்வி. பல நாட்களாகத் தீட்டப்பட்டு வந்த விஷமிகளின் இந்த சதித்திட்டம் ஏன் 2012ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதிலேயே அரங்கேற்றப்பட வேண்டும்? செப்டம்பர் 11 என்னும் இந்தத் திகதிக்கு ஏன் வரலாற்றில் அடிக்கடி முக்கியத்துவம் கொடுக்கப்படுட்டு வருகிறது? இதற்கான பதில் மிகவும் நீண்டது. இன்னுமொரு தொடரில் இன்ஷா அல்லாஹ் இதை ஆராயலாம். அதுவரை காத்திராமல் சுயமாக சிந்தித்து, ஆய்வு செய்து நீங்கள் ஒவ்வொருவரும் இதற்கான விடையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே எனது அவா. அவ்வாறு ஆய்வு செய்யக் கூடிய மக்களாக நம்மில் ஒவ்வொருவரும் என்று மாறுகிறார்களோ, அன்று தான் இந்தக் கட்டுரையை எழுதியதன் அடிப்படை நோக்கம் முழுமையாக நிறைவேறும்.
ILLUMINATI- இல்லுமினாடி களைப்பற்றி விரிவான ஒரு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்,
ReplyDeleteஇந்த திரை மறைவு தீவிரவாதிகள் அவர்கள்தான் என்பதை சிந்திக்கும் சமூகம் அறியட்டுமே